உலகளாவிய வலையில் (World wide Web) தேடல் அல்லது பிற தேடுபொறிகளைப் பயன்படுத்தி எவ்வித விஷயத்திற்கும் இலவசமாக ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள முடியும்; சொல்லப்போனால் அது மலிவானது மற்றும் எளிதானதும் கூட. சாதாரணமான பிரச்சனைகள் முதல் சிக்கலான பிரச்சனைகள் வரை இப்பிரபஞ்சத்தில் பதில்கள் இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், ஆலோசனை அல்லது யோசனைகளை மற்ற பொருட்களை கடைகளில் வாங்குவது போல் வாங்குவது என்றால் அது என்றுமே ஆபத்தே.
ரெகொபெயாம்:
சாலொமோனின் வாரிசாக, ரெகொபெயாம் புத்திசாலியாகவும் விவேகமாகவும் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவன் தந்தைக்கு முற்றிலும் மாறுபட்டவனாக இருந்தான். அவன் தனது அரச சபையில் மூத்த அமைச்சர்களின் ஆலோசனையைப் பெற்றான், ஆனால் மக்களுக்கு சேவை செய்யும் யோசனையை நிராகரித்தான். அவனுடன் வளர்ந்த இளைஞர்கள் அவனை ஆதிக்கம் செலுத்தவும், ஆணையிடவும், வழிநடத்தவும், மற்றவர்களின் ஆலோசனையை கேட்காமல் இருக்கவும் அறிவுறுத்தினர். ரெகொபெயாம் முக்கியமான நேரத்தில் முதியோர் ஆலோசனையைத் தள்ளி முட்டாள்தனமான ஆலோசனையைத் தேர்ந்தெடுத்தான், அதன் விளைவு இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிந்தது (1 இராஜாக்கள் 12:1-17).
அப்சலோம்:
அதிகாரத்தைத் தேடுவதில், அப்சலோம் தாவீதையும் அவனுடைய விசுவாசிகளையும் தலைநகரான எருசலேமிலிருந்து வெளியேற்றினான். அவனுக்கு ஒரு ஆலோசகர் குழு இருந்தது, அவர்கள் முழு அதிகாரத்தையும் பெறவும், அவனது தந்தை தாவீதை தோற்கடிக்கவும் அறிவுறுத்தினர். எப்பொழுதும் பொருத்தமானதும் சரியானதுமான அகித்தோப்பலின் அறிவுரை முட்டாள்தனமாக மாறும்படி தாவீது ராஜா ஜெபித்தான். அப்சலோம் அகித்தோப்பலின் அறிவுரையை நிராகரித்ததன் மூலம் தாவீதின் ஜெபத்தை தேவன் கேட்டார் (2 சாமுவேல் 17:14).
எரேமியா:
அப்போது எரேமியா நாற்பது ஆண்டுகள் ஊழியத்தில் இருந்தார். ஆயினும்கூட, நேபுகாத்நேச்சரால் பாபிலோனுக்கு பெருமளவில் நாடு கடத்தப்பட்ட பிறகு எஞ்சியிருந்த மக்கள் எரேமியாவின் பேச்சைக் கேட்கவில்லை. தேவன் என்ன சொல்கிறார் என்பதை அறிய அவர்கள் விரும்பினர், ஆனால் அவர்கள் ஏற்கனவே எகிப்துக்குச் செல்லத் தீர்மானித்திருந்தனர். கர்த்தர் அவர்களைத் தடைசெய்தபோதும், அவர்கள் எகிப்துக்குச் சென்றார்கள் (எரேமியா 42:7-15). ஆம், எரேமியாவின் ஆலோசனை நிராகரிக்கப்பட்டது.
பாவிகளின் ஆலோசனை:
பாவிகளின் ஆலோசனை மிகத் தாராளமாக கிடைக்கிறது, ஆனால் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நபர் அதை நிராகரிக்கிறான் (சங்கீதம் 1:1). தாமாரின் மேல் ஏக்கங் கொண்டிருந்த அம்னோனுக்கு சிமியாவின் மகன் யோனதாப், தாமாரைக் கற்பழிக்கும்படி அம்னோனுக்கு பொல்லாத அறிவுரை வழங்கினான். முட்டாள் மற்றும் பொல்லாத அம்னோன் அவளை கற்பழித்து, பின்பு வெறுத்து, அவளை அங்கிருந்து துரத்தினான் (2 சாமுவேல் 13).
தேவனுடைய வார்த்தை:
தேவன் ஒரு அற்புதமான ஆலோசகர். (ஏசாயா 9:6). "கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை" (நீதிமொழிகள் 21:30). தேவனுடைய வார்த்தை இருள் நிறைந்த உலகில் பாதையை ஒளிரச் செய்யும் ஒளி மற்றும் ஒவ்வொரு அடிக்கும் வெளிச்சத்தை வழங்கும் விளக்கு. "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங்கீதம் 119:105). வேதாகமத்திலிருந்து கிடைக்கும் பகுத்தறிவு இல்லாமல், கொடுக்கப்படும் அறிவுரை ஒரு ஆபத்தான பேரழிவாக மாறும்.
அவருடைய வார்த்தையிலிருந்து மாத்திரம்தான் நான் ஆலோசனையை நாடுகிறேனா? சிந்திப்போம்
Author: Rev. Dr. J .N. மனோகரன்