ஏழை ஒருவர் கற்பதற்கு ஆவல் கொண்டு ஒரு பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்கத்தில் இணைந்து பயின்றார். அப்படிப்பை அவர் சிரத்தையுடன் படித்து அங்கு கொடுக்கும் பயிற்சிகளையெல்லாம் சரியாகச் செய்து முடித்தார். கடினமாக உழைத்தார். அனைத்து தேர்வுகளையும் சரிவர எழுதினார். எல்லாம் முடிந்தது; ஆனால், அவருக்கு பட்டப்படிப்புக்கான சான்றிதழ் கிடைக்கவில்லை. பல்கலைக் கழகத்தின் அலுவலகம் சென்று பார்த்தபோது பெயர் விடுபட்டது தெரியவந்தது. அவர் தன்னுடைய அனைத்து ஆவணங்களையும் சமர்பித்தார், ஆனால் அதிகாரிகளால் அவரது பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது பெயருக்கு பதிலாக வேறு சில பெயர் மேலெழுதப்பட்டிருந்தது (இடைச்சொருகல்) என்பது பின்னர் கண்டறியப்பட்டது, அதுமாத்திரமல்ல ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து அவரின் சான்றிதழ் வேறொரு நபருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதைப் பற்றி அந்த ஏழை அதிகாரிகளை எதிர்கொண்டபோது, அதைத் தீர்ப்பதற்கு நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும் என்றும், பல்கலைக்கழகத்தால் எதுவும் முடியாது என்று கூறி விட்டனர். ஆனால் அந்த ஏழை நபரால் நீதமன்றத்தில் சென்று நியாயம் கேட்கமளவு உணர்வு ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ இயலவில்லை. அவரின் எதிர்காலம் இருண்டு போன நிலை. இக்கல்விக்காக செலவழித்த நேரம், உழைப்பு, ஆற்றல், பணம் என அனைத்தும் வேறொருவரால் சூறையாடப்பட்டது.
"இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும் போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து; அவர்களுக்கு எதிரே பாளயமிறங்கி, காசாவின் எல்லைமட்டும் நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும், ஆடுமாடுகள் கழுதைகளையாகிலும் வைக்காதே போவார்கள்" (நியாயாதிபதிகள் 6:3,4). இது போன்ற அநீதியான செயல்கள் தேவனின் கட்டளைகளை மீறுவதாகும் (யாத்திராகமம் 20:2-17).
1) ஆசை:
பேராசை தேவையற்ற மற்றும் சட்டவிரோதமான விருப்பங்களுக்கு வழிவகுக்கிறது. இந்த ஆசைகள் அடுத்தவரின் உடைமையை அபகரிக்க தூண்டுகின்றன. பேராசையினால் ஒரு நபர் தான் விரும்புவதை அடைவதற்கு அது சரியோ தவறோ எதையும் பின்பற்ற தயாராகுகிறார். கல்லூரிப் பட்டம் என்பது ஒரு நல்ல விஷயம் தான், ஆனால் அதை சட்டவிரோதமான மற்றும் நெறிமுறையற்ற வழியில் அதை அடைய நினைத்தால் அது பேராசையின் உச்சமல்லவா.
2) திருட்டு:
ஒருவர் கடுமையாக உழைத்து பட்டம் பெற்றுள்ளார். ஆனால் யாரோ ஒருவர் அவரின் அடையாளத்தை மாற்றியும் பட்டப்படிப்பையும் லஞ்சம் கொடுத்து திருடியுள்ளது எவ்வளவு அநியாயம் அல்லவா. முறையான உரிமையாளராக இருக்கும் ஏழை, ஊழல் அதிகாரிகள் மற்றும் பேராசை கொண்ட சோம்பேறி பணக்காரர்களின் சதியால் இழப்புக்குள்ளாகிறார் என்பது வருத்தமான விஷயம்.
3) பொய் சாட்சி:
ஆவணங்கள் பொய்யாக்கப்பட்டு சான்றளிக்கப்பட்டன. சட்டவிரோதமானவர் கல்வித் தகுதிக்கு சொந்தக்காரர் என்று அதிகாரிகள் பொய் சாட்சியம் அளித்தனர்.
4) கொலை:
அந்த ஏழை நபர் சரீர ரீதியாக உயிரோடு இருந்தார்; ஆனால் அவரின் ஆவி, ஆசை, கனவு, எதிர்காலம் மற்றும் நம்பிக்கை என எல்லாம் கொல்லப்பட்டு ஜடம் போல் ஆனார் என்று தான் சொல்ல வேண்டும்.
என்னால் நீதியையும் நியாயத்தையும் வழிவகுக்க முடிகின்றதா?
Author : Rev. Dr. J. N. Manokaran