தேவ ஊழியர் ஒருவர் வட இந்தியாவில் உள்ள ஒரு நகரத்தில் பல ஆண்டுகளாக ஊழியங்களைச் செய்து வந்தார். அவர் தினமும் நகரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சிரத்தையுடன் சென்று நற்செய்தியை அறிவித்தார். அந்த நகரத்தில் அருட்பணிக்கான கருத்தரங்கு நடந்தது. அவர் கலந்துகொண்டபோது, அந்த பேச்சாளர் அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:9-10லிருந்து பேசினார்; "இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே; நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; அந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு". இது பவுல் கொரிந்து பட்டணத்தில் இருந்த போது கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம். அந்த நகரம் ஒழுக்கக்கேடு, கருவள சடங்காச்சாரங்கள் மற்றும் கட்டுப்பாடற்ற வாழ்க்கைக்கு பெயர் பெற்றது. பவுல் வாக்குத்தத்தம் பெற்ற பின் சுமார் பதினெட்டு மாதங்கள் அங்கு பணியாற்றினார், அங்கு மிகுந்த பலனைக் கண்டார்.
1) பயப்படாதே:
முதலாவதாக, அவரைச் சுற்றியுள்ள உலகத்தன்மையின் காரணமாக துன்பம். இரண்டாவதாக, மதவெறியால் மூடப்பட்ட ஒழுக்கக்கேட்டின் காரணமாக உக்கிரமாக இருந்த ஆவிக்குரிய யுத்தத்தினால் துன்பமடைந்தார். மூன்றாவது, எதிர்ப்பின் காரணமாக மன உளைச்சல். அத்தேனில், பவுல் கலாச்சார அதிர்ச்சியையும், கொரிந்துவில், தார்மீக அதிர்ச்சியையும் அனுபவித்தார்.
2) பேசு:
நகரத்தில் ஆதிக்கம் செலுத்தும் பெருமை அல்லது மக்கள் தொகை அல்லது பாவம் அல்லது தீய ஆவிகள் ஆகியவற்றால் பவுல் பயப்படக்கூடாது. அவர் தைரியமாக நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.
3) தீங்கு செய்வதில்லை:
ஆண்டவர் கூறினார்; நான் உன்னுடன் இருக்கிறேன். இது முப்பரிமாணமானது: முதலில், கர்த்தருடைய பிரசன்னம் பவுலுடன் இருக்கும். இரண்டாவதாக, தேவன் அவர் மீது அனுதாபம் காட்டுகிறார் அல்லது பரிவு காட்டுகிறார். மூன்றாவதாக, பவுலின் முயற்சிகளுக்கு கர்த்தர் ஒத்துழைப்பார்.
4) அநேக ஜனங்கள்:
நகரங்கள் ஜனங்களால் நிரம்பியுள்ளன. நினிவேயின் முழு நகர மக்களும் மனந்திரும்பி உபவாசித்து ஜெபித்து தங்கள் பாவங்களை விட்டு மனந்திருந்த வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார் (யோனா 3:6-10).
கொரிந்துவைப் பற்றி பவுலுக்குக் கொடுக்கப்பட்ட இந்தச் செய்தி, நகரத்தில் சிரத்தையுடன் ஊழியம் செய்யும் அனைவருக்கும் பொருந்தும் என்று பேச்சாளரான வேதாகம ஆசிரியர் முடித்தார். தேவனின் இந்த ஊழியர் தனது சுற்றுப்புறத்தில் கவனம் செலுத்த ஒரு புதிய முடிவை எடுத்தார். பின்பு இரண்டு ஆண்டுகளுக்குள் எண்பதுக்கும் மேற்பட்டோர் ஞானஸ்நானம் பெற்று அழகான தேவாலயம் கட்டப்பட்டது. ஆம், அருட்பணிக்கான ஆணை மற்றும் பலனளிக்கும் வாக்குத்தத்ததை விசுவாசத்தில் பெற முடியும்.
நான் ஜெபத்துடன் சிரத்தையுடன் ஊழியம் செய்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்