20:1 பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.
20:2 வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான்.
20:3 மூன்றாம் மணி வேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு:
20:4 நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள்; நியாயமானபடி உங்களுக்கு கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள்.
20:5 மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான்.
20:6 பதினோராம் மணிவேளையிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.
20:7 அதற்கு அவர்கள்: ஒருவனும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள். நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.
20:8 சாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியக்காரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலி கொடு என்றான்.
20:9 அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
20:10 முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
20:11 வாங்கிக்கொண்டு வீட்டெஜமானை நோக்கி:
20:12 பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலை செய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
20:13 அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா?
20:14 உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்தது போலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.
20:15 என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
20:16 இவ்விதமாக முந்தினோர் பிந்தினோராயும், பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.