இல்லற ஜோதி

தொடர் – 4

இவ்வண்ட சராசரங்களைப் படைத்த தேவன் மனிதனை தன் சாயலிலே உண்டாக்கியபின், “மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்று கூறி, அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தை சதையினாலே அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனிலிருந்து எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.

அப்பொழுது ஆதாம், ''இவள் என் எலும்பில் எலும்பும், மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனிலிருந்து எடுக்கப்பட்டபடியால் மனுஷி என்னப்படுவாள்'? என்றான். “இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும், தன் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்'” என திருமறை இயம்புவது யாவரும் அறிந்ததே.

கணவன் மனைவியை தன் சொந்த சரீரமாகப் பாவித்து அன்பு கூற வேண்டும். மனைவி, கர்த்தருக்குக் கீழ்ப்படிவது போல தங்கள் கணவனுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என எபேசியருக்கு எழுதிய நிரூபம் 5 ஆம் அதிகாரம் 22 முதல் 33 முடிய உள்ள வசனங்களில் பவுல் அடியார் விளக்கமாக எழுதுகிறார்.

சபையின் திறவுகோலை உடைய பேதுருவும் இதே ஆலோசனையை 1 பேதுரு 3 ஆம் அதிகாரத்தில் கூறுகிறார். இந்த அருமையான கருத்தை நடைமுறையில் நடத்திக் காட்டியவர்கள் பேட்ரிக் தம்பதியினர். பேதுரு கூறியபடி '“அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும், அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கும் குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பட்டது. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.!” 1 பேதுரு 3:4,5 என்ற திருமறை வாசகத்திற்கு திருவுருவானவர்கள் சுசீலா. திருமணமான மறுநாள் தன் கணவரின் வீட்டில் இருக்கும்போது, அன்று அணிந்து கொள்வதற்காக தன் பட்டுப் புடவைகளில் அதிக ஜரிகைக் கரையுடன் அழகிய பட்டுப் புடவையை எடுத்துக்காட்டி, ''இதை இன்று கட்டிக் கொள்ளட்டுமா?'' ஆவலே வடிவாக தன் கணவன் முகம் நோக்கினாள். புதுமணமகள், சுசீலா.

தன்னைப் பலர் பார்க்க வரும்போது, தான் நன்றாக இருக்க வேண்டுமே என. நினைப்பது இயல்புதானே. தன் பிறந்த வீட்டின் சீரையும் சிறப்பையும் புகுந்த வீட்டாரும், ஊராரும், உறவினரும் அறிய வேண்டும் என பெண் நினைப்பதில் வியப்பொன்றுமில்லையே! உலக இன்பத்தில் ஊறித் திளைத்திருக்கும் கணவன்மார்களும், தன் மனைவி செல்வந்தர் வீட்டுச் செல்லமகள் என்பதை ஊரறிய வேண்டுமென நிறைந்த நகையுடன் விலையுயர்ந்த பட்டுப் புடவையுடன் தன் வீட்டில் வலம் வரவேண்டுமெனத்தானே விரும்புவர்.

சுசீலாவும் ஒவ்வொரு சேலையாக எடுத்துக் காட்ட, எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, சிறிய பூ போட்ட வெள்ளை வாயில் சேலையை சுட்டிக் காட்டி,“இதை அணிந்து கொள்'” என்று கூற, சிறிது கூட முகம் மாறாமல், மிக்க மகிழ்ச்சியோடு அதை அணிந்து கொண்டார்கள் சுசீலா. இதைக் கண்ட உறவினர்கள், பேட்ரிக் அவர்கள் அம்மாவிடம் கூற, அவர்கள் பேட்ரிக் இடம் ஓடி வந்தார்கள். “என்ன பேட்ரிக் அம்மா வெள்ளைச்சேலை கட்டுவதால் சுசீலாவையும் அப்படிக் கட்டச் சொன்னாயா?'” சற்று படபடப்போடு கேட்க,

“அவளிடம் விக்கிரகத்துக்கு உடுத்துவதுபோல் பெரிய, பெரிய ஜரிகைக் கரையோடு பட்டு இருக்கம்மா. எனக்குப் பிடிக்கலை! வீட்டில் தானே இருக்கிறாள். கண்ணுக்கு நிறைவா இப்படியே இருக்கட்டும். எனக்கு இதுதான் பிடிக்கிறது.” அவருக்கே உரிய அழுத்தம் காணப்பட்டது. பரிசுத்தத்தையே வாஞ்சிக்கும் தாயால், தன் மகனின் பண்புகளை அறிந்திருந்த காரணத்தால் மறுப்பு ஒன்றும் சொல்ல முடியவில்லை.

வசதிமிக்க இடத்தில் பிறந்து, உடன் பணிபுரியும் ஆசிரியைகள் எல்லாம் மூக்கில் விரல் வைக்கும் வண்ணம், வகை வகையாக, வண்ணம் வண்ணமாக உடுத்தி மகிழ்ந்த அந்த வனிதை இனி தன் எண்ணம், ஆசை, எதிர்பார்ப்பு, அனைத்தும் அன்புக் கணவனின் விருப்பத்திற்கு உட்பட்டவை என உணர்ந்தார்கள் போலும். அப்படியே கணவனுக்கு மலர்ந்த முகத்தோடு கீழ்ப்படிந்தார்கள்.

கடம்பூர் வாழ்க்கை :

கண்டோர் வியக்க கடம்பூரில் அவர்கள் இல்லறம் நடத்த ஆரம்பித்தனர். இல்லற வானில் இனிய நிலவாய் அருமை மகன் ஷலோம் தேவ பாலன் பிறந்தான்.

