ஒரு கிராமத்தில், ஒரு நற்செய்தி குழு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கச் சென்றது. கிராமத்தில் இருந்த சில இளைஞர்கள் வந்து, தங்கள் கிராமத்தில் பிரசங்கிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அப்போது நற்செய்தி குழுவில் இருந்த ஒருவர், “பிரசங்கிப்பது எங்களது அரசியலமைப்பு உரிமை. நாங்கள் பிரசங்கிப்போம்” என்றார். அதற்கு இளைஞர்கள் சொன்னார்கள்; “உங்களை பிரசங்கிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அப்படி நீங்கள் மீறி உபதேசம் செய்தால், உங்கள் வாகனத்தையும் மற்ற பொருட்களையும் அழித்து விடுவோம்” என்றார்கள். நற்செய்தி குழுவைச் சேர்ந்த மற்றொருவர்; “எங்களைத் தடுக்க நீங்கள் யார்? நாங்கள் பிரசங்கிப்போம்” என்று கத்தினார். கிராமத்தார் கோபம் கொண்டு இளைஞர்களுடன் சேர்ந்து அவர்கள் வாகனத்தை அடித்து நொறுக்கினர், நற்செய்தி தாள்களை வீசினர், இசைக்கருவிகளை உடைத்தனர். இறுதியில் நற்செய்தி குழு அங்கிருந்து உயிருடன் தப்பித்தால் போதும் என ஓட வேண்டியிருந்தது.
அப்போஸ்தலர்களுக்கான அறிவுரைகள்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பன்னிரண்டு சீஷர்களை இரண்டு இரண்டு பேர் கொண்ட குழுவாக அனுப்பியபோது, அவர் அவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அதில் ஒரு அறிவுரை என்னவென்றால்; "எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக்கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள்" (மாற்கு 6:11).
உரிமைகளை கைவிடவா?
ரோமானிய குடிமகனாக தனக்குள்ள உரிமைகள் பற்றி பவுல் அறிந்திருந்தார். பிலிப்பி பட்டணத்தில், அவரும் சீலாவும் சிறையில் தள்ளப்பட்டபோது அந்தச் சட்டப்பூர்வ உரிமையைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் தீர்மானித்தார். இது பின்பதாக ஜெயிலர், அவரது குடும்பத்தினர் மற்றும் பிறரின் மனமாற்றத்திற்கு வழிவகுத்தது (அப்போஸ்தலர் 16:25-31). சில சமயங்களில், தேவனுடைய ஆவியின் வழிநடத்துதலின்படி, உரிமைகளையும் சலுகைகளையும் கைவிடுவது ஞானமானது.
உரிமைகளைப் பயன்படுத்தவா?
மற்ற சந்தர்ப்பங்களில், அதாவது எருசலேம் ஆலயத்தில் இருந்து கைது செய்யப்பட்ட பின்னர் அவர் சவுக்கால் அடிக்கப்பட இருந்தபோது ரோமக் குடிமகனாக பவுல் தனது உரிமைகளைப் பயன்படுத்தினார். பின்னர் செசரியா நீதிமன்றத்தில் பெஸ்து முன்பதாக, ஆலோசனை சங்கத்தின் முன் விசாரணைக்காக எருசலேமுக்கு செல்ல விரும்பவில்லை என இராயனிடம் முறையிட்டார் (அப்போஸ்தலர் 21:36-37; 25:10-11).
ஆவிக்குரிய பகுத்தறிவு:
ஒவ்வொரு சூழ்நிலையிலும் சட்டரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எப்போது, எப்படி, என்ன செய்ய வேண்டும் என்ற ஆவிக்குரிய பகுத்தறிவு அவசியம். பிலிப்பியில் தனது உரிமைகளை விட்டுக் கொடுக்க எடுத்த முடிவால் ஜெயிலர் மற்றும் குடும்பத்தை ஆண்டவருக்குள் கொண்டு வர வழிவகுத்தது. தேவன் தம் மக்களைத் தம்முடைய நோக்கத்திற்காகத் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்காக அழைக்கலாம் என்பதை புரிந்து கொள்வோம்.
தேவ நாம மகிமைக்காக என்னுடைய சிலாக்கியங்களை ஞானமாகப் பயன்படுத்த எனக்கு விவேகம் இருக்கிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்