போதகர்கள் தங்கள் மந்தையின் மேய்ப்பர்கள், ஒரு நாள் தங்கள் பராமரிப்பில் உள்ள ஒவ்வொரு நபருக்கான கணக்கையும் கொடுப்பார்கள் (எபிரெயர் 13:17). குழந்தைகள் ஞாயிறு பள்ளி, இளைஞர் குழுக்கள் மற்றும் ஒரு அமைப்பின் பணியாளர்கள் போன்ற சிறு குழுக்களுக்கு தலைமை தாங்குபவர்களும் போதகர்களே என்பதை மறக்க கூடாது. இதன் அடிப்படையில் பொறுப்புக்கூறலில் குறைந்தது ஏழு பகுதிகள் உள்ளன.
ஆவிக்குரிய வளர்ச்சி:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கற்பித்த நற்செய்தி சத்தியங்களுக்கு கீழ்ப்படிய ஒவ்வொருவருக்கும் போதிக்க வேண்டும் என்று ஆவிக்குரிய தலைவர்கள் போதகர்கள் எதிர்பார்க்கிறார்கள் (மத்தேயு 28:18-20). “ஆடுகளை மேய்ப்பாயாக” (யோவான் 21:17) என்பதாக பேதுரு அறிவுறுக்கப்பட்டார். கிறிஸ்தவ தலைமைத்துவத்திற்கான தகுதிகளில் ஒன்று கற்பிக்கும் திறமை (2 தீமோத்தேயு 2:24). கற்பித்தல், கற்பித்தலைச் செயல்படுத்த வழிகாட்டுதல், மற்றவர்களுக்குக் கற்பிப்பதற்கான பயிற்சி ஆகியவை போகரின் முதன்மைப் பொறுப்புகளாகும். வார்த்தையைப் படிப்பது, ஜெபம், துதிகள், பரிந்து பேசுதல், ஐக்கியம், சாட்சி கொடுத்தல் மற்றும் ஊழியம் ஆகிய ஆவிக்குரிய துறைகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
சரீர நலம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை புதியதாக பின்பற்றுபவர்களுக்கு அடிப்படை சுகாதாரம் மற்றும் சரீர தகுதியும் கற்பிக்கப்பட வேண்டும். சீஷர்கள் தங்கள் சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அதை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். சோம்பேறித்தனம், ஒழுக்கமான உணவுப் பழக்கம் இல்லாமை, உடற்பயிற்சின்மை அல்லது சரீரத்தை சரியாக பராமரிக்காமல் இருத்தல் போன்றவற்றைக் கண்டித்துத் திருத்த வேண்டும்.
மன ஆரோக்கியம்:
ஊழியத் தலைவர்கள் அல்லது போதகர்கள் தேவ பிள்ளைகள் நல்ல மனதுடன், அமைதியான மனதுடன், புதுப்பிக்கப்பட்ட மனதுடன் இருக்க உதவ வேண்டும். அவநம்பிக்கையான எண்ணங்கள் மற்றும் கடந்த காலத்தையே நினைத்துக் கொண்டு இருத்தல் ஒரு விசுவாசிக்கு தீங்கு விளைவிக்கும். தேவையற்ற மன அழுத்தம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
குடும்ப வாழ்க்கை:
துரதிர்ஷ்டவசமாக, பிளவுபட்ட, பிரிந்த அல்லது விவாகரத்து செய்யப்பட்ட குடும்பங்கள் பல உள்ளன. பல கிறிஸ்தவ குடும்பங்களில் அமைதி இல்லை, பூமியில் ‘குட்டி பரலோகம்’ போன்ற அனுபவமும் இல்லை. காரணம் குடும்ப பலிபீடம் இல்லாதது மற்றும் ஊழியத் தலைவர்கள் அல்லது போதகர்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்றாக இணைந்து ஆவிக்குரிய வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.
நிதி:
சீஷர்கள் தெய்வபக்தியையும் மனநிறைவையும் இணைத்து, பெரும் ஆதாயத்தைப் பெறுகிறார்கள், அருட்பணிகளுக்காகக் கொடுக்கிறார்கள், பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேமித்து வைக்கிறார்கள்.
தொழில்சார் சிறப்பு:
ஊழியத் தலைவர்கள் அல்லது போதகர்கள் ஒவ்வொரு நபரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் படிப்பு, வேலை அல்லது வணிகத்தில் சிறந்து விளங்குவதை உறுதி செய்கிறார்கள்.
சமூக வாழ்க்கை:
சீஷர்கள் விசுவாசிகளுடன் வலுவான ஐக்கியம் மற்றும் இருளில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்ல மற்றவர்களுடன் சிறந்த நட்பைக் கொண்டுள்ளனர்.
நான் போதக கவனிப்பைப் பெறுகிறேனா மற்றும் கொடுக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்