சென்னையில், பல வீடுகளை நாசம் செய்த வெள்ளத்தையும் அதன் அனுபவத்தையும் ஒரு பெண்மணி தொலைக்காட்சியில் பகிர்ந்து கொண்டார். "நான் என் வீட்டை எப்படி வைத்திருந்தேன். தரையில் உள்ள பளிங்கு மற்றும் சுவர்கள், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அதன் வண்ணங்கள் என பார்த்து பார்த்து ரசித்து ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்தேன், பொருத்தமாக அலங்கரித்தேன். பால்கனி (உப்பரிகை) மற்றும் சிட் அவுட்டை (நடைக்கூடம்) கலை ரசனையோடு வடிவமைத்தேன். வீட்டின் உட்புற அலங்காரமும் என் ரசனைக்கு ஏற்றாற்போல் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வீட்டிற்கு திரும்பும்போது, சொர்க்கத்திற்குள் நுழைந்தது போலல்லவா உணர்ந்தேன். விடாத மழையால் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்து அனைத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டதே. ஐயோ என் சொர்க்கம் தொலைந்து விட்டதே. இப்படி ஒரு வீட்டை நான் கட்ட முடியுமா? ஆம், அப்பெண்மணியின் குரலில் நம்பிக்கையின்மையும் வலியும் விரக்தியும் இருந்தது.
ஏதேன் தோட்டம் ஒரு இனிமையான சொர்க்கமாக இருந்திருக்க வேண்டும். முதல் ஜோடிக்காக முழு பிரபஞ்சத்தையும் தேவன் தன் விருப்பப்படி அழகாக வடிவமைத்தார். ஆதாம் ஏவாளுடன் ஐக்கியம் கொள்ளவும் உரையாடவும் தேவன் ஒவ்வொரு நாளும் வந்தார் என்று வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும், ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் தங்களுக்கான அனுபவத்தை ஆண்டவரிடம் விவரித்திருப்பார்கள் இல்லையா! ஆம், பல்வேறு இனங்களைக் கண்டிருப்பார்கள்; அதைக் கண்டு திடுக்கிட்டிருக்க வேண்டும். அந்த இனங்களின் அழகு, நிறம், வடிவமைப்பு, மற்றும் அளவு என அவர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கும். மேலும் அவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய புதிய விஷயங்களைப் பார்த்திருக்க வேண்டும்; அதைப் பற்றியெல்லாம் தேவனிடம் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். ஒருவேளை இப்படி புதிய புதிய விஷயங்களை பற்றிய பேச்சு வரும் போது ஆண்டவர் ஏதேன் தோட்டத்தில் அவர்களுடைய நோக்கத்தையும் அந்த குறிப்பிட்ட பழத்தை உண்ணக்கூடாது என்ற கட்டளையையும் அவர்களுக்கு நினைவூட்டியிருக்கலாம் (ஆதியாகமம் 2:4 முதல் 3:24 வரை).
இப்படி சமயத்தில், ஒரு நாள், ஆதாமும் ஏவாளும் தேவக் கட்டளையை நிராகரிப்பதை முட்டாள்தனமாக தெரிவு செய்தார்கள். அவர்கள் தடைசெய்யப்பட்ட பழத்தை உண்ணத் தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு, தேவனுடனான அன்றாட உரையாடலை விட பழங்களின் சுவை விருப்பமானது போலும். ஒரு வேளை, பாம்பு கூறியது போல் தாங்கள் ‘கடவுள்’ போல் ஆகிவிட்டால், இனி வேலை செய்ய வேண்டியதில்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம். வாழ்க்கை எளிதாகவும் பொழுதுபோக்காகவும் இருக்கும். ஆனால் என்ன பரிதாபம்? அனைத்து மனித இனத்தின் மீதும் சாபம் விழுந்தது. ஆதாமும் ஏவாளும் தங்களுக்குப் பழக்கமான ஏதேன் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
வீட்டை இழந்த மனிதன் மிகவும் கலங்கி, துக்கமடைந்து, வேதனைப்பட்டால்; பரலோகத் தந்தை எவ்வளவு உணர்ந்திருப்பார்? இருப்பினும், விரக்தியான (நம்பிக்கையற்ற) நிலை அவருக்கு இல்லை. ஆம், தேவன் உடனடியாக மீட்பின் செயல்முறையைத் தொடங்கி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் மனிதகுலத்திற்கு வெளிப்படுத்தினாரே.
ஏதேனில் ஆதாம் இழந்ததை நான் பெற்றிருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்