கடவுளே நேரில் வந்து தன்னை வெளிப்படுத்தினால் அல்லது நேரடியாகப் பேசினால் நாங்கள் கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றுவோமே எனப் பெருமை பேசும் பலர் உள்ளனர். ஆமாம், தேவன் குறிப்பிட்ட சிலருக்கு தன்னை பகிரங்கமாக வெளிப்படுத்திக் காட்டி கிருபை புரிகிறார். தேவன் சவுலோடு (பின்னர் பவுல்) நேரடியாக எதிர்பட்டார். இயேசு தன்னை நேரடியாக வெளிப்படுத்திய பாக்கியம் சாது சுந்தர் சிங்குக்கு கிடைத்தது. இருப்பினும், தேவன் தன்னை அனைவருக்கும் வெளிப்படுத்த தேவையில்லை, அவசியமும் இல்லை. ஆண்டவராகிய இயேசு தனது உவமையில் சொன்னார், "மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்" (லூக்கா 16:31). "ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது" (யோவான் 14:22-24).
இது யூதாவின் நியாயமான சரியான கேள்வி, ஒரு துரோகியின் கேள்வி அல்ல. அதாவது ஆண்டவர் அவருடைய சீஷர்கள் மூலமாக இந்த உலகில் வெளிப்படுவார் என்று ஆண்டவராகிய இயேசு பதிலளித்தார்.
1) கர்த்தரை நேசி:
அன்பு, கீழ்ப்படிதல் மற்றும் ஐக்கியம் ஆகியவை ஒரு சீஷரின் அடையாளம். சீஷர்கள் தங்கள் முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும் தேவனை நேசிக்கும்போது, அவர்கள் தேவனை உலகிற்கு வெளிப்படுத்துகிறார்கள் (மத்தேயு 22:37).
2) வசனத்தைக் கைக்கொள்:
சீஷர்கள் வசனத்தைப் படிக்கிறார்கள், கேட்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள், புரிந்துகொள்கிறார்கள், தியானிக்கிறார்கள் மற்றும் வார்த்தையை செயல்படுத்துகிறார்கள். அவ்வார்த்தைகள் அவரை அனுப்பிய பிதாவின் வார்த்தைகள். "நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது" (யோவான் 14:24).
3) வாசம் பண்ணும் சமூகம்:
பிதாவும் குமாரனும் சீஷர்கள் அழைக்கும்போது அவர்களில் பிரவேசிக்கிறார்கள் (வெளிப்படுத்துதல் 3:20). சீஷர்கள் பரிசுத்த ஆவியின் ஆலயம் (I கொரிந்தியர் 6:19)
4) கீழ்ப்படிதல்:
வெளிப்படையாக கூற வேண்டுமெனில், கிறிஸ்தவர்கள் அல்லாத பலர் கூட, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் தரங்களைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். மேலும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் : சீஷர்களாக இருப்பவர்களிடம் ஆண்டவரின் போதனைக்குக் கீழ்ப்படிவதைக் காண விரும்புகிறார்கள். விசுவாசிகள் தேவனுக்கு கீழ்ப்படிகிறது மூலம் இந்த உலகம் மதிப்பீடு செய்கிறது.
நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்