பெரும்பாலான மக்கள் வேலை செய்யவும் மற்றும் ஓய்வெடுக்கவும் விரும்புகிறார்கள். நவீன உலகில், வார இறுதி ஓய்வுக்காகவும், இளைப்பாறுதலுக்காகவும், வேடிக்கை கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கிற்கான நேரமாகவும் மாறி வருகிறது. இருப்பினும், தேவன் மனிதர்களை இளைப்பாறவும் பின்னர் வேலை செய்யவும் படைத்தார். தேவன் மனிதனைப் படைத்து அவனை ஏதேன் தோட்டத்தில் இளைப்பாறச் செய்தார் என்று ஒரு மொழிபெயர்ப்பு கூறுகிறது (ஆதியாகமம் 2:15). ஆதாமை வெறுமனே வேலைக்காக மட்டும் தோட்டத்தில் வைக்கவில்லை, ஆனால் தோட்டத்தில் ஓய்வு கொடுத்தார். தேவன் ஆறு நாட்களும் வேலை செய்து ஏழாம் நாளில் ஓய்வெடுத்து அதை ஓய்வுநாளாக ஆக்கினார். மனிதன் தனது வாழ்க்கையை ஓய்வில் தொடங்கி பின்னர் வேலை செய்கிறான். வேதாகமத்தின் கண்ணோட்டத்தில் ஓய்வை எவ்வாறு வரையறுப்பது என காணலாம்.
நம்பிக்கை:
ஓய்வு என்பது தேவனை முழுமையாகவும் விசுவாசத்துடன் நம்புவதாகும். ஆதாம் தேவனால் படைக்கப்பட்டான். ஆதாம் தனது வாழ்க்கை தேவனால் கிடைத்த வரம் / பரிசு என்பதையும் அறிந்திருந்தான். இப்போது, அவன் அந்த பரிசு மற்றும் தேவனின் பண்புகளில் ஓய்வெடுக்க முடியும். அதாவது நல்ல தேவன் அவனைப் படைத்து, சரியான சூழலில் வைத்தார்.
மகிழ்ச்சி:
ஆதாம் தனது வேலையைத் தொடங்குவதற்கு முன், தேவ கிரியைகளின் பலன்களை அல்லது அவனுக்காக சிருஷ்டித்ததை அனுபவிக்க வேண்டும். அவன் கூண்டில் அடைக்கப்பட்ட பறவை அல்ல, ஆகையால் மரக் கனிகளை ரசிக்க, அழகைக் காண, வண்ணங்கள், வடிவமைப்பு மற்றும் அமைப்புகளில் வியக்க, ஒலிகளின் இசை மற்றும் பறவைகளின் பாடல்களைக் கேட்க, குளிர்ந்த காற்றை அனுபவிக்க தோட்டத்தைச் சுற்றிச் செல்ல சுதந்திரமாக இருந்தான்.
கொண்டாட்டம்:
நம்மை உருவாக்கி, மீட்டெடுத்து, தேவைகளையெல்லாம் சந்திக்கும் தேவனுக்கு எப்போதும் நன்றியை வெளிப்படுத்துதல் என்பது மிக முக்கியம். கொண்டாட்டமும் மனநிறைவின் வெளிப்பாடுதான். ஆம், போதும் என்கிற மனதுடன் கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் (1 தீமோத்தேயு 6:10).
முன்னுரிமை:
ஆதாம் அனுபவித்த முதல் ஓய்வுநாள், உறவுகளின் முன்னுரிமையைப் புரிந்துகொள்ள அவனுக்கு உதவியது. அவனது முதல் மற்றும் முக்கிய உறவு தேவன். மற்ற அனைத்து உறவுகளும் இரண்டாம் நிலை. குடும்ப உறவுகளான; வாழ்க்கைத்துணை, பெற்றோர், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் தெய்வீக உறவுக்குக் கீழ்ப்பட்டவர்கள், தேவனே முதலிடம், மற்ற உறவுகள் அதற்கு அடுத்ததே.
நோக்கம்:
ஓய்வுநாளில் தொடங்கி, ஆதாம் வேலைக்காக அல்ல, நாம் தேவனுக்காக படைக்கப்பட்டிருக்கிறோம் எனப் புரிந்துகொண்டான். பலர் தங்கள் வாழ்க்கையில் தேவனின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாததால் தான் வேலை வேலை என தங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துபவர்களாக மாறுகிறார்கள்.
ஆயத்தம்:
ஓய்வெடுப்பது நன்கு திட்டமிடுவதற்கும் ஆயத்தமாவதற்கும் ஆன ஒரு மனநிலையை வழங்குகிறது.
ஓய்வின்மை:
ஓய்வு இல்லாமல் வேலையை (ஆவிக்குரிய அல்லது புனிதமான அல்லது மதச்சார்பற்ற) தொடங்கும் போது, பதற்றம், பீதி, பயனற்ற தன்மை மற்றும் அழிவு கூட உள்ளது.
நான் சரியானபடி ஓய்வுநாளில் ஓய்வெடுத்து வேலை செய்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்