சிறிய கட்டிலில் படுத்திருக்கும் குழந்தை, மெதுவே நகர்ந்து, நகர்ந்து வந்து கீழே விழுந்து விடுவான். பேட்ரிக் பிள்ளையை கட்டில் ஓரம் வர விடாமல் தடுக்கமாட்டார். '*இரண்டு, மூன்று முறை விழுந்தால்தான், அவன் கட்டில் ஓரம் வரக் கூடாது என்று தெரிந்து கொள்வான்”” என்று சிரித்துக் கொண்டே கூறிவிடுவார்.

““பிள்ளை விழுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே!'' என்றோ, “சிறு குழந்தைக்கு என்ன தெரியும்? ஏன் இப்படி இருக்கிறீர்கள்?!” என்றோ சுசீலா கேட்டது இல்லை.

மூத்த பிள்ளை என்றாலே பாசத்தைக் கொட்டி போற்றி வளர்ப்பவள் தாய். பிள்ளை கீழே விழுவதையும், தடுக்காமல் இருப்பதையும் எந்தத் தாயும் பார்த்துக்கொண்டிருக்கமாட்டாள். ஆனால்... சாதாரண பெண்ணில் மனப்பக்குவத்தையும் கடந்து நின்றது சுசீலாவின் மனம். தன் கணவன் செய்வது எதிலும் குறை காண, அவர்கள் கிஞ்சித்தும் எண்ணியது இல்லை.

கிராம ஊழியம் :

கடம்பூரில் வாழ்ந்தபோது சிவலிங்கபுரத்தில் உபதேசியாராக பேட்ரிக் அவர்கள் பணியாற்றினார்கள். கடம்பூரிலிருந்து சிவலிங்கபுரம் 37/2 மைல் கணவன் எவ்வழியோ, மனைவியும் அவ்வழிதானே! மேலும் சாரா டக்கர் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் போதே ஊழியம் செய்தவர்கள் அல்லவா? எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் தன் கணவரோடு கூண்டு வண்டியில் ஊழியத்திற்குப் புறப்பட்டு விடுவார்கள். வாலிபப் பெண்களை கர்த்தருக்குள் வழிநடத்தினார்கள். பெண்கள் மத்தியில் ஊழியம் செய்தார்கள். சுசீலாவை வாலிபப் பெண்கள் 'அக்கா' என அழைத்து மகிழந்தனர்.

சுசீலா சகோதரியுடைய அன்பு ததும்பும் பேச்சுகள் அனைவரையும் கொள்ளை கொண்டதில் வியப்பில்லை. பெண்களோடு அவர்களுடைய உற்ற தோழியாக மாறி விடுவார்கள். பவுல் ரோமருக்கு எழுதின நிரூபத்தில் 12 ஆம் அதிகாரம் 15 ஆம் வசனத்தில் ''சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள். அழுகிறவர்களுடனே அழுங்கள்.'' என்று கூறியபடி சகோதரி சுசீலா பெண்களின் இன்ப துன்பங்களைத் தம்மீது ஏற்று ஆனந்தித்தார்கள். ஆறுதல் அளித்தார்கள். ஆலோசனையும் நல்கினார்கள். என்றாவது சகோதரி வரவில்லை என்றால் அந்தப் பெண்கள் குழாம் மழை முகம் காணாத பயிர் போல் வாடி விடுவர்.

பேட்ரிக் அவர்களுக்கு கோவில்பட்டிக்கு மாறுதல் ஆனது. கார், போன் எல்லாம் வீட்டிற்கு வந்தது. பேட்ரிக் அவர்கள் கடவுள் பக்தியுடையவராக இருந்த. காரணத்தால் தேவன் திறமைகளை அள்ளித் தந்திருந்தார். போட்டிகள் நடைபெறும்போது பேட்ரிக் அவர்களே முதல் இடத்தைப் பெற்று வெற்றி பெறுவார்கள். ஆயுள் காப்பீட்டுக் கழக நிர்வாகப் பதவிக்கு (மேனேஜர்) பதவிக்கான நேர்முகத் தேர்விற்கு சாதாரணமாக 10 முறைகளாவது சென்றால்தான் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆனால் நேர்முகத் தேர்விற்குச் சென்ற முதல் தடவையிலேயே பேட்ரிக் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

கோவில்பட்டியில், திருமதி. விக்டர், திருமதி. பாண்டியன், இவர்களோடு சேர்ந்து நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவாகக் கூடி ஜெபிக்க ஆரம்பித்தனர். இல்லறப் பூங்காவில் இனிய சிட்டுக்களாக ஜிம் எலியட் என்ற இரண்டாவது மகனும், சபைன் மோனிகா என்ற அருமை மகளும், நான்காவது செல்லமாக பிராங்கோவும் பிறந்தனர்.

சகோ. கிருபாகரன் நண்பர் சுவிசேஷ ஜெபக் குழுவில் இணைந்தார். சகோ. ஹில்டன் அவர்களும், சகோ. பிரான்ஸிஸ் அவர்களும் பெரியமலையில் ஊழியம் செய்தனர். அவர்களுக்கு உதவியாக சகோ. ஏசா அவர்கள் குடும்பமும் பெரிய மலையில் இருந்தது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் பஸ்தியில் பணித்தளம் ஆரம்பிக்கப்பட்டது. சகோ. ஹில்கியா அவர்கள் குடும்பமாக மிஷனரி ஊழியத்திற்குச் சென்றார்கள். நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவில் பத்தாண்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஊழியர்கள் அதிகமாக வீட்டிற்கு வந்து சென்றார்கள். சகோதரி. சுசீலா மலர்ந்த முகத்தோடு அவர்களை உபசரித்தார்கள்.

