சாத்தான் எப்போதுமே தேவ பிள்ளைகளுக்கு எதிராக காரியங்களை நடப்பித்துக் கொண்டே தான் இருப்பான். அதிலும் குறிப்பாக யாரெல்லாம் தேவ சித்தத்தைச் செய்கிறார்களோ அவர்களுக்கு ஒரு போராட்டம் உண்டு. எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற பணிக்கு நெகேமியா தேவனால் அழைக்கப்பட்டிருந்தார். இப்படி ஒரு பணி நடக்கிறது என்பதை அறிந்து எரிச்சலடைந்த சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் வேலையைத் தடுக்க கட்டுப்பாடு பண்ணினார்கள். ஆனாலும் எதிர்ப்பையும் மீறி ஐம்பத்திரண்டு நாட்களில் பணியை நிறைவேற்றினார் நெகேமியா (நெகேமியா 4:8). இன்றும்கூட இந்த எதிர்ப்பு முறைகள் அப்படியே தான் இருக்கின்றன.
1) பகைமையுணர்வு:
"ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான்" என்று அறிந்த போது அவர்களுக்கு மிகவும் கோபமும், எரிச்சலும் மற்றும் அதிருப்தியும் இருந்தது (நெகேமியா 2:10). ஆகையால் அங்கு பயமும் வெறுப்பும் நிறைந்த சூழலை உருவாக்கினார்கள்.
2) பரிகாச உணர்வு:
அவர்கள் நெகேமியாவை கேலி செய்தனர், இகழ்ந்தனர், ஏளனப்படுத்தினர் அல்லது பரியாசம் பண்ணினர். "ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல் மதில் இடிந்துபோகும்" (நெகேமியா 2:19; 4:3) என்றெல்லாம் கூறி அவமானப்படுத்தினர்.
3) பகைக்கான சதியுணர்வு:
அவர்கள் அனைவரும் நெகேமியாவுக்கு எதிராக சதி செய்ய கூட்டுச் சேர்ந்தனர். கொடுமையென்னவெனில், பொதுவாகவே நல்ல நேர்மையான ஜனங்களை எதிர்க்க அநீதியான காரியங்கள் மற்றும் பொல்லாத செயல்கள் செய்யும் மக்கள் மிக விரைவான கூட்டணிகளை உருவாக்குகிறார்கள்.
4) பாசாங்குணர்வு:
"சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று நெகேமியாவைக் கூப்பிட்டார்கள்" (நெகேமியா 6:3). ஆனால் அவர்கள் பொல்லாப்புச் செய்ய திட்டமிட்டிருந்தார்கள் என நெகேமியா தெரிவிக்கிறார். ஆம், சங்கீதக்காரன் சொல்வது போல அவர்கள் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், இருதயமோ யுத்தம் (சங்கீதம் 55:21).
5) படைத்தாக்குதலுணர்வு:
"எங்கள் சத்துருக்களோவென்றால்: நாங்கள் அவர்கள் நடுவே வந்து, அவர்களைக் கொன்றுபோடுமட்டும், அவர்கள் அதை அறியாமலும் பாராமலும் இருக்கவேண்டும்; இவ்விதமாய் அந்த வேலையை ஓயப்பண்ணுவோம் என்றார்கள்" (நெகேமியா 4:11), என்ன ஒரு வில்லத்தனமல்லவா; எதிரிகள் நெகேமியா மற்றும் அவரது குழுவினருக்கு எதிராகத் திட்டமிட்டு அவர்கள் அந்த தாக்குதலை அறியாதளவு அவர்களைத் தாக்கி கொல்லும் அபாயகரமான வாய்ப்பைத் தேடுகின்றனர். சாத்தான் இப்படிதான் அவநம்பிக்கை, சந்தேகம், ஐக்கியமின்மை, பொறுப்பற்றதன்மை, பயம், எதிர்மறையான எண்ணங்கள் எனப் போன்றவற்றைக் கண்டறிந்து கொடூரமாக தாக்க முடியும்.
6) பரஸ்பர உணர்வு:
எதிரிகள் நெகேமியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர், ஒரு ஒப்பந்தத்தை போட்டு சமரசமாக வழி தேடினர். நெகேமியா ஞானமாக அவர்களின் சமரச பேச்சு வார்த்தையை நிராகரித்தார், "நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக் கூடாது, நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன்?". அவர்கள் இந்தப்பிரகாரமாக நாலுதரம் நெகேமியாவிற்கு சொல்லியனுப்பினார்கள். நெகேமியாவும் தன்னுடைய மறுப்பை இந்தப்பிரகாரமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினார் (நெகேமியா 6:3,4)
7) பய உணர்வு:
கூலிக்கு கள்ளத் தீர்க்கதரிசிகளை அனுப்பி பயமுறுத்தினார்கள் (நெகேமியா 6:13). நெகேமியா ஆவிக்குரிய தவறுகளைச் செய்வார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
8) பழி சுமத்தும் உணர்வு:
நெகேமியா ராஜாவாக தன்னை உயர்த்திக் கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுடன் முத்திரை போடாத கடிதத்தை அனுப்பினார்கள் (நெகேமியா 6:5). இது அவரது குழு மற்றும் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக ஏற்படுத்தினார்கள்.
சாத்தானின் தாக்குதல்களை பகுத்தறிந்து எதிர்கொள்வதற்கு நான் சர்ப்பத்தைப் போல வினாவுள்ளவனா?
Author : Rev. Dr. J. N. Manokaran