தந்தையை காட்டிலும் தங்கள் குழந்தைகளை தாய்மார்கள் அதிகம் நேசிக்கிறார்கள். வேதாகமத்திலும் திருச்சபை வரலாற்றிலும் நல்ல நல்ல தாய்மார்கள் உள்ளனர். ஒரு உதாரணம் மோனிகா, தனது கண்ணீர் பரிந்துரை ஜெபத்தால் புனித அகஸ்டினை மீண்டும் விசுவாசத்திற்குக் கொண்டுவந்தார், அவர் தேவனின் சிறந்த ஊழியராக மாறினார். இருப்பினும், சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை முட்டாள்தனமான விருப்பங்கள் மற்றும் முடிவுகளால் கெடுக்கிறார்கள். அன்பு சில சமயங்களில் தாய்மார்களைக் குருடாக்குகிறது, அதுமாத்திரமல்ல குற்றத்தில் பங்காளிகளாக அல்லது குற்றத்தைத் தூண்டுபவர்களாகவும் மாறுகிறார்கள்.
தவறான முறை:
ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள், அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருந்தன. அவள் இதனை அறிந்துக் கொள்ள தேவனை தேடினாள், அவளுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறக்கும் என்றும், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் (ஆதியாகமம் 25:21-26) என்று கர்த்தர் சொன்னார். இளையவன் ஆதிக்கம் செலுத்துவான் என்ற தீர்க்கதரிசனத்தைப் பற்றி அவள் நம்பிக்கையுடன் இருந்தாள், எனவே அவன் முதற்பேறான உரிமையைப் பெற வேண்டும், அதில் உடன்படிக்கை, வாக்குத்தத்தம், குடும்பத் தலைமை மற்றும் குடும்ப ஆசாரியத்துவம் ஆகியவை அடங்கும். அநேகமாக, ஈசாக்கு அதை நம்பவில்லை போலும். இதற்கிடையில், அப்பத்தையும் பயிற்றங்கூழையும் தனது பிறப்புரிமைக்கு ஈடாக ஏசா விட்டுவிட்டான் (ஆதியாகமம் 25:29-34). இயல்பாகவே, ஆசீர்வாதம் பிறப்புரிமையுடன் செல்கிறது, ஆனால் ஈசாக்கு வேறுவிதமாக நினைத்தான். அவன் ஏசாவை வேட்டையாடச் சென்று நல்ல இறைச்சியைக் கொண்டு வந்து சமைத்துத் தரும்படி கட்டளையிட்டான். உரையாடலைக் கேட்ட ரெபெக்காள் யாக்கோபை ஏசாவாக நடிக்க வைத்து, அவள் சமைத்த இறைச்சியை எடுத்து, பார்வையற்றிருந்த ஈசாக்கிடம் கொடுத்து, ஆசீர்வாதத்தைப் பெறச் செய்தாள். யாக்கோபு பயந்து கவலைப்பட்டான், தான் சபிக்கப்பட்டால் என்ன செய்வது? ரெபெக்காளோ சாபம் தன் மீது இருக்கும் என்று சொன்னாள், ஆனால் யாக்கோபு அவளுடைய சொல்லுக்கு கீழ்ப்படிய வேண்டும் (ஆதியாகமம் 27:13). நோக்கம் நல்லது, ஆனால் வழிமுறையும் செயலும் தீயவை.
தவறான நோக்கம்:
1100 வெள்ளிக் காசுகளைத் திருடியவனை மீகாவின் தாய் சபித்தாள். அந்த வெள்ளிக்காசை திருடியதாக மீகா ஒப்புக்கொண்டான். மீகாவின் தாய் சாபத்தை வரமாக மாற்றி, அதனை கடவுளுக்கு அர்ப்பணித்தாள். எப்படியெனில், 200 வெள்ளிக் காசுகளை ஒரு தட்டானிடம் கொடுத்து வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் செய்தாள். மீகா தனது வீட்டில் ஒரு சன்னதியை உருவாக்கினான், மேலும் கடவுள்களைச் சேர்த்தான், மேலும் அவர்களது மகன்களில் ஒருவனை ஆசாரியாக பிரதிஷ்டை செய்தான் (நியாயாதிபதிகள் 17:1-6). மீகாவின் சிலைகள் டான் பழங்குடியினரால் திருடப்பட்டு டான் நகரில் நிறுவப்பட்டது.
நான் என் பிள்ளைகளை நேர்வழியில் நடத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்