ஜனங்களுக்கு மரணம் என்றாலே பயம், அதிலும் குறிப்பாக தொலைக்காட்சி சேனல்களில் 'பிரேக்கிங் நியூஸ்' என்று போடப்பட்டு 'உயிர் பிரிந்தது' அல்லது 'உயிர் பலி' என பார்த்தால் போதும் உலகத்தில் எங்கு அந்த மரணம் நடந்திருந்தாலும் பயம் கொள்கிறார்கள். இருப்பினும், மரணத்தைப் பற்றிய கிறிஸ்தவ கண்ணோட்டம் என்னவெனில்; "பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று" (வெளிப்படுத்துதல் 14:13).
1) பாக்கியவான்கள்:
கர்த்தராகிய இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் பாக்கியவான்கள். ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே நீதிமான்களாக்கப்பட்டுள்ளதால், பாவ மன்னிப்பு, குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலை, மனசாட்சி மற்றும் நித்தியத்தைக் குறித்த பயமின்றி உள்ளத்தில் ஏற்படும் சமாதானம் என்பதான உறுதி அவர்களுக்கு இருக்கிறது. ஆம், தாவீது கூறுவது போல "எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்" (சங்கீதம் 32:1,2). பாக்கியவான் என்றால் உலகில் செல்வச் செழிப்பாக வாழ்வது அல்லது உடைமைகளால் நிறைந்திருப்பது என்பது அல்ல, மாறாக ஜீவ புஸ்தகத்தில் நம் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் பரலோகத்தில் நமக்கு குடியுரிமை இருப்பது தான் ஆசீர்வாதம், பாக்கியம் எனலாம். உண்மையில், பரிபூரண ஆசீர்வாதம் என்பது இந்த உலகில் சாத்தியமற்றது, ஆனால் இந்த உலகில் 'பாக்கியவானாக இருக்கும் உறுதி' அளிக்கப்பட்டுள்ளது.
2) இளைப்பாறுதல்:
பரலோகத்தில், விசுவாசிகள் தங்கள் பிரயாசங்களிலிருந்து அதாவது தொடர் ஓட்டங்களிலிருந்து இளைப்பாறுதல் அடைவார்கள்; அதாவது உழைப்பு, பதற்றம், வலி, கண்ணீர், துன்பம், இழப்பு, நோய், சண்டைகள், தோல்விகள் எனப் பல்வேறு வகையான உலக ஓட்டங்கள் உள்ளனவே; இவை அனைத்தும் விரக்தியைத் தருகின்றன, மேலும் இவை ஓய்வையோ அல்லது சமாதானத்தையோ அளிப்பதில்லை. பரிபூரணமற்ற உலக வாழ்வில் சமாதானத்திற்காக ஏங்கும் நிலைதான் காணப்படுகிறது. தேவனுடைய நித்திய பிரசன்னத்தில், சமாதானம், சந்தோஷம், ஆராதனை மற்றும் இளைப்பாறுதல் உள்ளது.
3) பலன்:
நாம் வேறொரு நாட்டிற்குச் செல்லும்போது, பணத்தை அந்நாட்டின் முறைமைக்கு மாற்ற வேண்டும். ரூபாய்கள் டாலர்கள் அல்லது பவுண்டுகள் அல்லது யூரோக்கள் எனப் போன்று மாற்றப்பட வேண்டும். ஆம், அதே போன்ற பரிமாற்றம் தான் நாம் பரலோகத்திற்குச் செல்லும்போது செய்யப்படலாம். பூமிக்குரிய செல்வத்தை பரலோகப் பொக்கிஷங்களாக மாற்ற முடியும் என்று கர்த்தராகிய இயேசு நமக்குக் கற்பித்துள்ளார் (மத்தேயு 6:19-21). "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்" (லூக்கா 16:9) எனக் கர்த்தராகிய இயேசு கூறியுள்ளார். உண்மைத்தன்மைக்கு கர்த்தரின் பலன்கள் ஆச்சரியமானவை, அதில் கிரீடங்கள், முத்துக்கள் பதித்த கிரீடங்கள் அடங்கும். நன்றாக நினைவில் கொள்வோம்; கர்த்தருக்காக நாம் படுகின்ற பிரயாசங்கள் எதுவும் வீண்போகாது (விருதாவாயிராது) என்று கர்த்தர் நமக்கு உறுதியளித்துள்ளார் (I கொரிந்தியர் 15:58).
இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாக்குத்தத்தால் நான் மகிழ்ச்சியடைகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran