மரண இருளின் பள்ளத்தாக்கைக் கடந்து செல்வதைப் பற்றி தாவீது எழுதுகிறான். உலகில், தேவ ஜனங்கள் கடினமான, சஞ்சலமான மற்றும் திகிலூட்டும் நேரங்களைக் கடக்க வேண்டிய காலங்கள் உள்ளன. அப்படிப்பட்ட சமயங்களில் எல்லாம் தேவன் நம்முடன் இருக்கிறார் என்று தாவீது நம்பிக்கையுடன் கூறுகிறான். ஆம், "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" (சங்கீதம் 23:4). யோபு தன் வாழ்க்கையில் அப்படிப்பட்ட ஒரு இருண்டதான காலக் கட்டத்தை கடந்து சென்றான். யோபுவின் விசுவாசத்தைப் பெறுவதற்காக தேவன் லஞ்சம் கொடுத்ததாக சாத்தான் குற்றம் சாட்டினான்; யோபை சோதிக்க தேவன் சாத்தானை அனுமதித்தார். அவன் தனது செல்வம், குழந்தைகள் மற்றும் தனது சொந்த ஆரோக்கியத்தை இழந்து பெரும் துன்பத்தை அனுபவித்தான். யோபு முந்தைய காலங்களில் தேவன் தன்னோடு கூட இருந்தததைக் குறித்து ஏங்குகிறான் (யோபு 29:1-6). இதன் மூலம் யோபுவின் முதன்மையான பிரச்சினை செல்வம் அல்ல, ஆனால் ஆவிக்குரிய வாழ்வு என்பதை வெளிப்படுத்துகிறது. யோபிலிருந்து ஸ்பர்ஜன் வாழ்க்கையின் நான்கு அம்சங்களை விளக்குகிறார்,
1) பாதுகாத்தல்:
யோபு தனது நல்ல காலத்தைப் பற்றி ஏக்கம் கொண்டிருந்தான். உயிருடன் குழந்தைகள் இருந்த காலத்தில் அவன் தனது பிள்ளைகளுடன் கழித்த அந்த நல்ல காலங்களில், தேவன் தன்னைக் கண்காணிப்பதாக உணர்ந்தான். இப்போது, அவன் அத்தகைய பாதுகாப்பை இழந்ததாகவும் அவரது பிரசன்னம் இல்லாதது போலவும் தோன்றியது. உண்மையாகவே இப்படிப்பட்ட உணர்வு ஒரு விசுவாசியை விரக்தியில் தள்ளும். தேவன் தனது பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை, ஆனால் விசுவாசிகள் தாங்கள் கைவிடப்பட்டதாக உணரும் நேரங்களும் உண்டு (மத்தேயு 28:20).
2) ஆறுதல்:
"அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்" என்பதாக யோபு கூறினான். தேவனின் மெல்லிய சத்தம், உறுதியளிக்கும் குரல் யோபுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையுடன் செல்ல உதவியது. "நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்" (ஏசாயா 30:21). ஆம், தேவ சித்தம் விசுவாசிகளுக்கு வழிகாட்டுதலாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது.
3) ஒளியூட்டம்:
யோபு இருளில் நடந்தபோது, தேவனின் வெளிச்சத்தைக் காண முடிந்தது. "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங்கீதம் 119:105). கர்த்தராகிய இயேசு உலகத்திற்கு ஒளியாக இருக்கிறார், மேலும் தம்மை நோக்கிப் பார்க்கும் அனைவருக்கும் அவர் பிரகாசத்தைத் தருகிறார். "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" (யோவான் 1:9).
4) ஐக்கியம்:
யோபு தன் கூடாரத்தில் தேவனை தன் நண்பனாக உணர்ந்தான். தேவனின் நண்பராக அழைக்கப்பட்ட ஆபிரகாமைப் போலவே, யோபுவும் தேவனின் ஐக்கியத்தை அனுபவித்தான் (யாக்கோபு 2:23). கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களை அடிமைகள் என்று அழைக்காமல் நண்பர்கள் என்று அழைத்தார் (யோவான் 15:15).
தேவனுடனான எனது உறவு ஆற்றல் மிக்கதாக உள்ளதா?
Author : Rev. Dr. J. N. Manokaran