பேட்ரிக் அவர்களின் தந்தையார் திரு. மாசில்லாமணி அவர்கள் வாதநோயினால் கஷ்டப்பட்ட நேரம். சுசீலா தன் மாமனாரை நன்கு பராமரித்தார்கள். சகோதரியின் மாமியார் திருமதி. பரிமளம் அம்மையாருக்கும் பார்வை தெரியாது. அவர்களையும் பொறுப்போடு கவனித்தார்கள். ஊழியம் செய்து வந்த பரிமளம் அம்மையார் அநேகருக்கு கடிதம் எழுத வேண்டிய சூழ்நிலை இருந்தது. பார்வை இல்லாத அவர்களுக்காக கடிதம் எழுதும் பணியினை சகோ. கிருபாகரன் செய்தார். சகோதரர் இல்லாத நேரம் சகோதரி சுசீலா கடிதங்கள் எழுதினார்கள்.

புகுந்த வீட்டையும், பிறந்த வீட்டையும் ஒன்று போல் நேசித்தார்கள். தன் தம்பி வில்சன் படித்து விட்டு வேலையில்லாமல் இருந்தபோது தம் வீட்டில் வைத்து உள்ளூரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியப் பணி வாங்கிக் கொடுத்தனர். தன் தாய்க்கு மதுரையில் கண் அறுவை சிகிச்சை செய்து, பின் தம் வீட்டில் வைத்து, பராமரித்தார்கள்.

புகுந்த வீட்டிற்கு வந்தபின் பிறந்த வீட்டையே மறந்து விடுவர் சிலர். இன்னும் சிலர் புகுந்த வீட்டில், பிறந்த வீட்டின் பெருமையைப் பேசிப் பேசியே புகுந்த வீட்டாரை மனம் நோகச் செய்வர். இன்னும் சிலர் புகுந்த வீட்டாருக்குச் செய்ய வேண்டிய கடமையை மறுத்து, பிறந்த வீட்டாரை மட்டுமே பேணிக் காப்பர். இவர்களுக்கெல்லாம் பாடம் புகட்டும் வகையில் திகழ்ந்தனர் பேட்ரிக் - சுசீலா தம்பதியினர்.

இவ்வாறு ஒரு பெண் திகழ வேண்டுமானால், ஆவியின் கனியின் ஒன்பான் சுவைகளும் அவரிடம் கனிந்து காணப்பட வேண்டும். ஆவியின் கனி கனிய தேவனோடு அவளுக்குள்ள ஐக்கியம் சிறந்திருக்க வேண்டும். தேவனோடு ஐக்கியம் சிறந்திருக்க வேண்டுமெனில் அவள் தேவனோடு பேசுவதும், அதாவது ஜெபிப்பதும், தேவன் அவளோடு பேசுவதும், வேதம் வாசிப்பதும் அன்றாட வாழ்வில் அதி முக்கிய இடம் பெற வேண்டும்.

பின் வீரபாண்டி பட்டணத்திற்கு மாறுதலாகியது. ஆலய, ஆராதனை முடியவும், காரில் திருச்செந்தூர் அருகே சென்று ஊழியம் செய்தார்கள். அந்தக் காரில் 14, 15 பேர் பயணம் செய்வார்கள். தேவனால் ஜலப்பிரளயத்திற்குத் தப்பும்படி குறிக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்திற்கும் நோவாவின் பேழையில் இடம் இருந்ததைப் போலவே ஊழியத்திற்காக உற்சாகமாகக் கிளம்பிய அனைவருக்கும் அந்த உந்து வண்டியில் (காரில்) இடம் இருந்தது.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் பண்பாடு, ஊழியத்திற்கு வந்தவர்களிடம் நிரம்பி இருந்தது. அதில் முதன்மையானவர்கள் சுசீலா! எல்.ஐ.சி. நிர்வாகியின் மனைவி என்ற பெருமையோ, எனது உந்துவண்டி என்ற அகம்பாவப் போக்கோ அவர்களிடம் சிறிது கூட காணப்படவில்லை. தங்கச்சி! என் மடியில் உட்கார்'” என்று வாலிபப் பிள்ளையை வலிய தன் மடியில் இருத்தி, ஊழியத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

அடுத்ததாக சென்னைக்கு பேட்ரிக் அவர்கள் பணி மாறிச் சென்றதால் குடும்பம் சென்னையில் குடியேறியது. நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவின் அலுவலகம் வீட்டோடு இருந்தது. சகோதரர்கள் ராஜூ, சுப்புராம் இருவரும் சகோதரர் பேட்ரிக் ஜாஷ்வா குடும்பத்துடனேயே தங்கியிருந்தனர். குணசாலியான ஸ்திரியாகிய சுசீலா தன் இல்லத்தில் வலம் வந்தார். 


சிறந்த அன்னை
 
ஒரு முறை உறவினர்கள் வந்திருந்த சமயம் வீட்டில் டைனிங் டேபிலில் இருந்த கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து உடைந்தது. பிள்ளைகளைத் தண்டிக்காமல் உடைந்த கண்ணாடி டம்ளரை தானே பொறுக்கி அப்புறப்படுத்தினார்கள். “கவனமாக இருக்க வேண்டுமென' அன்போடு அறிவுரை கூறினார்கள்.

