எரேமியா (கிமு 650-570) கண்ணீரின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்டார். எரேமியா கிமு 626 இல் தனது ஊழியத்தைத் தொடங்கினார். இள வயதினன் என்று தயக்கம் காட்டினாலும், தேவன் அவரை அழைத்து தேசங்களுக்கு தீர்க்கதரிசியாக நியமித்தார்.
1) எச்சரிக்கை:
எரேமியா யூதா தேசத்தை பாவங்களிலிருந்தும் பாசாங்குத்தனத்திலிருந்தும் மனந்திரும்பும்படி அழைத்தார். “நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி, பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?" (எரேமியா 7:9-10).
2) முன்னறிவிக்கப்பட்ட நாடுகடத்தல்:
தேவன் நேபுகாத்நேச்சாரின் கீழ் வடக்கிலிருந்து பாபிலோனியர்களை அனுப்புவார் என்றும் யூதர்களை பாபிலோனுக்கு சிறைபிடித்துச் செல்வார் என்றும் எரேமியா தீர்க்கதரிசனம் கூறினார். "இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்; இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்" (எரேமியா 25:11).
3) பாழடைந்த நகரத்திற்காக புலம்புதல்:
முன்னறிவித்தபடி நேபுகாத்நேச்சார் வந்தான்; எருசலேம் நகரம் அழிக்கப்பட்டது. அவர் எருசலேமின் அழிவுக்காக புலம்பினார் மற்றும் எருசலேமின் மகிமையான நாட்களையும் பாழடைந்த எருசலேமையும் ஒப்பிடுகிறார். ஆனாலும் அந்த புலம்பல்களுக்கு மத்தியிலும், தேவனின் மாறாத கிருபையையும் உறுதியான அன்பையும் அவர் நினைவுகூருகிறார், அது ஒருபோதும் நிர்மூலமாகாது (புலம்பல் 3:21-23).
4) கைதிகளுக்கு கடிதம்:
பாபிலோனில் இருந்த யூத மக்கள் மிகவும் வருத்தப்பட்டனர், மனம் நொந்தனர். அவர்களுக்கு கோபமும், எரிச்சலும், பழிவாங்கும் மனப்பான்மையே அவர்களது மனநிலையாக இருந்தது (சங்கீதம் 137). அவர்களுக்கு எரேமியா ஒரு கடிதம் எழுதுகிறார், அதாவது அவர்கள் எழுபது வருடங்கள் முடியும் வரை காத்திருக்கவோ அல்லது செயலற்றவர்களாகவோ இருக்க வேண்டாம் என்றும், ஆவிக்குரிய காரியங்கள், சமூகம், உணர்வுகள், குடும்பம், பொருளாதாரம் போன்ற வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பலுகி பெருக வேண்டும் என்றும்; அதே சமயம் கவனமாக இருக்கச் சொல்லியும் எழுதுகிறார் (எரேமியா 29).
5) நம்பிக்கையின் செய்தி:
இஸ்ரவேலை மீட்டு வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு தேவன் மறுபடியும் அவர்களை எவ்வாறு கொண்டு வந்து சேர்ப்பார் என்பதை எரேமியா விவரித்தார் (எரேமியா 31:10-11).
6) பாபிலோன் மீதான தீர்க்கதரிசனம்:
பாபிலோன் ஐப்பிராத்து நதியில் எறியப்பட்ட கல்லைப் போல இருக்கும் என்றும் எரேமியா முன்னறிவித்தார் (எரேமியா 51:63).
7) மக்களுடன் அடையாளம் காணப்பட்டவர்கள்:
யூதேயாவில் பாபிலோனியர்கள் விட்டுச்சென்ற எல்லா இராணுவச் சேர்வைக்காரரும், கரேயாவின் குமாரனாகிய யோகனானும், ஓசாயாவின் குமாரனாகிய யெசனியாவும், சிறியோர் முதல் பெரியோர்மட்டும்மான சகலஜனங்களும் சேர்ந்துவந்து எரேமியாவிடம் அவர்கள் எகிப்துக்குச் செல்ல வேண்டுமா? என தேவனுடைய சித்தத்தைக் கண்டுபிடிக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் எகிப்துக்குப் போவதைக் குறித்து கர்த்தர் தெளிவாக எச்சரித்தார், ஆனால் அவர்கள் சென்றது மாத்திரமல்லாமல், எரேமியாவையும் அவர்களுடன் அழைத்துச் சென்றார்கள் . அநேகமாக, எரேமியா அங்கேயே இறந்திருக்கலாம்.
அவர் தேவனின் செய்தித் தொடர்பாளராக இருந்தார், ஆனால் அவருடைய கீழ்ப்படியாத மற்றும் கலகக்கார மக்களுடன் துன்பப்படுவதற்கு தயாராக இருந்தார்.
தேவ மக்களிடம் நான் அனுதாபம் காட்டுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்