கிறித்தவர்களின் நோன்பு அல்லது விரதம் மேற்கொள்ளும் நாட்களை லெந்து( Lenten days) நாட்கள் என்று வழங்குவர்.
எல்லா சமயங்களிலும் மனிதன் தனது உடலையும் உயிரையும் வருத்தி இறைவனை வழிபடும்வழக்கம் இருந்து வருவது மரபு. இது மனிதன் தான் விரும்பும் காரியங்களை அடைவதற்காக இறைவனை வருந்தி அழைத்து வழிபடும் ஒரு செயலாகக் கருதலாம்.
லெந்து காலம் என்பது இளவேனிற் காலமான வசந்த காலத்தைக் குறிக்கும்ஒரு அழகான சொல். வசந்த காலத்தில் மரஞ்செடிகொடிகள் எல்லாம் தங்களது பழைய இலைகளை உதிர்த்திவிட்டு, புதிய பசுந்தளிர்களைத் துளிர்க்கும் அழகியக் காலம். எங்கும் பறவைகளின் கீச்சொலிகளும் உயிரினங்களின் கூடலும் பூமியை மேலும் வனப்பாக்கி காட்டும் காலமே வசந்தம்.
அவ்வாறே கிறித்தவர்கள் தங்களது பழையப் பாவங்களை விட்டுவிட்டு புதிய நற்பண்புகளைத் தங்களில் ஏற்படுத்தி குற்றமனசாட்சியற்று தூய்மையைத் தரித்துக் கொண்டு தங்களைப் புதுபித்துக் கொள்ளும்காலமாக இதைப்பயன்படுத்துவதால் இக்காலம் லெந்து காலம் என்று அழைக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள கிறித்தவர்கள் இந்த நாட்களை ஆண்டுதோறும் சிறப்பாக கடைபிடிக்கின்றனர். கிறித்தவர்களின் புனிதநூலான விவிலியத்தில் மத்தேயு என்பவர் எழுதிய பகுதியில் (மத்தேயு4:1-10) இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக வாழ்ந்தபோது நாற்பது நாட்கள் உணவு எதுவும் உட்கொள்ளாமல் தன்னை ஆத்துமாவில் பலபடுத்திக் கொண்ட சம்பவம் உள்ளது. அதில் உலகின் தீய சக்தியான சாத்தானை ( Ghost) எவ்வாறு இயேசு தனது அறிவாலும் பலத்தாலும் ஜெயித்தார் எனபதைக் குறித்து தெளிவு படுத்தியுள்ளார்.
சாத்தான் மனிதர்களுக்குள் ஏற்படுத்தும் தவறான தூண்டுதல்களை உணர்ந்து அவற்றிற்கு உடன்படாமல் எதிர்த்துப் போராடி வெற்றிபெற வேண்டும் என்பதை இயேசுவின் முன்மாதிரியான செயல்படாடுகள் உணர்த்துகிறது.
இதன் அடிப்படையில் கிறித்தவர்களில் நிறையபேர் இன்றும் அந்த நாற்பது நாட்களில் தினமும் ஒருவேளை அல்லது இரண்டுவேளை உணவினை தவிர்த்து இறைவேண்டுதல்களில் ஈடுபடுகின்றனர். இன்னும் சிலர் இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினமான வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இந்த விரதத்தைக் கடைபிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் அதிகநேரம் விவிலிய வாசிப்பிலும் தானதர்மங்கள் செய்வதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வோரும் உண்டு. இந்நாட்களில் பெரும்பாலான தேவாலயங்களில் தினமும் அதிகாலை அல்லது மாலை நேரங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இந்த லெந்து நாட்கள் இயேசு உபவாசம் என்று கூறப்படும் விரதம் மேற்கொண்ட காலமாதலால் இதனை தாங்களும் தங்களது ஆடம்பர வாழ்க்கைமுறையினைத் தவிர்த்து எளிமையான வாழ்கை முறையைக் கடைபிடிக்கின்றனர். குறிப்பாக பெண்களுள் சிலர் தலையில் பூக்களால் தங்களை அலங்கரிப்பதில்லை, வாசனைப் பொருட்களை பயன்படுத்துவதில்லை. அவ்வாறே ஆண்களுள் சிலர், இன்றும் முகச்சவரம் செய்து கொள்வதில்லை, ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சிப் பொருட்களை உண்பதில்லை. இவ்வாறு செய்வது தங்களது துயரத்தை இறைவனுக்கு அறிவிப்பதன் அடையாளமாக நம்புகின்றனர்.