தன் வேலையின் மிகுதியினால், சிறிய தவறுக்குக் கூட, காரணமின்றி கத்துகின்ற தாய்மார்கள் உலவுகின்ற இந்த உலகில் சுசீலா மிகுந்த அன்பு பாராட்டுகின்ற தாயாக இருந்தார்கள். தன் பிள்ளைகளை அதிகம் நேசித்தார்கள். அதே சமயம் நல்லொழுக்கத்தில் வளர்ப்பதில் கவனமுடையவர்களாய் இருந்தார்கள்.

கல்வி:

வீரபாண்டிப் பட்டிணத்தில் மகள் சபைன்-ஐ ஆங்கில வழி போதனா முறைப் பள்ளியில் சேர்க்க முனைந்தனர் பெற்றோர். அப்பள்ளியிலுள்ள கன்னியாஸ்திரிகளைக் கண்ட குழந்தை அவர்களை மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் என எண்ணியதோ என்னவோ, அப்பள்ளிக்குச் செல்ல மறுத்து விட்டாள். இளம் பருவம்தானே! வெளித் தோன்றத்தைக் கண்டு மருண்ட குழந்தையை பெற்றோர் கொஞ்சியும், கெஞ்சியும் பார்த்தனர். பிள்ளையோ மிஞ்சி நின்றது. அன்பினால் சாதிக்க இயலவில்லை. அச்சுறுத்தியாவது பார்ப்போம் என அடித்தும் பார்த்தனர். அத்தனைக்கும் அஞ்சாமல் நின்றது குழந்தை பெற்றோர் அடிபணிய ஆரம்பித்தனர். தமிழ் வழி போதனாமுறை கல்விக் கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். களிப்போடு சென்று கற்க ஆரம்பித்தது.

பள்ளியிலே ஆண்டு விழா பேச்சுப் போட்டி முதல் வகுப்புப் படிக்கும் சபைன்-க்கு மஹாத்மா காந்தி அடிகளைக் குறித்து 2 பக்கங்கள் எழுதிக் கொடுத்து, மனனம் செய்ய வைத்தார் அன்னை சுசீலா. பேசும் முறையையும் கற்றுக் கொடுத்தார். குழந்தை மோனிகா தன் வகுப்பு ஆசிரியையிடம் சென்று, தான் பேசப் போவதாகத் தெரிவித்தாள். ஆசிரியை முதலில் அசட்டையாக விட்டுவிட்டார். பின் பேசச் சொல்லிப் பார்த்ததுமே அசந்துவிட்டார். தலைமையாசிரியருக்கு செய்தி பறந்தது. முதல் படிவம் படிக்கும் சின்னக் குழந்தையை சீராகப் பேச வைத்த அன்னையே அழைத்தனர். பாராட்டினர். விழாவிற்குத் தலைமை தாங்கவும் வைத்தனர். பிள்ளையின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு தாய்க்கு உண்டல்லவா? மோனிகா மூன்றாம் வகுப்பிற்கு வரவும், சகோதரர் பேட்ரிக் அவர்களுக்கு சென்னைக்கு மாறுதலாகியது.

சென்னையிலுள்ள புகழ்பெற்ற பெயின் பள்ளியில் நுழைவுத் தேர்வு எழுத சுசீலா, தன் மகள் மோனிகாவை அழைத்துச் சென்றார். தமிழ் வழி போதனா பள்ளிகளில் மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கிலம் கற்றுக் கொடுக்க ஆரம்பிப்பர். எனவே மோனிகாவிற்கு ஆங்கிலத்தில் ஒன்றும் தெரியாது. ஆங்கில எழுத்துக்களை அன்னை கற்றுக் கொடுத்திருந்ததால் ஆங்கில எழுத்துக்களை எழுதத் தெரிந்திருந்தது. தமிழ், கணிதம் ஆகிய தேர்வுகளை நன்முறையில் எழுதினாள். ஆங்கிலம் ஒன்றுமே எழுதத் தெரியவில்லை. மற்ற மாணவிகள் எழுதிக் கொண்டிருப்பதைக் காணவும் மனதிலே கலக்கம். தனக்கு ஒன்றும் தெரியவில்லையே என்ற ஏக்கம். ஆசிரியை மோனிகாவிடம், “வினாத்தாளில்
 
உள்ளதையாவது அப்படியே எழுதி வை” என்று கூற, மோனிகாவும் படம் வரைவது போல் வினாத்தாளில் உள்ளவற்றை விடைத்தாளில் எழுதினாள்... இல்லை... வரைந்தாள்.

தேர்வு முடிவு வெளியாகியது! மோனிகா தேர்ந்தெடுக்கப்படவில்லை. பிள்ளை அழ ஆரம்பித்தது. பள்ளியின் தோற்றம், பிள்ளையைக் கவர்ந்தது. “மம்மி! எனக்கு இந்த ஸ்கூல்தான் பிடிச்சிருக்கு. குப்பைத் தொட்டியைக்கூட பெயிண்ட் பண்ணி வச்சிருக்காங்க! மம்..மி! நான் இங்க தான் படிப்பேன்! எப்படியாவது என்னை சேர்த்து விடுங்க!'” பிள்ளையின் வேண்டுதல் அன்னையை உளுக்கியது.

