வேலைக்காரர்களைப் பற்றிய உவமையை கர்த்தராகிய ஆண்டவர் கற்பித்தார் (மத்தேயு 20:1-16). அவர்கள் உண்மையிலேயே மனமுவந்து வந்த வேலையாட்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களும் அவருடைய திராட்சைத் தோட்டத்தில் விருப்பமுள்ள வேலையாட்களாக/ தன்னார்வத் தொண்டர்களாக/ மனமுவந்து பணி செய்பவர்களாக/ஆத்தும அறுவடை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்வேகம்:
தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு கிளம்பி, கடைத்தெருவில் வந்து நின்றனர், ஏனெனில் அங்கு தான் தினசரி கூலிக்கு ஆட்சேர்ப்பு நடந்தது. அவர்கள் வேலை செய்ய ஆர்வமாக இருந்தனர்; இல்லையென்றால், அவர்கள் (நீதிமொழிகள்: 22:13); (நீதிமொழிகள் :26:13) ல் சொல்வது போல் "வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும்" என்று சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டு தங்கள் வீட்டு படுக்கையில் அல்லவா படுத்திருப்பார்கள். ஆம், பவுல் எழுதுவது போல், தேவனின் அன்பு சீஷர்களை சுவிசேஷம் அறிவிக்கவும் மற்றும் மக்களின் வாழ்க்கையைத் தொடவும் மாற்றவும் நெருக்கி ஏவுகிறது (2 கொரிந்தியர் 5:14).
நம்பிக்கை:
காலையில் முதலில் ஒரு குழு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டபோது, அவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கலாம். ஆனால், அவர்கள் வீடு திரும்பவில்லை. மாறாக, யாரும் பணியமர்த்தவில்லை என்றாலும், அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆம், காத்திருப்பது ஒருபோதும் வீணாகாது, தேவன் நம்மிடம் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் சூழலை ஒழுங்குபடுத்துவதற்கும் நாம் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் காத்திருக்க வேண்டும்.
கருவிகள்:
வேலைக்கு செல்பவர்களிடம் தேவையான உபகரணங்கள் இருக்க வேண்டும். அநேகமாக, அவர்களிடம் புல் அல்லது பயிர்களை வெட்டுவதற்கான விளிம்பு கருவி (பண்ணரிவாள்), கூடைகள் என இருந்திருக்கலாம். குறிப்பிட்ட பணிகளுக்கு குறிப்பிட்ட கருவிகள் தேவை. கருவிகளை வாங்குவது, உருவாக்குவது மற்றும் அதனை பராமரிப்பது என்பது தொழிலாளர்களின் தனிச்சிறப்பு. ஆம், கருவிகள் நன்கு பராமரிக்கப்பட்டு எந்த நேரத்திலும் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும். தேவ பிள்ளைகளுக்கு, தேவ வார்த்தை அருட்பணிக்கான கருவியாகும். நிச்சயமாக, அவர்களிடம் மற்ற கருவிகளும் உள்ளன.
திறமைகள்:
வேலையாட்களுக்கு கருவிகளை எவ்வாறு திறம்பட பயன்படுத்த வேண்டும் என்பது நன்கு அறிந்திருக்க வேண்டும். சிலரிடம் கருவிகள் இருக்கலாம் ஆனால் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான சரியான திறமையும் அணுகுமுறையும் இல்லாமல் இருக்கலாம். ஒரு வாள் அல்லது துப்பாக்கி, சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்றால் கையாளுபவருக்கே அது தீங்கை விளைவிக்கும் அல்லது கொல்லும்.
உடற்தகுதி:
தொழிலாளர்கள் வயலுக்குச் செல்வதற்கும், கடுமையான வெயிலில் கடினமான வேலைகளில் ஈடுபடுவதற்கும், அறுவடைகளை களஞ்சியங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். அது போல, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை முழுமையாக அணிந்துகொள்வது, அவருடைய கிருபையால் நிற்பது மற்றும் இடைவிடாத ஜெபங்கள் என ஆவிக்குரிய காரியங்கள் எல்லாம் தீமையை எதிர்க்கவும் சாத்தானை எதிர்க்கவும் உதவும் (எபேசியர் 6:10-18; யாக்கோபு 4:7).
நீதியுள்ள எஜமான்:
தங்கள் எஜமான் நீதியும் நியாயமுமானவர் என்று வேலைக்காரர்கள் நம்பினர். ஆம், நம் எஜமானாகிய தேவன் நீதிபரர், அவர் அன்பின் உழைப்பை ஒருபோதும் மறக்கமாட்டார். "ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே" (எபிரெயர் 6:10).
நான் கர்த்தருக்காக மனமுவந்து பணி செய்கிறவனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்