யோபு தனது உடல்நலம், செல்வம், குடும்பம் மற்றும் சமூக அந்தஸ்து என கடுமையான இழப்பைச் சந்தித்தான். யோபு நீதிமான் என்பதாக எசேக்கியேலால் அறிவிக்கப்பட்டான் (எசேக்கியேல் 14:14). தான் குற்றமற்றவன் என்று யோபு பிடிவாதமாக வாதிட்டாலும், பின்பதாக தான் அறியாமல் பேசின வார்த்தைகளுக்காக மனந்திரும்பி ஒப்புக்கொண்டான் (யோபு 42:1-6).
1) தேவ வல்லமை:
உம்மால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும், சர்வவல்லமையுள்ள தேவன் சிருஷ்டிப்பில் தனது வல்லமையைக் காட்டினார் என யோபு கூறினான். சிருஷ்டிப்பைக் கவனித்த யோபு, சிருஷ்டிகரான தேவனைப் பற்றி சிந்திக்கத் தவறிவிட்டான். கூடுதலாக, ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தேவ பிரசன்னம் யோபுவிற்கு ஆறுதல் அளித்தது.
2) தேவ நோக்கம்:
தேவனின் திட்டங்களை அல்லது நோக்கங்களை முறியடிக்க எவராலும் முடியாது என யோபு ஒப்புக் கொண்டான். தேவன் மனித விவகாரங்களில் ஈடுபாட்டோடும், வரலாறிலும் மற்றும் நிச்சயமான நோக்கங்களையும் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் அதை நிறைவேற்ற இயற்கையையும் மனிதர்களையும் கட்டுப்படுத்தி தன்னுடைய முழுமையான வல்லமையை செலுத்த வல்லவராயிருக்கிறார். பிகெமோத் மற்றும் லிவியாதான் (யோபு 40 & 41) போன்ற விலங்குகள் உட்பட அனைத்து படைப்புகளும் அவரது கட்டுப்பாட்டில் உள்ளன, அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுகின்றன.
3) போதிய அறிவின்மை:
யோபு தான் புரியாமாலோ, அறியாமாலோ மற்றும் தனக்குத் தெரியாததை பேசியதாக யோபு ஒப்புக்கொண்டான். பின்பு, அவன் புலம்பினான், மனங்கசிந்து அலப்பினான் மற்றும் நண்பர்களுடன் ஆக்ரோஷமாக விவாதம் செய்தான்.
4) மிக அற்புதம்:
யோபு தேவனையோ, அவருடைய வல்லமையையோ, நோக்கத்தையோ அறியவில்லை என்று யோபு ஒப்புக்கொண்டான். அவனுக்குத் தெரிந்தது போதுமானதாக இல்லை என்றும் ஒரு வரையறுக்கப்பட்ட மனதுடன் அற்புதமான தேவனைப் புரிந்துகொள்ள முடியவில்லை எனவும் கூறினான். அப்படி எதையும் அறியாத போதும் ஆனால் கர்த்தரை மட்டும் அறிந்ததில் மனநிறைவு அடைந்தான். சங்கீதக்காரனாகிய தாவீதும் இதைப் போலவே கூறியுள்ளான் (சங்கீதம் 131).
5) தேவ பிரசன்னத்திற்கு நன்றி:
தன்னுடைய இன்னல், வேதனை, துன்பம் மற்றும் தனிமையிலும் தேவன் தன்னோடு இருந்ததாக யோபு ஒப்புக்கொண்டாலும் தாவீது உணர்ந்ததைப் போல யோபு ஆரம்பத்தில் அறியவில்லையே. தாவீது; "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" (சங்கீதம் 23:4) என்றான்.
6) தன்னை இகழ்ந்துகொள்தல்:
யோபு, தான் தகுதியற்றவன், தேவனின் பரிசுத்த பிரசன்னத்தில் தான் பாவி எனவும், அவருடைய இரக்கத்திற்குத் தகுதியற்றவன் என்றும் அறிக்கை செய்தான். யோபு சுய சாபம், மரிப்பதில் விருப்பம், தேவனுக்கு எதிரான புகார்கள் மற்றும் சவால்கள், விரக்தி மற்றும் தனது புத்திக்கு எட்டாத காரியத்தைப் பற்றி பேசினது என தன் வாயின் வார்த்தைகளைக் குறித்து மனஸ்தாபப்பட்டான்.
7) பணிவு மற்றும் கீழ்ப்படிதலைக் காட்டுதல்:
யோபு தூளிலும் சாம்பலிலும் உட்கார்ந்து தன் தாழ்மையான மனப்பான்மையை வெளிப்படுத்தினான். யோபு தன் நண்பர்களுக்காக ஆசாரியனாக இருப்பதற்கும், பலி செலுத்துவதற்கும், அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கும் என கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தான்.
யோபு செய்தது போல் நான் தேவனை சரியாக அறியாமல் புரியாமல் இருந்ததற்காக மனஸ்தாபப் படுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்