பள்ளியின் தலைமையாசிரியரைச் சந்தித்தார் சுசீலா. மோனிகாவின் தேர்வுத் தாள்களைப் பார்வையிட்ட தலைமையாசிரியை திருப்தியடைந்தார். தமிழ், கணிதம் இவற்றில் 97, 99 என மதிப்பெண்கள் பெற்றிருந்த மோனிகா ஆங்கிலத்தில்தான் தவறியிருந்தாள். '“புத்திசாலியான பிள்ளை! தனிக் கவனம் செலுத்தினால் தேறிவிடுவாள்'' என்பதை அறிந்து கொண்ட தலைமையை பிள்ளையை பள்ளியில் சேர்த்தார். தமிழ் நன்கு படித்த மோனிகா தமிழ் ஆசிரியையின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாள். ஆனால்... ஆங்கிலம்? பயங்கரப் போராட்டமே! அரையாண்டுத் தேர்வு வரை மூன்றாம் வகுப்பில் பயின்றாள். அவளுடைய இயலாமையை உணர்ந்த தலைமையாசிரியை, “அஸ்திபாரம் சரியாக அமையாமல் மேலே மாட மாளிகை அமைப்பது சரியல்ல'' என்பதை உணர்ந்தவராய் இரண்டாம் வகுப்பில் படிக்க அனுமதித்தார். விளைவு... அஸ்திபாரம் ஆழமாகப் போடப்பட்டது. ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற ஆரம்பித்தாள். இன்று கல்லூரிப் படிப்பிலும் நன்முறையில் தேறி எம்.எஸ்.ஸி., பி.எட்., முடித்து, கல்கத்தாவில் 'மொஃபை' என்ற கம்பெனியில் நிர்வாகியாகப் பணிபுரிகிறார்.

ஆன்மீக வளர்ச்சி :

கல்வி வளர்ச்சியில் மட்டுமல்ல, குழந்தைகளின் ஆன்மீக வளர்ச்சியில், ஆர்வம் கொண்டவர்கள் சுசீலா. தமது பிள்ளைகள் வேத அறிவில் வளர்வதற்காக வீட்டிலே ஞாயிறு பள்ளி நடக்க ஏற்பாடு செய்தார். சகோதரர் ராபர்ட் சீமோனும், அவரது துணைவியாரும் வீட்டிற்கு வந்து வேதபாடம் எடுத்தார்கள். இவர்கள் குழந்தைகளோடு அருகிலுள்ள வீடுகளின் குழந்தைகளும் ஞாயிறு பள்ளியில் பங்கெடுத்தனர். சகோதரி சுசீலாவின் 4 பிள்ளைகளும் இரட்சிப்பின் நிச்சயத்தைப் பெற்றனர்.

"நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்தில் எவைகளைக் கேட்பீர்களோ, அவைகளையெல்லாம் பெற்றுக் கொள்வீர்கள்” என்ற வேதவாக்கில் பிள்ளைகளுக்கு நம்பிக்கையிருந்தது. மின்சாரம் தடைபட்டு விளக்கு அணைந்ததும் பிள்ளைகள் கண்களை மூடி, '*எங்களுக்கு விளக்கு வேண்டும் சாமி. மின்சாரம் சீக்கிரம் வரட்டும்” என ஜெபிக்கவும், மின்சாரம் வந்துவிடும் பிள்ளைகளின் சந்தோஷத்திற்கு அளவில்லை. உடனே நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு உண்டியலில் நன்றிக் காணிக்கைப் போடவும், பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்திருந்தார். ஜெபிக்கவும், துதிக்கவும், துணிந்து அர்ப்பணிக்கவும் பிள்ளைகள் கற்றிருந்தனர்.

அன்பு மகள் சபைன் வாக்குவாதம் பண்ணுவதில் சளைக்காதவள். அன்னையோ எதிர்வாதம் புரியாமல் அமைதி காப்பார்! மகளின் புகார் தந்தைக்குச் சென்றது. ''நீதி. 18:6'ஐ வாசி. வேதம் உன்னை வாக்குவாதம் செய்வது சரி எனச் சொன்னால் செய்'” என மகளுக்கு ஆலோசனை கூறினார்.

“சுசீலா வீட்டில் காலையுணவு பிடிக்கவில்லை எனப் பிள்ளைகள். சாப்பிடாவிட்டால், அதே உணவு மதியத்திற்கும் இருக்குமே தவிர, அந்த உணவை வீணாக்குவதில்லை, பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ கட்டாயம் அதைச் சாப்பிட வேண்டும். அந்தப் பிள்ளைகள் ஒழுக்கமான பிள்ளைகளாக, கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளாக வளர்ந்திருக்கிறார்கள். என் பிள்ளைகளுடைய விருப்பப்படியே கேட்டுக் கேட்டு சமைத்துக் கொடுத்தேன். இவர்கள் கீழ்ப்படியாதவர்களாகத்தான் வளர்ந்திருக்கிறார்கள்!'” என உறவினர் ஒருவர் கூறினார்.

மகள் மோனிகாவிற்கு தான் ஓர் ஆராய்ச்சியாளராக வரவேண்டுமென்பதில் அளவு கடந்த ஆசையிருந்தது. ஆனால் அன்னை, ''முழு நேர ஊழியர்களுக்குத் தான் இந்த வீட்டில் இடம். இந்தபார் குட்டி! நீ ஒப்புக் கொடுத்தையில்ல? நீ எப்படி மாறுவ? இங்க பார்! இந்த மூன்று பேரும் பசங்க! இவங்களே மாறலை! நீ எப்படி மாறுவ?'” ஆணித்தரமான கேள்வி மகளை தடுமாற வைத்தாலும், “'புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?'' திட்டமில்லாமல் எதையும் ஏற்றுக் கொள்ள அந்த வாலிப உள்ளம் முன் வரவில்லை. “இல்லை மம்மி! எனக்கு இன்னும் நிச்சயமில்லை!'' மோனிகாவின் பதில்.

