கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்தவர்களுக்கான அடிப்படை சத்தியம். "ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17) என வேதாகமம் சொல்கிறது. ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் தேவனுக்கு எதிராக பாவம் செய்தார்கள் (ஆதியாகமம் 3). அதற்கு பின்பு அவர்களை பயம், அவமானம் மற்றும் குற்ற உணர்ச்சி ஆட்கொண்டது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் உலகத்தை தம்மோடு ஒப்புரவாக்கி, ஒரு ஒப்புரவாகுதலின் ஊழியத்தை திருச்சபையிடம் ஒப்படைத்தார் (2 கொரிந்தியர் 5:18; ரோமர் 5:1).
பயமா அல்லது பயபக்தியா?
தேவன் ஆதாமையும் ஏவாளையும் சந்தித்தபோது, அவர்கள் பயந்து ஒளிந்து கொண்டார்கள். கலகம் மற்றும் கீழ்ப்படியாமையின் பாவம் அவர்களுக்கு பயத்தையும், வெட்கத்தையும், குற்ற மனசாட்சியையும் ஏற்படுத்தியது. பரிசுத்த தேவனுடைய சந்நிதியில் அவர்களால் நிற்க முடியவில்லை. பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6:23) ஆக, ஏதேன் தோட்டத்திலேயே, ஆதாமும் ஏவாளும் சிலுவையில் அறையப்பட்டிருக்க வேண்டும் . ஆனால் நற்செய்தி என்னவென்றால் கர்த்தராகிய இயேசு பாவத்தைச் சுமந்தார், மேலும் பாவமன்னிப்பைப் பெற எல்லா பாவிகளும் பயபக்தியோடும் விசுவாசத்தோடும் அவருடைய பிரசன்னத்தை அணுகலாம். ஆம், கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம் மற்றும் தீமையை வெறுப்பதற்கான வழிமுறையாகும் (நீதிமொழிகள் 1:7; 8:13).
அவமானமா அல்லது மரியாதையா?
முதல் ஜோடி வெட்கப்பட்டு, அத்தி இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர். ஆனால் இலைகள் அரித்து விரைவில் காய்ந்துவிடும். தேவ ஆட்டுக்குட்டியானவரின் பலி மற்றும் மரணத்தை முன்னறிவிக்கும் பொருட்டாக ஒரு விலங்கின் தோலை அவர்களுக்கு அணிவித்து தேவன் கிருபை பாராட்டினார். நம்பிக்கையுடன் கல்வாரி சிலுவைக்கு வருபவர்கள், அவமானத்தை விட்டு, அவருடைய பிள்ளைகளாக இருக்கும் மரியாதையையும் பாக்கியத்தையும் பெறுவார்கள். "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" (யோவான் 1:12). ஊதாரியான குமாரன் (தண்டனைக்கு தகுதியான குற்றவாளி) ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரவணைக்கப்பட்டு, நல்ல ஆடைகள் அணிவிக்கப்பட்டு, மகனின் அந்தஸ்து கொடுக்கப்பட்டு, கொண்டாட்டம் நடத்தப்பட்டது. விசுவாசிகளுக்கு இரட்சிப்பின் வஸ்திரங்களும், நீதியின் சால்வையும் கொடுக்கப்படுகின்றன (ஏசாயா 61:10; வெளிப்படுத்துதல் 3:17-18).
குற்ற உணர்வா? அல்லது மன்னிக்கப்பட்டதா?
ஆதாமும் ஏவாளும் தேவனுக்கு முன்பாக குற்றவாளிகளாக நின்றனர். விசுவாசத்தோடு சிலுவைக்கு வருபவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்படுவார்கள். ஆம், "இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்" (1 யோவான் 1:7). அவர்கள் இனி பாவிகள் அல்ல, மாறாக தேவனால் அழைக்கப்பட்ட பரிசுத்தவான்கள் அல்லது நீதிமான்கள்.
எனக்கு பயபக்தி, கனம் மற்றும் மன்னிப்பின் நிச்சயம் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்