டிக்டிக்....... என்று ஓடிக்கொண்டிருந்த உணர்ச்சியற்ற அந்த சுவர் கடிகாரத்தில் மணி ஐந்தடித்தது! உணர்சியலைகளில் அலைமோதிய சத்தியசீலன் இதயமோ படபடவென அடித்துக் கொண்டிருந்தது. தன் முன்னிருந்த பைல்களை வேகமாக மூடி வைத்துவிட்டு தன் இருக்கையைவிட்டு எழுந்து விரைவாக நடக்க ஆரம்பித்தார்! அவர். இதயம் காலையிலே தன்
மனைவி சாந்தா மொழிந்த சாந்தமற்ற வார்த்தைகளை அசைபோட்டுக் கொண்டிருந்தது.
சத்தியம்....... சத்தியம்ன்னு பேசிக் கொண்டிருந்தா சமாதிக்கே போயிட வேண்டியதுதான். இவ்வளவு நாள் அந்தக் கம்பெனிக்காக உழைத்தார்களே! உங்களுக்கு என்ன கிடைத்தது? இப்ப அதிஷ்டம் வீடு தேடி வந்திருக்கு! மலையாட்டம் பெண்ணை வைச்சிகிட்டு இன்னும் நீங்க உங்க விருப்பப்படி நடந்துக்கிட்டிருந்தீங்க.... நான் கயிற்றிலே தொங்கிவிடுவேன்! அப்படியாவது எனக்கு நிம்மதி கிடைக்கட்டும்! இன்று மாலை எனக்கு முடிவு தெரியணும்!” சத்தியசீலனால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை! மனைவியின் குரலும், மனச்சாட்சியின் குரலும் மோதிக் கொண்டிருந்தன! வீட்டினுள் நுழைந்த சத்தியசீலனை எதிர்பார்த்து நின்றிருந்த மனைவியைப் பார்த்தார்.
“நாளை மாப்பிள்ளை வீட்டிற்குப் போவோம்” வார்த்தைகள் வெளிவந்தன. கதிரவனைக் கண்ட கமலம் போல் சாந்தாவின் முகம் மலர்ந்தது!” இந்த வீட்டுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது” மகிழ்ச்சியால் அவள் கூவவும், பள்ளிக்குச் சென்றிருந்த அவள் கடைசி மகள் பிரிஸ்கில்லாள் வசந்தி வரவும் சரியாக இருந்தது!
“என்னப்பா! அம்மா திடீர்ன்னு குடு குடுப்பைக்காரன் ஆகிட்டாங்க!” சத்தியசீலன் தன் மகளைப் பார்த்தார். களைப்போடு வந்தாலும் களையாகத் திகழும் அந்த முகமும், களைகளே (குறைகளே) இல்லாத அருமையான அகமும் அதில் பொங்கும் இறைபக்தியும், கல்வியில் அவள் பெற்ற B.Sc., B.Ed., பட்டமும்,” ஆற்றலில் அவள் பெற்ற ஆசிரியப் பணியும் அவளுக்கு ஒரு நல்ல மணமகனைத் தேடித்தருவதில் தோற்றுவிட்டனவே! பணம்! பணம்! அது ஒன்றுதானே தேவையாயிருக்கிறது! வேதனையில் அவர் உள்ளம் விம்மியது!
“அப்பா! என்னப்பா யோசனை?” என்று கேட்டாள் வசந்தி.
“ஒன்றுமில்லையா! நாளைக்கு மாப்பிள்ளை வீட்டுக்குப் போற மகிழ்ச்சி உங்கம்மாவிற்கு!” என்றார் சத்தியசீலன்.
“என்னப்பா! மாப்பிள்ளை விலை குறைஞ்சு போச்சா?” சிரித்துக் கொண்டே கேட்டாள் வசந்தி.