“அதெப்படி? ஆண்டவர் அழைச்சார். அதெப்படி உனக்குத் தெரியாமல்போகும்?'” அன்னையின் கேள்வியில் அழுத்தம் இருக்கும். பேட்ரிக், '“நண்பர் சுவிசேஷ ஜெபக் குழுவில் முழுநேர ஊழியர்களுக்கும் இடமுண்டு. அதிக நேர ஊழியர்களுக்கும் இடமுண்டு. உலகப் பிரகாரமான (வேலை செய்து கொண்டே ஊழியம் பார்ப்பவர்கள்தான் அதிகம் நேர ஊழியர். நம் வீட்டில் அப்படி ஒருத்தர் இருக்கட்டுமே!” என சமாதானம் கூறினாலும்,

“ஆ... அதெல்லாம் முடியாது! அந்தப் பேச்சிற்கே இடமில்லை.” சுசீலாவின் கொள்கையில் அழுத்தமிருக்கும். மோனிகா இரட்சிக்கப்பட்டு, கர்த்தரின் பணியை நவோதயா குழுவின் மூலம் செய்தார்கள். இளம் பெண்கள் மத்தியில் சுவிசேஷப்பணி செய்தார்கள். எட்வர்ட் மெட்ரிகுலேசன் பள்ளியில் பணியாற்றும் போது, இடைவேளையின் போது பிள்ளைகள் மத்தியில் ஊழியம், ஆலயத்தில் வாலிபப் பெண்கள் மத்தியில் ஊழியம் என ஊழியம் செய்தாலும், முழுநேர ஊழியத்திற்குத் திட்டவட்டமான அழைப்பு பெறாமல் அடியெடுத்து வைக்க விருப்பமில்லை.

நல்லதொரு பாலம் :

தன் கணவருக்கும், பிள்ளைகளுக்குமிடையில் நல்லதொரு பாலமாக சுசீலா இருந்தார்கள். சிறுபிள்ளைகளாக இருக்கும் போதே,

“அப்பா ஏன் ஞாயிறு எல்லாம் ஊழியத்திற்குப் போறாங்க? ஏன் விடுமுறை நாட்களில் ஹாலிடே டிரிப்! வர மாட்டேங்கிறாங்க?!” என்று கேட்கும் பொழுதெல்லாம் ஊழியத்தின் அவசியத்தையும், அவசரத்தையும் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்வார்கள். முழுநேர ஊழியத்திற்கு பேட்ரிக் அவர்கள் ஒப்புக் கொடுக்கவும், ''அப்பா ஏன் இந்த திடீர் முடிவுக்கு வந்தார்கள்?” என்ற கேள்விக்கு ஊழியத் தேவையையும், தேவ கட்டளையையும் எடுத்துக் கூறி, தியாக வாழ்வுக்கு பிள்ளைகளை தயாராக்கினார்கள்.

அயனாவரத்தில் குடியிருந்தபோது சகோ. கிங்ஸ்லி குடும்பம் மாடியிலும், சுசீலா குடும்பம் கீழ்த்தளத்திலும் குடியிருந்தனர். அதுசமயம் மூன்று பிள்ளைகளுக்கும் 'டைபாய்டு' காய்ச்சல் வந்தது. பின் மஞ்சட் காமாலை வந்தது. முடிந்த போது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை கொடுத்தார்கள். பிள்ளைகள் மிகப் பலவீனமான நிலையிலும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவில்லை. ஆனால் சகோ. கிங்ஸ்லி அவர்களுடைய பிள்ளைகள் நோய்வாய்ப்பட்ட போது மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற ஆவன செய்தார்கள். மிஷனரிகள் மீதும், அவர்கள் பிள்ளைகள் மீதும் தணியாத பாசமும் அக்கரையும் கொண்டு செயல்பட்டனர்.

ஞானம் மிக்கவர்கள் :

ஒரு முறை வேலூர் பேராயர் மகனுடன் ஜிம் மோட்டர் பைக்கில் சென்றபோது கீழே விழுந்து காலில் கட்டுப் போட்டு வீட்டில் இருந்தான். சுசீலாவின் கணவர் பணித்தள விஜயம் முடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். சுசீலா, ஜிம் காரியத்தைக் கூறவில்லை. கணவர் குளித்து, உணவு அருந்திய பின், அருகில் அமர்ந்து மிக்க ஆர்வத்தோடு பேச ஆர்மபித்தார்கள்.

“பார்த்தீங்களாப்பா! நம்ம ஜிம்மும், பிஷப் மகனும் மோட்டர் பைக்கில் போனாங்களா... வழியில் ஒரு சின்னப் பள்ளம். பைக் போய் அதில் 'டக்'னு இறங்க, “டமார்'ன்னு இரண்டு பேரும் விழுந்திட்டாங்க! இப்ப கால்ல கட்டு'' மிக வேடிக்கையாக எங்கோ நடந்த கதைபோல், தமக்கே உரித்தான பாணியில். பேசினார்கள்.

“இப்ப ஜிம் எங்க சுசீ?” பேட்ரிக் ஆவலோடு கேட்க, “நம்ம வீட்ல அந்த ரூமில்தான் இருக்கிறான்!” சுசீலாவின் பதில்.

