கணவருக்கு மேகநோய் இருந்தது; அவரது கர்ப்பிணி மனைவிக்கு காசநோய் இருந்தது. அவர்கள் குழந்தையை கலைக்க வேண்டுமா? அப்படிச் செய்திருந்தால், சிறந்த இசையமைப்பாளரான பீத்தோவனை உலகம் பார்த்திருக்காது.
ஒரு கர்ப்பிணிப் பெண் கண்ணியத்துடனும், இரக்கத்துடனும், அக்கறையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். மோசே பிரமாணத்தின் கீழ் தேவன் அவர்களுக்கு விசேஷ பாதுகாப்பை வழங்கியுள்ளார். உலகம் முழுவதிலும் எடுத்துக் கொண்டாலும் மனிதர்கள் சண்டையிடும்போது, பெண்கள் தலையிட்டு தங்கள் ஆண்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். அதில் கைகலப்பு ஏற்பட்டு கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் அதன் பொறுப்பு குற்றவாளியே. குறைமாத குழந்தையாக பிறந்தால், குற்றவாளி அந்த ஸ்திரீயின் கணவரின் கோரிக்கையின்படி அபராதம் செலுத்த வேண்டும், அது நியாயாதிபதிகளால் அங்கீகரிக்கப்பட்டது. மற்ற சேதங்கள் ஏற்பட்டால், தண்டனை மிக கடுமையானது (யாத்திராகமம் 21:21-25).
தேவனின் அக்கறை:
தேவன் மென்மையானவர், கனிவானவர், இரக்கமுள்ளவர். இது மோசேயின் பிரமாணத்தில் தெளிவாகத் தெரிகிறது. ஒரு கர்ப்பிணிப் பெண் தேவன் நடத்துவது போல் கண்ணியத்தோடும், மென்மையோடும், அன்போடும், இரக்கத்தோடும் மற்றும் கனிவுடனும் நடத்தப்பட வேண்டும். தவறான நடத்தை அல்லது துஷ்பிரயோகம் தேவனால் பொறுத்துக்கொள்ளப்படாது.
பிரமாணத்தின் மூலம் பாதுகாப்பு:
சண்டையின் போது கூட ஒரு கர்ப்பிணிப் பெண்ணை தாக்கவோ அல்லது தீங்கு செய்யவோ கூடாது. தவறுதலாக பெண் அடிபட்டாலும், குற்றவாளி தண்டிக்கப்படுவார். குறைமாத குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்போது கூட, குற்றவாளிக்கு அபராதம் விதிக்கப்படும்.
பரிசுத்த வாழ்க்கை:
கர்ப்பிணிப் பெண்ணோ அல்லது அவரது குழந்தையோ காயப்படுத்தப்பட்டால், அதற்கு சமமான தண்டனை வழங்கப்படும். கர்ப்பம் கலைக்கப்பட்டாலும், குழந்தை இறந்து பிறந்தாலும், அது தண்டனைக்குரிய கொலையாகும். கர்ப்பிணிப் பெண் அல்லது பிறந்த குழந்தை ஊனமுற்றால், "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும்" (யாத்திராகமம் 21:24-25) என்று பிரமாணம் குறிப்பிடுகிறது.
கருக்கலைப்பு:
கருவுக்கு தீங்கு விளைவிப்பவர்களையோ அல்லது குறைமாத குழந்தையை கொடுமை செய்பவர்களை தேவன் நியாயந்தீர்த்தால், கருக்கலைப்பு செய்பவரையும் தேவன் கண்டிப்பாக தண்டிப்பார். கொலை செய்யாதிருப்பாயாக என்பது பத்து கட்டளைகளில் ஒன்றாகும் (யாத்திராகமம் 20:13). தவறான உறவு முறைகளினால் கருத்தரித்து பின்பு கருக்கலைப்பு போன்ற பாவச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பலர் உள்ளனர். இது விபச்சாரம் மற்றும் கொலை என இரண்டு பாவமாகின்றது. சில இளம் தம்பதிகள் வாழ்வின் முன்னேற்றத்தைக் முக்கியமானதாகக் கருதி, குழந்தை பிறப்பதைத் தள்ளிப் போட விரும்புகிறார்கள், அப்படி கருக்கலைப்பு செய்வதும் பாவம்.
பரிசுத்தமான வாழ்க்கையைக் குறித்த உணர்வு எனக்கு உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்