“அது எப்படிக் குறையும்? மாப்பிள்ளை பேங்க் இல் வேலை பாக்கிறார்! கைநிறைய சம்பளம்!” என்ற சாந்தா, தன் மகளை அணைத்துக் கொண்டாள்.
“வரதட்சணைக்கு ஆண்டவர் வழி திறந்திட்டடாரம்மா” என்றாள். தாயின் உள்ளமல்லவா? அங்கு மகிழ்ச்சி பொங்கியது.
ஒரு கணம் துணக்குற்றாள் வசந்தி! சில நாட்களாக வீட்டில் அரையும் குறையுமாக தன் காதில் விழுந்த பேச்சுகள் அவள் நினைவில் எழுந்தன!
“அப்பா! எப்படியப்பா 3 லட்சம் வந்தது? என் திருமணம் நடக்கணும் என்று உங்க மனச்சாட்சியையே வித்துட்டிங்களா? உங்களையே நம்பி உங்க கம்பெனி முதலாளி உதவி மேனேஜரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை உங்கிட்ட ஒப்படைச்சிருக்கார்! அதைத்தகுதியற்ற ஒருத்தருக்குத் தரப்போறீங்க! அதற்குப் பரிசு 3 லட்சம் அப்படித்தானப்பா? அப்பா! பரிதானம் வாங்குகிறவனுக்கு ஐயோன்னு (ஏசாயா 5:23) பரிசுத்த வேதாகமம் சொல்லியிருக்கிறதை மறந்திட்டீங்களாப்பா? சாமுவேல் தாக்கதரிசியின் குமாரர் பரிதானம் வாங்கியதனால்(1சாமு.8:3-5) நியாயாதிபதி பதவியையும் இழந்தார்கள். பரிதானம் வாங்கிய எலியா தீர்க்கனின், வேலைக்காரன் கேயாசி (2 இரா. 5:27) குஷ்டரோகியா மாறிட்டானே! அதெல்லாம் நீங்க மறந்துட்டீங்களா? சொல்லுங்கப்பா! நீங்க சத்தியசீலனா? உங்க சந்தோஷத்தையே பார்க்கிற சந்தோஷ சீலனா?” என்று ஆவேசமாகக் கேட்டாள் வசந்தி.
சத்தியசீலன் உணர்ச்சி வசப்பட்டிருந்தார்! அலை மோதிய படகு விசுவாச நங்கூரத்தில் நிலைத்தது! கண்ணீர் முத்துக்கள் உருண்டன!
“ஐயோ! வசந்தி வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கிறயேடி! என் மனசு உனக்கு புரியலையாடி! உன் வயதுப் பிள்ளைகளெல்லாம் திருமணமாகி குழந்தையும் குட்டியுமா இருக்காங்களேடி! உன்னப் பார்த்து பார்த்துக் கண்ணீர் வடிச்சு நஞ்சுப் போறேனேடி! ஏண்டி! கடவுள்! கடவுள்ன்னு சொல்றையே அந்தக் கடவுள் ஏண்டி ஒரு வழி உனக்கு
காட்டல! நியாயமா வாழ்ந்து என்னத்தைக் கண்டோம்? சொல்லுடி!” என்று அங்கலாய்த்தாள் சாந்தா.
“அம்மா! எது நமக்குக் குறைஞ்சு போச்சு? அக்காமார் ரெண்டு பேரையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்திருக்கீங்க. என்னையும் பட்டதாரி ஆக்கிட்டீங்க! திருமணம் ஆகலைங்கறீங்க! அதற்கு ஏற்றவேளையும், என்னப்பன் செலக்ட் பண்ணி வைத்திருக்கிற வரனும் வர வேண்டாமா?” என்றாள் வசந்தி.
“போடி! ரொம்பத் தெரிஞ்சவ!” என்ற சாந்தா சத்தியசீலனைப் பார்த்து? “என்னங்க! இவ சொன்னபடி கேட்காதீங்க! என் கண்ணீரைப் பாருங்க!” என்று கெஞ்சினாள்.
