பழைய நாட்களில், ஆடுகளுக்கான தொழுவம் அல்லது அடைப்பு ஒரு நுழைவாயிலுடன் திறந்த வயல்களில் வட்ட வேலியைக் கொண்டிருந்தது. தொழுவத்தின் வாசலில் மேய்ப்பன் படுத்திருப்பான். "நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்" (யோவான் 10:9).
நம்பிக்கையின் வாசல்
வரலாறு முழுவதும் மனிதர்கள் துன்பம், வன்முறை, மரணம், கடும் உழைப்பு, அடக்குமுறை, பட்டினி மற்றும் நோய்களைக் கண்டனர். நம்பிக்கையின்மையும் இருளும் மட்டுமே இருந்தது. இச்சூழ்நிலையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்தமான மற்றும் உன்னதமான நாமம் நம்பிக்கையைத் தூண்டுகிறது.
ஒப்புரவாகுதலின் வாசல்:
ஏதேன் தோட்டத்துக்கான நுழைவு ஆதாம் மற்றும் ஏவாளுக்கு மறுக்கப்பட்டது. மேலும் வீழ்ச்சி மனிதர்களுக்கு புரிந்துகொள்ள முடியாத இடைவெளியையும், மீளமுடியாத நிலையையும் உருவாக்கியது. அதை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனது மாம்சமாகுதல், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் தேவனுடன் ஒப்புரவாக வழி வகுத்தார் (2 கொரிந்தியர் 5:11-21).
சுயாதீனத்தின் வாசல்:
சாத்தானால் திணிக்கப்பட்ட குருட்டுத்தன்மை நற்செய்தி மூலம் குணப்படுத்தப்படுகிறது (2 கொரிந்தியர் 4:4). ஆவிக்குரிய இருளில் வாழும் மக்கள் ஒளியில் நடக்க சுதந்திரம் பெறுவார்கள். ஆம், இருளில் நடந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் (மத்தேயு 4:15). பாவத்தின் அடிமைத்தனத்தில் வாழ்பவர்கள் விடுதலை பெறுகிறார்கள். இந்த சுயாதீன வாசல் இரண்டாவது மரணத்தின் மீது வெற்றியை அளிக்கிறது (வெளிப்படுத்துதல் 21:8).
கனவுகளின் வாசல்:
முன்வினைப் பயன் (கர்மம்) ஒரு நபரை ஒரு கட்டுக்குள் வைக்கின்றது மற்றும் அதிலிருந்து தப்பித்து எதற்கும் ஆசைப்படவோ அல்லது விருப்பப்படவோ ஒருபோதும் முடியாது. இருப்பினும், தேவனுடைய ஆவி ஒரு நபருக்கு தரிசனங்களையும் கனவுகளையும் காண உதவுகிறது (யோவேல் 2:28). அதனால் வயதானவர்கள், இளைஞர்கள், வேலைக்காரர்கள் மற்றும் வேலைக்காரிகள் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஒரு சிறந்த வாழ்க்கையைக் கனவு காணலாம்.
வழங்கிடும் வாசல்:
பரலோகத் தகப்பன் வானத்துப் பறவைகள் அனைத்திற்கும் உணவளிக்கிறார். மேலும் அவர் அறிவார், அவரிடம் அனைத்து வளங்களும் இருக்கிறது, மேலும் அவரது பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார் (மத்தேயு 6:25-33).
பாதுகாப்பின் வாசல்:
தேவ ஜனங்களுக்கு எதிரான மந்திரமோ அல்லது குறிசொல்லுதலோ இல்லை (எண்ணாகமம் 23:23). கர்த்தர் தம்முடைய பிள்ளைகளைக் கண்ணின் மணியைப் போல பாதுகாப்பதாக வாக்களித்திருக்கிறார் (உபாகமம் 32:10; சங்கீதம் 17:8).
நித்திய ஜீவனுக்குள் நுழைவதற்கான வாசல்:
விசுவாசத்தோடு கர்த்தரிடம் வருகிறவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் (யோவான் 10:9). அவர்கள் பாவம், அடிமைத்தனம், இரண்டாம் மரணம் மற்றும் நரகத்தில் இருந்து காப்பாற்றப்படுவார்கள். பரலோகத்தில் அவருடன் என்றென்றும் வாழ்வதே தேவன் அளிக்கும் நித்திய ஜீவன். தேவனுடைய குமாரனை உடையவனுக்கு நித்திய ஜீவன் உண்டு (1 யோவான் 5:12).
நான் வாசலுக்குள் நுழைந்துவிட்டேன், மற்றவர்களையும் அழைக்கலாமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்