கிறிஸ்தவ ஆவிக்குரிய வாழ்க்கைக்கு செவிசாய்த்தல், கவனித்தல் மற்றும் உற்றுக்கேட்டல் ஆகியவை மிக முக்கியம்.
தேவன் சொல்வதைக் கேளுங்கள்:
சிறுவன் சாமுவேல் தன் பெயர் அழைக்கப்படுவதைக் கேட்டதும், அவனுடைய பாதுகாவலரும் ஆசாரியனுமான ஏலியிடம் ஓடினான். தேவனின் குரலைக் கேட்க ஏலி அவனுக்கு உதவினார் (1 சாமுவேல் 3:9). மதச்சடங்குகள் மற்றும் வழிபாடு செய்வதைத் தவிர, சாமுவேல் தேவனுக்குச் செவிசாய்க்க கற்றுக்கொண்டார்.
சீஷனுக்கான தகுதி:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷராக இருப்பதற்கான முக்கியமான தகுதிகளில் ஒன்று கவனித்து கேட்பதாகும். "என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது" (யோவான் 10:27). பலவித குரல்கள் மற்றும் அநேக சப்தங்கள் மத்தியிலும் ஆடுகளால் மேய்ப்பனின் குரலைப் பகுத்தறிந்து கவனிக்க முடியும்.
இரண்டு முறை கேளுங்கள்:
“தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே" (சங்கீதம் 62:11). இது ஒரு புதிர். கேட்பது மட்டும் போதாது என்று இது அர்த்தப்படுத்தவில்லை, கேட்டதோடு விட்டுவிடாமல் அதை வாழ்வில் அப்பியாசப்படுத்தி அனுபவிப்பதன் மூலம் அவரின் சத்தத்தை உறுதி செய்ய முடியும். எப்படியென்றால் இது மனதில் கேட்டு; இதயத்தில் செவிசாய்த்தல் (கீழ்ப்படிதல்) என்றும் பொருள்படும்.
கேட்காததற்காக கண்டித்தார்:
சபை வரலாற்றில் பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு மிகப்பெரிய உரையாடலை தவறவிட்டனர். ஆம், மறுரூபமலையில் மூவரும் விழித்திருந்து, கேட்டு, கற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோது தூங்கினர். மேலும் கர்த்தராகிய இயேசு "மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி, அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள்" (லூக்கா 9:30-32). மூவரும் எழுந்ததும், பேதுரு உரையாடலின் சூழலோ உள்ளடக்கமோ தெரியாமல் பேச ஆரம்பித்தான். அதனால் அவன் பிதாவிடமிருந்து நேரடியாக ஒரு கடினமான கண்டனத்தைப் பெற்றான். "இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று" (மத்தேயு 17:5).
கேட்பது ஞானத்தின் ஆதாரம்:
"உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்"
(நீதிமொழிகள் 19:20). கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்பவன், கற்பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடப்படுகிறான் (மத்தேயு 7:24-27).
மற்றவர்கள் சொல்வதைக் கேட்பது:
கிறிஸ்தவர்களாகிய நாம் செவிசாய்க்க வேண்டும். குடும்பம் மற்றும் சமூக வாழ்வில் உள்ள பல உறவுப் பிரச்சனைகளை கேட்பதன் மூலம் எளிதில் தீர்க்க முடியும். கேட்பதன் மூலம், நாம் அக்கறை காட்டுகிறோம், சகோதர சகோதரிகளின் சுமைகளை குறைப்பதற்கு உதவுகிறோம் (கலாத்தியர் 6:2).
நான் கவனித்து கேட்கும் நபரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்