“அம்மா! கணவன் வழி செல்லாமல் உலக செல்வத்தை எண்ணித் திரும்பிப் பார்த்தாளே லோத்தின் மனைவி! என்ன ஆனாள்? உப்புத்தூண் ஆனாள், (ஆதி 19:26). தன் கணவன் விருப்பத்திற்காக நாபோத்தைக் கொலை செய்து, தன் கணவன் ஆகாபையும் தவறான பாதையில் நடத்திய யேசபேல் (1இரா 21:25) வாழ்ந்தாளா? அவள் மாம்சத்தை (2இரா 9:36) நாய்கள் தின்றன. இஸ்ரவேலின் இராஜகுமாரத்தியின் மரணத்தைப் பார்த்தீங்களா? தவறான ஆலோசனையே தந்த ஆமானின் மனைவி சிரேஷ் (எஸ்.5:11) தன் கணவனையும் (எஸ்.7:10, எஸ்.8:14) தன் பத்து குமாரர்களையும் பறிகொடுத்தாள்! யோபு சோதனையால் வேதனையடைந்து தவித்தபோது, அவனுக்கு அன்பையும் ஆறுதலையும் கூட்டி வழங்க
வேண்டிய அவன் மனைவி (யோபு 2:9) “தேவனை தூஷித்து ஜீவனை விடும்” என்று கூறுகிறாள்! அதனால் யோபு சோதனையில் வென்று எல்லா ஆசீர்வாதங்களையும் இரண்டத்தனையாகப் பெற்ற போது அவன் .மனைவியைப் பற்றி ஒரு வார்த்தை கூட வேதத்தில் இல்லை! இந்தப் பெண்களின் வரிசையில் நீங்களும் இடம் பெற வேண்டுமா?
ஏம்மா? நாங்கள் பக்தியில் வளர வழி வகுத்துத் தந்ததே நீங்கள்தானே! இப்ப ஏம்மா இப்படி மாறிட்டீங்க? உங்களுடைய தவறான ஆலோசனைக்கு அப்பாவை இணங்க வைக்க நீங்க செய்கிற முயற்சியை “உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து அவர் மேல் நம்பிக்கையாய் இரு! அவரே உன் காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்” (சங்.37:5) என்ற வாக்குத்தத்தத்தை
விசுவாசத்தோடு பற்றிப்பிடித்து ஆண்டவரிடம் கேளுங்கள்” தன் உணர்ச்சிமிக்க சொற்பொழிவை முடித்த வசந்தி எழுந்து போய்விட்டாள்!
சில விநாடிகளில் தன் தாய் உள் அறையில் வேத புத்தகத்தின் முன் மண்டியிட்டு கண்ணீரோடு ஜெபித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்! அவள் இதழ்களில் வெற்றிப் புன்னகை தவழ்ந்தது! இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எம் பெருமான் இயேசுவின் மாட்சிமை பொருந்திய விழிகளினின்று இருதுளி ஆனந்தக் கண்ணீர் பூமியில் சிதறியது! விளைவு.......
மறுநாள் புத்துணாச்சியுடனும், புது மலாச்சியுடனும் அலுவலகம் வந்த சத்தியசீலனை பியூன் வந்து முதலாளி அவரை அழைப்பதாக கூறவும் தான் சத்தியம் தவறாமல் தோந்தெடுத்த உதவி மானேஜரின் ஆரடருடன் முதலாளி கார்மேகத்தின் அறைக்குள் நுழைந்தார்!
“வணக்கம் ஐயா! உதவி மேனேஜர் பதவிக்கு தேர்ந்தெடுத்து ஆடர் அடித்துவிட்டேன்” என்றார் சத்தியசீலன்.