“இது சாதாரண காரியம். கவலைப்படாதீர்கள்!'” எனக் கூறாமல் கூறிவிடுவார்கள். இந்த உலகத்தில் பெரும்பாலும் கணவன் பணிமுடித்து வந்தவுடன், வீட்டில் இல்லாத பொருட்களைப் பற்றியும், பிள்ளைகளின் கீழ்ப்படியாமையையும், வீட்டுப் பிரச்சனைகளையும் கொட்டித் தீர்க்கும் மனைவியர்க்கு சுசீலா நல்ல பாடம் படித்துத் தருபவர்களாக இருந்தார்கள்.

வறுமையில் செம்மை :

ஒவ்வொரு மாதமும் சுசீலாவின் வீட்டிற்குத் தேவையான தானியம், பலசரக்கு சாமான்களை வாங்கித்தரும் அயனாவரம் ஜெபக்குழுத் தலைவர் சகோதரர் ஜெபதாஸ் அவர்களுக்கு சுசீலா அவர்கள் கொடுக்கும் பட்டியல் வியப்புக்குரியதாக இருக்கும். மிகக் குறைந்த அளவு சாமான்களைப் பார்ப்பவர், “அக்கா! இது 6 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு போதாது அக்கா!”' என்று ஆச்சரியமாகக் கூறுவார்.

“எங்களுக்கு இது போதுமானது அண்ணே!'” என்று அடக்கமாகக் கூறிவிடுவார்கள். தேவைக்குத் தக்க பட்ஜெட் அல்ல! அவர்களது வரவுக்குத் த்க பட்ஜெட் இது! சகோதரர் ஜெபதாஸ் அவர்கள் அக்கா குடும்பத்திற்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டுமெனத் துடிப்பார். அன்பு செலுத்தத் தவறாத அக்காவின் அன்பு உள்ளம் உதவிகளை மாத்திரம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. வீட்டிற்குத் தேவையான ஏதாவது ஒரு பொருளை சகோதரர் சுட்டிக்காட்டினாலும், “இது எங்களுக்குத் தேவையில்லை. அது இல்லாமலிருப்பதுதான் “வசதியாக இருக்கிறது'' என சிரித்துக் கொண்டே கூறிவிடுவார்கள்.

கொடுத்துச் சிவந்த கரங்கள் கை ஏந்த மறுத்ததில் வியப்பில்லையே!

பணமும் பயணமும் :

ஒருமுறை கிறிஸ்மஸ்க்கு உடை எடுக்க சகோதரி சுசீலா குடும்பம் பாரி முனைக்குச் சென்றனர். கிறிஸ்மஸ் உடைகள் எடுத்தபின் பஸ் நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தனர். பர்ஸைப் பார்த்த சுசீலாவின் கணவர் முகம் மாறியது. பாரீஸிலிருந்து புரசைவாக்கம் செல்ல வேண்டுமே, சில்லரைகளை எடுத்து எண்ணினார். சகோதரி சுசீலாவின் குடும்பத்தினருக்கு நிலைமை புரிந்தது. ஒருவரும் கவலைப்படவில்லை. மாறாக எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
“உங்க விசுவாசம் எங்க போச்சு?!” என்று மகள் கேட்க, இவருக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலையில், ஜிம்மும் பிராங்கோவும் இருந்த காசுகளை வாங்கிக் கொண்டு '“இரண்டு பஸ் நிறுத்தத்திற்கு முன் இறங்கி வீட்டிற்குப் போய்விடுவோம், நீங்கள். ரிக்ஷாவில் வாங்க!”” எனக் கூறிவிட்டு ““டாட்டா'” காட்டியபடி சிரித்தபடியே சென்றுவிட்டனர்.
பேட்ரிக் சைக்கிள் ரிக்ஷாவை அமர்த்தி, தன் மனைவியுடனும், மகளுடனும் பயணம் செய்தார். கொஞ்ச தூரம் ஓடிய ரிக்ஷா பழுதுபட்டு நின்று விட்டது. மீண்டும் பேட்ரிக் அவர்களுக்குப் பிரச்சனை! மனைவியின் முகத்திலோ, மகளின் முகத்திலோ எந்த விதக் கலக்கமும் இல்லை மீண்டும் சிரிக்க ஆரம்பித்தனர். “பயணம் செய்த தூரத்திற்குக் கூலி கேட்டால் என்ன செய்வது?" என அவர் யோசிக்க, ரிக்ஷாக்காரர் ''ஐயா! வேறு ஆட்டோ அமர்த்திக் கொள்ளுங்கள். எனக்குக் கூலி ஒன்றும் வேண்டாம்'” எனக் கூறி விட்டார். நிம்மதிப் பெருமூச்சு விட்ட பேட்ரிக், ஒரு ஆட்டோவை அமர்த்தி வீடு வந்து சேர்ந்து வீட்டிலிருந்த ரூபாயை எடுத்து ஆட்டோவிற்குக் கொடுத்தனர். சகோதரி சுசீலா அவர்களின் கணவர் மனதில் ஒரு பெரும் நிம்மதி ஏற்பட்டது. தன் மனைவியும், பிள்ளைகளும் எந்நிலையிலும், தான் கர்த்தருக்குள் நித்திரையடைந்தாலும் கர்த்தரை சார்ந்து விசுவாச வாழ்வு வாழ்வார்கள். எனவே நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் தேவ திட்டமோ... வேறுவகையில் அமைந்து விட்டது.

