இன்று, திருமண பந்தம் சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கிறிஸ்தவர்கள் திருமணத்தைப் பற்றிய விவிலியப் புரிதலை சமுதாயத்திற்குக் கற்பிக்க வேண்டும்.
தேவன் நியமித்த பந்தம்:
தேவன் உலகம் முழுவதையும் படைத்து, ஆதாமின் இல்லமாக ஏதேன் தோட்டத்தை செதுக்கினார். அந்த விண்ணுலகில் (பரதீசு) கூட, ஆதாம் தனிமையில் இருந்தார், அவருடன் இருக்க ஒரு உதவியாளர் அல்லது ஆத்ம துணை தேவை (ஆதியாகமம் 2:18-24). ஆகவே, தேவன் ஆதாமை தூங்க வைத்து, அவரிடமிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து, ஏவாளைப் படைத்தார். பின்பதாக இருவரும் ஒரே மாம்சமாக இருப்பார்கள், இது ஒரு உடன்படிக்கை உறவாகும்.
வீழ்ச்சியால் சிதைந்தது:
ஆதாமும் ஏவாளும் சாத்தானையும், தடைசெய்யப்பட்ட பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் கடவுள்களைப் போல் ஆகிவிடுவோம் என்ற அவனுடைய வாக்குறுதியையும் நம்பத் தேர்ந்தெடுத்தபோது, தேவனால் நியமிக்கப்பட்ட இந்த பந்தம் பாதிக்கப்பட்டது. சாபத்தின் விளைவுகளுடன் பாவம் உலகில் நுழைந்ததால் இது மனித வீழ்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் , அவர்கள் தேவனின் பிரசன்னத்தைக் கண்டு பயந்தார்கள். இரண்டாவது , அவர்கள் மகிமையை இழந்தனர், எனவே அவர்கள் ஒருவருக்கொருவர் முன்னிலையில் வெட்கமாகவும் சங்கடமாகவும் உணர்ந்தனர். மூன்றாவது , அவர்கள் சுயநலவாதிகளாக மாறி, தங்கள் கீழ்ப்படியாமைக்காக ஒருவரையொருவர் குற்றம்சாட்டினர் (ஆதியாகமம் 3:1-13).
கலாச்சாரத்தால் கெடுக்கப்பட்டது:
கலாச்சாரத்தின் சில அம்சங்கள் நீதியானவை மற்றும் நல்லவை, ஆனால் மற்றவை தீயவை, அடக்குமுறை மற்றும் பேய்த்தனமானவை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எப்படி சபையை நேசிக்கின்றாரோ அதுபோல ஒரு கிறிஸ்தவ கணவன் தன் மனைவியை நேசிக்க வேண்டும் என்று பவுல் கட்டளையிடுகிறார். அதாவது அன்பு என்பது தியாகம், தன்னையே தருவது மற்றும் வெளிப்படுத்தும் (எபேசியர் 5:25-29). ஆனால் பெரும்பாலான கலாச்சாரங்கள் மனைவியை ஒரு பொருளாக அல்லது சொத்தாக, அடிமையாக அல்லது கூட்டுக் குடும்பத்தின் வேலைக்காரனாகக் கருதுகின்றன. இதனால், மனைவியின் அடையாளம், கண்ணியம், மரியாதை பறிக்கப்படுகிறது. கொடுமை என்னவென்றால், பல கிறிஸ்தவர்கள் வேதத்தை விட கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள்.
புதுப்பிக்கப்படல் அவசியம்:
கிறிஸ்தவர்கள் தேவனுடைய வார்த்தையின் மூலம் மனதைப் புதுப்பிப்பிக்க வேண்டும், ஆம், இது மிக மிக தேவை (ரோமர் 12:1-2). உலகக் கண்ணோட்டம், யோசனைகள், சிந்தனை முறைகள், மரபுகள் அல்லது உலகின் போக்குகள் ஆகியவை மனதில் இருந்து நீக்கப்பட்டு, வேதத்தின் உண்மையால் நிரப்பப்பட வேண்டும்.
மீட்கப்படல்:
தேவனின் வார்த்தை ஒரு ஜோடியின் மனதை புதுப்பிக்கும்போது, திருமணம் மீட்கப்பட்டு புத்துயிர் பெறுகிறது. கணவன் தனது மனைவியை நேசிப்பார், ஊக்கமளிப்பார், உத்வேகப்படுத்துவார். அதன் எதிர்வினையாக, மனைவி தன் கணவனை கர்த்தருக்குள் மதித்து கீழ்ப்படிவாள்.
எனக்கு திருமணத்தைப் பற்றிய வேதாகம புரிதல் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்