ஆர்டரில் கையொப்பமிட்ட கார்மேகம் “நீ சரியாக முடித்திருப்பாய் என்பது எனக்குத் தெரியாதா? அனுப்புகை எழுத்தரிடம் இதை அனுப்புவதற்கான ஏற்பாடு செய்துவிட்டு நீ உடனே என்னோடு புறப்படு” என்றார். இருவரும் காரில் அமர கார் புறப்பட்டது.
“ஏப்பா! சத்தியா! நீ என் கம்பெனிக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?” என்று கேட்டார் கார்மேகம்.
“இருபத்தெட்டு வருஷமாச்சு ஐயா!”
இந்த 28 வருஷத்தில் என்னிடம் பேசக்கூடிய நேரங்கள் பல தடவைகள் உனக்கு கிடைச்சிருக்கு! நீ கிறிஸ்தவன் தானே! ஒரு தடவையாவது நீ வணங்கும் உன்மையான தெய்வம் இயேசு சாமியைப் பற்றி சொல்லியிருக்கிறாயா? குருடருக்கு வழி காட்டணுப்பா!” என்றார் கார்மேகம்.
“என்னை மன்னிச்சிடங்க ஐயா. நான் தவறிவிட்டேன்!” என்ற சத்தியசீலன் உண்மையாகவே தன் தவறை உணர்ந்தார்.
2 வருஷம் என் மகன் மருத்துவ மேல்படிப்புக்கு அமெரிக்கா போனான். எங்க வீட்டுக்கு கிறிஸ்துவை கொண்டு வந்துட்டானப்பா! எங்க வீட்டில் இப்ப எனக்கும் என் மனைவிக்கும் கிறிஸ்துவைப்பற்றி டியூஷன் எடுக்கிறான்.” என்று சொல்லி சிரித்தார். “இன்னும் சில வாரங்களில் அவன் அமெரிக்கா போகணும்! அதற்குள் அவனுக்கு ஒரு நல்ல கிறிஸ்தவ பெண்னை திருமணம் பண்ணி வைச்சு அனுப்பிடனும் என்று நினைக்கிறேன்.
“நல்லது ஐயா!”
“உன் மகள் வசந்தியிடம் அழகு, அறிவு, அடக்கம் எல்லாம் இருக்காம்! அவள்தான் என் மனைவிக்கு மருமகளா வரணும் என்று என் மனைவி சொல்லிவிட்டாள்! அவள் ஆர்டருக்கு எங்க வீட்டில் ஆட்சேபணையே கிடையாது. ஏப்பா உனக்கு” என்ற அவர் சத்தியசீலனை உற்றுப்பார்த்தார்!
சத்தியசீலனுக்குக் கேட்பதெல்லாம் கனவிலா, நனவிலா என்று சந்தேகமாக இருந்தது! பரக்கப்பரக்க விழித்தார்!
“சத்தியா! சில வாரத்தில் திருமணம் என்றால் என்ன செய்றதுன்னு யோசிக்கிறையா? நீ ஒண்ணும் கவலைப்படாதே! புன்கையோடு உன் மகளைக் கொடு. பொன்னகை எல்லாம் நாங்களே போட்டு திருமணம் ஜாம் ஜாம்ன்னு நடத்தி இரண்டு பேரையும், அமெரிக்கா அனுப்பிவைச்சிடுவோம்.... என்ன”
“சரிங்க சம்பந்தின்னு சொல்லுப்பா” என்று உரிமையோடு தோளில் தட்டினார் கார்மேகம். சத்தியசீலனில் விழிகள் முன் செங்கடலைப் பிளந்து வழியமைத்த தேவன் மலர்ந்த முகத்துடன் தோன்றினார். சத்திய சீலனின் விழிகள் நன்றிக் கண்ணீரைச் சொரிய கரங்கள் குவிந்தன! இதழ்கள் இசைத்தன: ஸ்தோத்திரம்! தேவா!
இந்த கதை இதயம் தந்த பரிசு என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.