இரத்த சாட்சியாக மரித்த மற்றொரு சமகால தீர்க்கதரிசியின் மரணத்தை எரேமியா தீர்க்கதரிசி பதிவு செய்கிறார். கி.மு 609 முதல் 598 வரை பதினொரு ஆண்டுகள் ஆட்சி செய்த யோயாக்கீம் அரசன் ஒரு பொல்லாத அரசன். எரேமியா, மீகா மற்றும் உரியா ஆகியோர் சமகால தீர்க்கதரிசிகள். "அவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, அவனை யோயாக்கீம் ராஜாவினிடத்தில் விட்டார்கள்; அவன் பட்டயத்தாலே அவனை வெட்டி, அவன் உடலை நீச ஜனங்களின் பிரேதக்குழிகளிடத்திலே எறிந்துவிட்டான் என்றார்கள்" (எரேமியா 26:23).
இறையாண்மை தேவன்:
தீர்க்கதரிசி எரேமியாவின் உயிர் காப்பாற்றப்பட்டது, ஆனால் அவரது சமகாலத்திய உரியா கொல்லப்பட்டார். எரேமியாவைக் கொல்ல ஜனங்களின் கையில் ஒப்புக்கொடாதபடி, செல்வாக்கு மிக்க நபராக இருந்த சாப்பானுடைய குமாரனாகிய அகீக்காம் எரேமியாவை பாதுகாத்தார் (எரேமியா 26:24). ஒரு குயவன் களிமண்ணை வைத்து என்ன செய்யலாம் என்று தீர்மானிக்கிறான். ஆனால் அந்த குயவனைக் கேள்வி கேட்க களிமண்ணுக்கு உரிமை இல்லை (ரோமர் 9:21). எல்லா மனிதர்களின் வாழ்க்கையையும் தேவனே தீர்மானிக்கிறார்.
உண்மையான தீர்க்கதரிசி:
எரேமியாவைப் போலவே, உரியா தீர்க்கதரிசியும் எருசலேம் அழிக்கப்படும் என்று தீர்க்கதரிசனம் கூறினார். மக்களைப் பிரியப்படுத்த விரும்பிய அனனியா (கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி) மற்றும் சிலரைப் போலல்லாமல் அவர் ஒரு உண்மையான தீர்க்கதரிசி (எரேமியா 28). உரியாவும் அனனியாவும் இறந்தார்கள், ஆனால் வித்தியாசங்கள் உண்டு. அனனியா தனது தவறான தீர்க்கதரிசனத்திற்காக இறந்தார், மக்களுக்கு தவறான நம்பிக்கை அளித்து தேசத்தை தவறாக வழிநடத்தினார், அதனால் அனனியாவிற்கு தேவனின் தீர்ப்பு மரணம்; ஆனால் உரியா ஒரு இரத்த சாட்சியாக மரித்தார்.
கொடுமையான மரணம்:
உரியா தீர்க்கதரிசி, ஒருவேளை பொல்லாத அரசனால் தலை துண்டிக்கப்பட்டிருக்கலாம். உரியாவின் உடலை நீச ஜனங்களின் பிரேதக்குழிகளிடத்திலே யோயாக்கீம் எறிந்துவிட்டான். சத்தியத்தைப் பேசியதற்காக யோவான் ஸ்நானகன் தலையும் துண்டிக்கப்பட்டது (மாற்கு 6:14-29).
மரண பயம் இல்லை:
"ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்" (மத்தேயு 10:28) என்று ஆண்டவராகிய இயேசு கற்பித்தார். சரீரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதினால் இந்த பூமியில் உள்ள வாழ்க்கையை மட்டுமே பாதிக்கப்படும், நித்தியத்தின் மீது எந்த அதிகாரமுமே கிடையாது.
அறியப்படாத ஹீரோக்கள்:
வேதாகமத்தில் பெயர் அறியப்படாத பல ஹீரோக்கள் உள்ளனர். நாகமானின் தொழுநோய் குணமாக வழிகாட்டிய அடிமைப் பெண் பெயரோ அல்லது ஐயாயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு உணவளிக்க தனது உணவையும் தானம் செய்த சிறு பையனின் பெயரோ தெரியாது; இப்படி தெரியாத பலர் உள்ளனர். ஆனால் அவர்களின் அன்பின் செயல்களை மறப்பதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே (எபிரெயர் 6:10).
நான் கர்த்தருக்காக தைரியமான மற்றும் வைராக்கியமான சாட்சியா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்