தங்களது ஆடம்பர செலவுகளைக் குறைத்து ,அதில் கிடைக்கும் பணத்தை சேகரித்து ஏழைகளுக்கு உதவும் நற்பணிகளை செய்பவர்களும் உண்டு.
ஆரம்பகாலகட்டத்தில் அதாவது கி.பி நான்காம் நூற்றாண்டிற்கு முன்பு இயேசுவின் உயிர்த்தெழுந்த தினம்( ஈஸ்டர்) சிறப்பாக கொண்டாடபட்டுள்ளது. ஈஸ்டருக்கு முந்தின ஞாயிற்றுக் கிழமை முதல் இயேசுவின் மரணத்திற்கு முன்புள்ள ஒருவார காலம் கடந்துவந்த வேதனையான நாட்களை நினைவுபடுத்தும் விதமாக துயரமான நாட்களாக கடைபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஐந்தாம் நூற்றாண்டிற்கு பிறகே நாற்பது நாட்களாக லெந்து நாட்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஒவ்வொரு ஆண்டும் சாம்பல் புதன் என்று அழைக்கப்படும் இளவேனிற்கால தொடக்கத்தில் வரும் ஒரு புதன் கிழமைத் தொடங்கி 40 நாட்கள் இந்த லெந்து நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. இந்த சாம்பல் புதன்கிழமை என்பது ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4 இலிருந்து மார்ச் 10 வரை மாறி மாறி வரும். அதுபோன்றே ஈஸ்டர் ஞாயிரும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரை மாறி மாறி வரும். ஏனெனில் இஸ்ரவேல் நாட்டினர் கொண்டாடும் பாஸ்கா என்னும் வெகு சிறப்பான பண்டிகை நடைபெற்ற வாரத்தில்தான் இயேசு மரித்து அதற்கு அடுத்த வாரத்தின் முதலாம் நாள் காலையில் உயிர்த்தெழுந்தார். இஸ்ரவேலர் எகிப்தியர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி, பாஸ்கா என்னும் பண்டிகையைக் கொண்டாடி புறப்பட்ட அன்று அது ஒரு முழு நிலவு நாளாக இருந்தது. இஸ்ரவேலரின் பண்டிகைகள் அனைத்துமே நிலவை மையமாகக் கொண்டதாகவே இருக்கும். இதற்கான காரணம் இஸ்ரவேலர் நிலவை மையமாக கொண்ட ஆண்டைப் (Lunar Year) பின்பற்றுவது தான்.அந்த முழு நிலவு ஒரு குறிப்பிட்ட நாளில் தோன்றாமல் மாறி மாறி வருவதால் ஈஸ்டர் ஞாயிறும் ஆண்டுதோறும் ஒரே நாளில் வருவதில்லை.
இதற்கிடையில் வரும் 6 ஞாயிற்றுக் கிழமைகளை லெந்து நாட்களில் சேர்ப்பதில்லை. ஞாயிற்றுக் கிழமை மனமகிழ்ச்சியின் நாளாக( விவிலியம்: ஏசாயா 58;13,14) அனுசரிப்பது அவர்களது மரபானதால் அவற்றைக் கழித்துள்ள நாட்களையே தவக்காலமாக கணக்கில் கொள்கின்றனர்.
இறுதியாக வரும் சனிக்கிழமை நாற்பதாவது நாளுக்கு அடுத்தநாள் ஞாயிற்றுக் கிழமையில் இயேசு உயிருடன் எழுந்த ஈஸ்டர் பண்டிகையாக மகிழ்ச்சியோடு மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
Author: Dr. Jansi Paulraj