பழங்காலத்திலிருந்தே பல மதங்களின் பண்டிகைகள் அதிக செலவுகளைக் கொண்டது. அதிலும் வெண்ணெய், பால், தேன், பூக்கள் மற்றும் விலங்குகளின் பலியும் அடங்கும். சில சடங்குகளுக்கு மனிதனை கூட தியாகம் செய்வதுண்டு. துரதிர்ஷ்டவசமாக, மக்கள் தங்கள் காணிக்கைகள் மூலம் தேவனை திருப்திப்படுத்த முடியும் என்று நம்பினர். மத ஸ்தலங்கள் மற்றும் கோவில்களில், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் சட்டவிரோத வணிகங்களில் ஈடுபடும் ஊழல்வாதிகள் கூட பெரும் நன்கொடைகளை அளிக்கின்றனர். மோசேயின் நியாயப்பிரமாணத்தில் பண்டிகைகள், கொண்டாட்டங்கள், பலிகள், தசமபாகம், காணிக்கைகள் மற்றும் ஓய்வுநாள் ஆகியவை இருந்தன; இருப்பினும், அவர்கள் ஆவிக்குரிய அர்த்தத்தைத் துண்டித்து, பழக்கவழக்கங்கள், சடங்குகள் மற்றும் மரபுகளை உருவாக்கினர்.
உடைந்த மனமும் நொறுங்கிய இதயமும்:
பழைய ஏற்பாட்டு வழிபாட்டில் மிருக பலிக்கு இடம் இருந்தபோதிலும், தேவன் மனிதனின் இருதயங்களைக் கோரினார் (சங்கீதம் 50). சி.எச். ஸ்பர்ஜன் கூறினார்; “உங்களுக்கும் எனக்கும் மன உளைச்சல் இருந்தால், நமது முக்கியத்துவத்தைப் பற்றிய எல்லா எண்ணங்களும் போய்விடும். ஆக, உடைந்த இருதயத்தால் என்ன பயன்? உடைந்த பானை அல்லது உடைந்த குடம் அல்லது உடைந்த பாட்டிலைப் பயன்படுத்துவது பிரயோஜனமற்றது ஆயிற்றே!”. ஒரு வருந்திய இருதயம் கடினமான அல்லது பிடிவாதமான அல்லது கலகத்தனமான இதயத்திற்கு எதிரானது. ஒரு நொறுங்கிய இதயம் பாவத்தை உணரும் மற்றும் பரிசுத்த ஆவியின் கிரியை உணரும், அது உண்மையான மனந்திரும்புதலை விளைவிக்கிறது.
அன்பா அல்லது மரபுகளா:
துரதிர்ஷ்டவசமாக, பலர் மற்றவர்களை நேசிப்பதை விட மத சடங்குகளை விரும்புகிறார்கள் (ஏசாயா 58:1-9). மத உக்கிரம், சத்தமில்லாத கொண்டாட்டம், ஏராளமான பலிகள் மற்றும் மதத்தைக் குறித்ததான வைராக்கியம் ஆகியவை தேவனால் நிராகரிக்கப்படுகின்றன, குறிப்பாக தேவன் மற்றும் அயலார் மீது அன்பு இல்லாமல் செய்யப்படும்போது பிரயோஜனமில்லையே. சமூகத்தில் அட்டூழியங்கள் அதிகரித்தன, விகிதாச்சாரப்படி மரபுவழி மதமும் அதிகரித்தது.
இரக்கமா அல்லது பலியா:
தேவன் மக்களிடமிருந்து இரக்கத்தை விரும்புகிறார், பலிபீடத்தின் மீது வைக்கப்படும் பலிகளை அல்ல (ஓசியா 6:6). இஸ்ரவேலர் மிருக பலிகளைக் கொண்டுவந்தார்கள், ஆனால் தங்களை ஜீவனுள்ள பலியாகக் கொடுக்கவில்லை (ரோமர் 12:1). அவர்களின் அன்றாட உறவுகளில் இரக்கம் கைவிடப்பட்டது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஓசியாவை மேற்கோள் காட்டி தம்முடைய நாட்களில் இருந்த மதத் தலைவர்களை இரண்டு முறை கண்டித்தார் (மத்தேயு 9:13; 12:7). அவர்கள் தேவனின் அன்பு, விருப்பம், நோக்கம், நேசம், நீதி, பரிசுத்தம் மற்றும் நியாயம் ஆகியவற்றைத் தவறவிட்டார்கள், ஆனால் வெளிப்புற சடங்குகளில் ஒட்டிக்கொண்டனர். அவர்களுக்கு நியாயப்பிரமாணம் தெரியாது அல்லது அவருடைய வார்த்தையை சரியாக விளக்குவதுமில்லை (ஓசியா 4:1). மத ஸ்தலங்களில் இரக்கத்திற்குப் பதிலாக வெறித்தனமும் வன்முறையும் காட்டப்படுகிறது.
எனது ஆவிக்குரிய வாழ்வு தேவனுக்கு வேதனை அளிக்கின்றதா? சிந்திப்போம்.. சரிசெய்து கொள்வோம்..
Author: Rev. Dr. J .N. மனோகரன்