செய்ய வேண்டிய முக்கியமான பணிகளை நாம் மறந்துவிடாதபடிக்கு 'செய்ய வேண்டிய பணிகள்' என்ற ஒரு பட்டியலைத் தயாரிப்பது ஒரு நல்ல யோசனையானதுதான். பட்டியலைத் தவறவிட்டு தோல்வியுற்றவர்கள், காலக்கெடு மறந்து தாமதமானவர்கள், அவர்கள் செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்யாமல் குழப்பமானவர்கள் என சிலர் உண்டு. ஞாபகபுஸ்தகம் என்ற புத்தகம் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது (மல்கியா 3:16). பிற புத்தகங்களைப் பற்றியும் வேதாகமம் சொல்கிறது: அதாவது அது 'ஜீவ புஸ்தகம்'.
சங்கீதக்காரன், “கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார்; நம்மை ஆசீர்வதிப்பார்" என்று எழுதியுள்ளான் (சங்கீதம் 115: 12). தேவன் செய்ய வேண்டிய காரியங்களை நினவுப்படுத்த அவருக்கு டைரியோ அல்லது எலக்ட்ரிக் சாதனமோ தேவையில்லை. தேவன் சர்வ வல்லவர், எல்லாவற்றையும் அறிந்தவர். தேவன் ‘நினைவில் வைத்திருக்கிறார்’ என்றால் அவர் சரியான நேரத்தில் அல்லது அவர் குறித்த நேரத்தில் அல்லது திட்டமிட்ட நேரத்தில் எவ்விதக் குறையுமின்றி சரியாகச் செய்வார் என்று அர்த்தம்.
நோவாவும் அவருடைய குடும்பத்தினரும் பேழையில் இருந்தார்கள், கர்த்தரால் அவர்கள் கதவுகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது. நாற்பது நாளளவும் இரவு பகல் என பலத்த மழை பெய்தது. வெள்ளம் பல நாட்கள் தொடர்ந்தது. நோவாவும் அவரது குடும்பத்தினரும் பேழைக்குள் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்று வியந்திருக்கலாம். ஆனால் தேவன் நோவாவையும் அவனுடைய குடும்பத்தினரையும் எல்லா விலங்குகளையும் நினைவு கூர்ந்தார், வெள்ள நீர் வறண்டு போகும் வகையில் காற்று வீச அனுமதித்தார் என்று வேதாகமம் கூறுகிறது (ஆதியாகமம் 8: 1).
ஆபிரகாம், சோதோம் பட்டணத்திற்காக பரிந்துரை செய்தான். தேவன் ஒரு நீதியுள்ள நீதிபதியாக இருப்பதால் துன்மார்க்கருடன் நீதிமான்களை அழிக்கக்கூடாது என்று ஆபிரகாம் கெஞ்சினான். ஆண்டவர் ஆபிரகாமின் ஜெபத்தை நினைவு கூர்ந்தார், சோதோமின் தீர்ப்பை நிறைவேற்றும்போது லோத்தையும் அவனுடைய குடும்பத்தினரையும் வெளியே கொண்டு வந்தார் (ஆதியாகமம் 19:29).
எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரை விடுவிப்பதாக தேவன் கொடுத்த வாக்குறுதியை நினைவு கூர்ந்தார் (யாத்திராகமம் 2:24). ஆபிரகாமின் சந்ததியினர் நானூறு ஆண்டுகளுக்கு அடிமைகளாக இருப்பார்கள் என்று ஏற்கனவே தேவன் அறிவித்திருந்தார் (ஆதியாகமம் 15:13). தேவன் மோசேயை அனுப்பி இஸ்ரவேல் புத்திரரை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து அவர்களை ஒரு தேசமாக நிலைநாட்டினார்.
நம்முடைய தாழ்வில் நம் தேவன் நம்மை நினைத்திருக்கிறார் என்பது தேவனுடைய அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது (சங்கீதம் 136: 23)..
என்னை நினைத்திருக்கும் தேவனுக்கு நான் என்றும் நன்றியுள்ளவனா/ளா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்