புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் நல்ல ஆற்றல்மிக்க சிறுவன், அதே வகுப்பைச் சேர்ந்த ஒரு சிறுமியின் தாய் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடுத்ததால் உயிரிழந்தான். காவல்துறை விசாரணையில், இறந்த சிறுவன் வகுப்பில் எப்போதும் முதல் மதிப்பெண் எடுப்பதால் தன் மகள் அவனுடன் போட்டியிட முடியாமல் போனதாகவும் அந்த சிறுமியின் தாய் அச்சிறுவனின் மீது கோபத்துடனும், பொறாமையுடனும், மேலும் மன அமைதியின்றியும் இருந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது; ஆக இதற்கு ஒரே தீர்வு போட்டியாளரை சாகடிப்பதா!!?? (என்டிடிவி செப்டம்பர்5, 2022)
பேராசை:
பத்தாவது கட்டளை "பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக" (யாத்திராகமம் 20:17) என்கிறது. இந்த பெண் தன் வாழ்க்கையில் கடவுள் தனக்கு அளித்திருக்கும் மகளால் திருப்தி அடையவில்லை. அவள் தனக்கு புத்திசாலியான அல்லது திறமையான குழந்தைகளை விரும்பினார், மேலும் தனது மகள் மற்றவர்களைப் போல அல்லது திறமையானவளாக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
பெருமையும் புகழும்:
சில பெற்றோர்களுக்கு சுயமதிப்பு என்பது இல்லை; அவர்கள் தங்கள் குழந்தைகளின் சாதனைகளில் தங்களை பெருமைப்படுத்திக் கொள்ள எண்ணுகிறார்கள். இது குழந்தையின் முன்னேற்றம் அல்லது நலன் அல்லது எதிர்காலத்தைப் பற்றியது அல்ல, மாறாக தங்களின் சுயநலப் புகழுக்காக மட்டுமே.
பொறாமை:
இந்த விஷயத்தில், தனது மகள் வகுப்பில் முதலாவதாக வருவதற்கு இடையூறாக இருக்கும் சிறுவனைப் பார்த்து பார்த்து இந்த பெண்மணி பொறாமை கொண்டுள்ளார். மகளை ஊக்குவிப்பதற்கோ அல்லது பயிற்றுவிப்பதற்கோ பதிலாக, அந்த பையனையே இல்லாமல் ஆக்கிவிட முடிவெடுத்தாள். காயீனும் தன் சகோதரன் ஆபேலின் நீதியையோ அல்லது தேவபக்தியின் தரத்தையோ அளவிட முடியாதவனாய் அவனை ஒழித்தே போட்டான் (ஆதியாகமம் 4).
கோபமும் அநீதியான பழிவாங்கலும்:
அந்தப் பெண், தன் மகள் முதலாவதாக வர இயலவில்லையே என்ற ஆதங்கமும் இயலாமையும் கண்டு எரிச்சலும் கோபமும் அடைந்தவளாய் வகுப்பில் முதலாவதாக வந்த அப்பாவி பையனை பழிவாங்க நினைத்தாள். தன் மகளின் வெற்றிக்குத் தடையாக அவனைப் பார்த்தாள்.
கொலை:
அந்த பெண்ணின் தாய் கொல்ல சதி திட்டம் தீட்டினாள்; குளிர்பானத்தில் விஷம் கலந்ததாள். பின்பு சிறுவனின் உறவினராக பள்ளிக்கு வந்து பாதுகாவலர் மூலம் பையனிடம் கொடுத்தாள். சிறுவன் குடித்துவிட்டு வாந்தி எடுக்க ஆரம்பித்தான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான், சிறிது நேரத்தில் மரித்துப் போனான்.
ஆவேசம்:
இன்றைய இளைய தலைமுறையினரிடையே வெற்றி, புகழ் மற்றும் செழுமைக்கான வெறித்தனமான உந்துதல் அல்லது தீராத ஆசை உள்ளது. மேலும் அந்த இலக்கை அடைய எந்த தார்மீக கட்டுப்பாடுகளும் வைத்துக் கொள்வதில்லை. இத்தகைய இலக்குகளை நோக்கிய பயணத்தில் அல்லது சிந்தனையற்ற உந்துதலில் அவர்களைப் பொறுத்தவரை எல்லாம் நியாயமானதே.
வெற்றி மற்றும் புகழ்க்கான பசி இளம் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான இலக்குகள் என்பதை நன்கு அறிவோம்.
வெற்றி மற்றும் புகழ் மீது எனக்கு தீராத பசி உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்