விருந்தோம்பல் என்பது மூலோபாய ஊழியங்களில் ஒன்றாகும், ஆனால் அது பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட ஊழியம். இந்த புறக்கணிப்பை வேதாகமம் எச்சரிக்கிறது, அந்நியர்களுக்கு விருந்தோம்பல் காட்டுவதன் மூலம், பரிசுத்தவான்கள் தூதர்களையும் உபசரித்திருக்கிறார்கள். (எபிரெயர் 13:2)
கட்டளை: கிறிஸ்தவர்களுக்கு விருந்தோம்பல் என்பது ஒரு கட்டளை. (ரோமர் 12:13) இது ஒரு ஆலோசனையோ அல்லது ஆவிக்குரிய வரங்களில் ஒன்றோ அல்ல. சேவை செய்யும் வரம் விருந்தோம்பலில் இருந்து வேறுபட்டது. (ரோமர் 12:6-8; I பேதுரு 4:11)
கவனிப்பு: விருந்தோம்பல் என்பது, பகிர்ந்து கொள்வதும் கவனிப்பதும் அதாவது, தன்னைப் போல அயலானை நேசிப்பது ஆகும். மற்றவர்களைக் கவனித்துக்கொள்வது எப்போதும் ஒரு சுய தியாகம், இது ஒரு நபர் சுயநலத்திலிருந்து விலகிச் செல்ல உதவுகிறது. அக்கறை காட்டுவது ஒரு நபர் மற்றவர்களைப் பற்றிய உணர்வுடனும், கவனத்துடனும் மற்றும் மற்றவர்களைப் பற்றிய சிந்தையுடனும் இருக்க உதவுகிறது.
ஆணை: விருந்தோம்பல் பிரதான கட்டளையை நிறைவேற்ற உதவுகிறது. ஜெப ஆலயத்தில் அப்பொல்லோ பிரசங்கிப்பதை அகிலாவும் பிரிஸ்கில்லாவும் கேட்டார்கள். அவர் யோவானின் ஞானஸ்நானத்தை அறிந்திருந்தார், ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மேசியாவாக அறிந்திருக்கவில்லை. அந்தத் தம்பதிகள் அவரை அழைத்தனர், அவருக்கு விருந்தோம்பல் காட்டினார்கள், அப்பொல்லோ ஒரு சிறந்த அப்போஸ்தலன் ஆனார். (அப்போஸ்தலர் 18:24-26) உண்மையில், கொரிந்து நகரத்திலுள்ள சபையின் ஒரு பகுதியாக இருந்த பலரை அப்பொல்லோ கர்த்தரிடம் வழிநடத்தினார்.
விலை: விருந்தோம்பல் என்பது தியாகத்துடன் தொடர்புடையது. மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்பது ஒரு நபரின் சில சலுகைகளை தியாகம் செய்வதாகும். அது நேரம், வார்த்தைகள், உணவு, திறன்கள், அறிவு மற்றும் வளங்களாக இருக்கலாம்.
அழைப்பு: அனைத்து சீஷர்களும் சாட்சிகளாக இருக்க அழைக்கப்பட்டுள்ளனர். (அப்போஸ்தலர் 1:8) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருப்பதற்கு தாராளமான உபசரிப்பு ஒரு சிறந்த வழியாகும். கிறிஸ்தவ குடும்பங்கள் ஞாயிற்றுக்கிழமைகளை ஊழிய நோக்கத்தோடு விருந்தோம்பல் பணிக்கு பயன்படுத்தலாம். புதிய விசுவாசிகளை அல்லது கர்த்தரை அறிந்தவர்களை கட்டியெழுப்ப சுவிசேஷத்தை பெற்றுக் கொள்ள அழைக்கலாம்.
குணம்: விருந்தோம்பல் ஒரு நபரை நற்குணசாலியாக உருவாக்குகிறது. முதலாவதாக, இது ஒரு சுய தியாகச் செயல், ஒரு நபருக்கு உதவும் மனப்பான்மையுடன் மற்றவர்களைப் பார்க்க உதவுகிறது. இரண்டாவதாக, பகிர்ந்து கொள்ளும் ஒழுக்கம், ஒரு நபர் திருப்தியடையவும், மற்றவர்களுக்கு உதவும் உபரி மனநிலையை வளர்க்கவும் உதவுகிறது. மூன்றாவதாக, சாதி, மொழி, தேசியம், மதம், கல்வி, வருமானம் ஆகியவற்றில் வேறுபட்டவர்களை ஏற்று நேசிப்பது. நான்கு, இந்த பணியில் முழு குடும்பத்தையும் ஈடுபடுத்துவது குடும்பம் ஒற்றுமையாக இருக்க உதவுகிறது, மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மகிழ்ச்சி அனுபவிக்க உதவுகிறது. ஐந்து, விருந்தோம்பலைக் கடைப்பிடிப்பது கத்தருடைய ராஜ்ஜியத்தை முதன்மைப்படுத்துவதாகும்.
நான் விருந்தோம்பலை அழைப்பாகவும், ஒழுக்கமாகவும், பணியாகவும் பயிற்சி செய்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்