எடுப்பதில் அல்ல கொடுப்பதில் நிறைவு :

ஆலயத்தில் தவசு உற்சவ பண்டிகை நடக்கும் போது சுசீலா குடும்பத்தினர் அவர்களால் முடிந்த அதிகபட்ச தொகையை அதற்கென ஒதுக்குவர். அதில் சோப்பு, பெளடர், டின் போன்ற பொருட்களை வாங்குவர். அதை வைத்து, தாங்கள் ஆலயத்திற்கு தர விரும்புகிற “ஒரு பெரும் தொகையைக் கூறி விசுவாசத்தோடு ஜெபிப்பார்கள். பின் ஆலயத்தில் படைப்பார்கள். ஆராதனை, முடிந்து ஏலம் விடும்போது உற்சாகமாகக் கலந்து கொள்வர். ஏலம் விடும்போது பிள்ளைகள் தங்களைக் கவர்ந்த சில பொருட்களைக் காட்டி “மம்மி! அதை எடுப்போமா?'' என ஆவலோடு கூறும்போது “அது நமக்கு வேண்டாம்மா! வசதி படைத்தவர்கள் வாங்கட்டும்மா!'” என அன்போடு கூறி தடுத்து விடுவார்கள். பொருட்களை ஏலத்தில் எடுக்க தங்கள் பட்ஜெட் இடம் தராது என்பதைப் பிள்ளைகள் உணரும்படி தெரிவித்து விடுவார்கள். தாங்கள் ஆலயத்தில் படைத்த பொருட்கள் என்ன விலைக்குப் போகிறது என கவனித்து, தாங்கள் ஜெபத்தில் கூறிய தொகை வந்து விட்டதை அறிந்து மகிழ்வர்.

ஒரு பொருளும் எடுக்காவிடினும் இறைவனுக்குத் தாங்கள் விரும்பியபடி கொடுக்க முடிந்ததை எண்ணி துதித்து, பிள்ளைகளோடு பேசி, மகிழ்ந்தபடி வீடு திரும்புவர்.

தன்னைப் போல் பிறனையும் நேசித்தல் :

நண்பர் சுவிசேஷ ஜெபக் குழுவில் பணியாற்றி வந்த சகோதரர் தனபாலின் திருமணப் பேச்சு எழுந்தது. பெண் வீட்டார் தனபாலின் இளகிய நெஞ்சத்தையும், பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு இருக்கும் நிலைமையையும் புரிந்து கொண்டு, ஒன்றும் சரிவரச் செய்யாமல் திருமணத்தை முடித்துவிட முனைந்தனர். நிலைமையறிந்த சகோதரி, திருமணத்தை ஒழுங்கு செய்பவர்களோடு பேசி, நியாயமாக செயல்பட வைத்தார்கள். தனக்கொரு நீதி! பிறருக்கொரு நீதி! என்பதைக் கனவிலும் நினையாதவர்க் சுசீலா! எனவே தன்னைத் தாயாகக் கருதும் தனபாலின் திருமணத்தில் தாயின் நிலைமையில் செயல்பட்டார்கள். அது மாத்திரமல்ல! திருமணத்திற்கு வருவதற்கு ஆட்டோ ரிக்ஷாவை ஒழுங்கு செய்ய முன் வந்தபோது, அதைத் தடுத்து, பேருந்திலேயே பயணம் செய்து உரிய வேளையில் திருமண ஆராதனையில் பங்கெடுத்தார் சுசீலா! யாராயிருந்தாலும். வீண் செலவு ஏற்படுவதைத் தடுத்து விடுவார்கள்.

எதையும் தாங்கும் இதயம் :

சுகீலாகுடும்பம் முத்தையா செட்டியார் தெருவில் வசிக்கும்போது சுசீலாவின் அன்னைக்கு உடல்நிலை மிக மோசமான நிலையில் இருப்பதாக தந்தி வந்தது. சகோதரி சுசீலாவின் கணவர் ஊழிய காரியமாக வெளியூர் சென்றுவிட்டார். ஒரு வாரத்திற்கு முன் தன் அண்ணனிடமிருந்து வந்த கடிதத்தில் தாயின் நிலை குறித்து பயப்படத்தக்க விதத்தில் எதுவும் இல்லை. மேலும் சகோதரியின் கையில் காசும் இல்லை. எனவே தந்தியை அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஒரு வாரம் ஓடியதும், சகோதரியின் மாமியார், சகோதரியின் அன்னை கர்த்தருக்குள் நித்திரை அடைந்ததைக் குறித்து துக்கம் விசாரித்து கடிதம் எழுதியிருந்தார்கள்.. அந்தக் கடிதத்தைப் படித்தவர்கள் தன் தாய் பரம கானான் ஏகியதை அறிந்தார்கள். தன் கணவரும் வந்துவிடவே, குடும்பமாக அண்ணன் வீட்டிற்குச் சென்று விசாரித்து வந்தனர்.

தாயின் மரணத்திற்குக்கூட வர முடியாமல் போய்விட்டதே!'' எனப் புலம்பவோ, '*ஊழியத்திற்கு வந்ததால்தான் இப்படி நேரிட்டது'' எனக் குறை கூறவோ இல்லை. பாசமிகுதியால் கூட பரமனின் அன்பை பழிபோடவோ இல்லை அந்தப் பக்திப் பாவை.

இதன் தொடர்ச்சி  கோபுர தீபம்!  என்ற தலைப்பில் உள்ளது.

இந்த கதை அணையா தீபம் என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Anaiyaa Deepam - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download