கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்பதாக அநேக ஜனங்கள் வேடிக்கையாக கேட்பதுண்டு. வேதாகமத்தில் உள்ள சிருஷ்டிப்புக் கணக்கின்படி, கோழியை உள்ளடக்கிய பறவைகள் ஐந்தாவது நாளில் உருவாக்கப்பட்டன என்று தெளிவாகக் கூறுகிறது (ஆதியாகமம் 1:20). இதே போன்ற கேள்விகளை சிலர் ஆவிக்குரிய உலகில் கேட்கிறார்கள்; அதாவது ஒரு நபர் பாவம் செய்யும் போது மட்டுமே பாவி என்று அழைக்கப்படுகிறார் அல்லது ஒரு நபர் பாவி, அதனால் அந்நபர் பாவம் செய்கிறார். தாவீது மேற்கோள் காட்டிய முதியோர் மொழிப்படியே, "ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்" (1 சாமுவேல் 24:13).
எல்லோரும் பாவிகள்:
"எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி" (ரோமர் 3:23) விட்டார்கள் என்று வேதாகமம் போதிக்கிறது. விதிவிலக்கு என்பதே இல்லை, ஆதாம் மற்றும் ஏவாளின் சந்ததியினர் அனைவரும் பாவிகள். தேசியம், பாலினம், இனம், கல்வி, நிதி நிலை அல்லது மொழி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களும் பாவிகளே.
பாவத்தின் ஆதாரம்:
ஒரு நபருக்குள் பாவத்தின் மீதான ஈர்ப்பு உள்ளது (மாற்கு 7:15). சோதனை எப்பொழுதும் வெளியில் இருக்கும், ஆனால் ஒரு நபர் தனது இதயத்தில் அதற்கு பதிலளிக்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை. "சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல" (யாக்கோபு 1:13). இதயம் என்பது 24/7 தீய எண்ணங்களையும் பொல்லாத கற்பனைகளையும் உருவாக்கும் தொழிற்சாலை. "எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?" (எரேமியா 17:9).
சிந்தனை அல்லது செயல்:
பொதுவாக ஒருவன் திருடி பிடிபட்டால் அவன் குற்றவாளி. அதே நபர் திருட நினைக்கிறான், திட்டமிடுகிறான், ஒருவேளை திருட முயல்கிறான், அதில் தோற்றும் போகிறான், அவனுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால், அவன் குற்றவாளி அல்ல. எனவே, தற்போதுள்ள சட்டங்கள் அவனை தண்டிக்க முடியாது. இருப்பினும், தேவன் இதயத்தை பரிசோதிக்கிறார் அல்லது மதிப்பிடுகிறார். ஆம், "கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்" (நீதிமொழிகள் 21:2).
நினைத்த பாவங்கள்:
"ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று" (மத்தேயு 5:28). ஆம், பொருள் திருடுவதாக இருக்கட்டும் அல்லது சரீர பிரகாரமான பாவமாக இருக்கட்டும், அது முதலில் மனதில் நிகழ்கிறது.
பத்து கட்டளைகள்:
விபச்சாரம், பொய், திருடுதல், பேராசை போன்றவற்றைக் கட்டளைகள் தடுக்கின்றன. பத்துக் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவது ஆவியில் உறுதியானால் மட்டுமே சாத்தியமாகும். இருப்பினும், மனதிலும், எண்ணங்களிலும், கற்பனையிலும் நடக்கும் கட்டளைகளை மீறுவதை தேவன் அறிவார்.
எழுத்து மற்றும் ஆவி:
எழுத்தின் பிரமாணம் குறைந்தபட்சமே, ஆனால் ஆவியின் பிரமாணத்தைக் கடைபிடிப்பது நோக்கத்தை உள்ளடக்கிய அதிகபட்சமாக உள்ளது.
எனது மனதின் எண்ணங்கள் என்ன?
Author: Rev. Dr. J .N. மனோகரன்