தேவன் மனிதர்களை நேசித்தார் என்பது ஏதேன் தோட்டத்தில் தெளிவாகத் தெரிகிறது. ஆதாமும் ஏவாளும் தடைசெய்யப்பட்ட பழத்தை உண்பதன் மூலம் பாவம் செய்தபோது தேவன் அவர்களைத் தண்டித்தார், ஆனால் அவர்களை ஒழிக்கவில்லை. கம்ப்யூட்டரில் தேவையில்லாததையெல்லாம் அழித்தவுடன் அது நேராக trashக்கு செல்வது போல் தேவன் தனது படைப்பை முற்றிலும் அழித்து விட்டு, மீண்டும் அனைத்தையும் உருவாக்கியிருக்கலாம். ஆனால் அவர் ஒரு நபர் கூட அழிந்து விடக்கூடாது என்பதில் அக்கறையுள்ளவராக இருப்பதால் அவ்வாறு செய்யவில்லை (2 பேதுரு 3:9).
1) சுய விருப்பம்:
ஆதாம் மற்றும் ஏவாளுக்கு சுய விருப்பத்தை வழங்குவதன் மூலம் தேவன் ஒரு அபாயத்தை (risk) துணிந்து எடுத்தார் எனலாம். தேவனுக்கு பயப்படுவதும், கீழ்ப்படிவதும் அவர்களின் சுய தெரிவாக இருக்க வேண்டுமே தவிர கட்டாயத்தால் அல்ல.
2) மீட்பு:
ஆதாமும் ஏவாளும் தோல்வியுற்றால் மீட்பின் திட்டத்தை செயல்படுத்த தேவன் தயாராக இருந்தார். அத்திட்டத்தில் தேவ குமாரனின் மாம்சமாகுதல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் என எல்லாம் அடங்கும், நிச்சயமாக அதில் தேவனால் மீட்கப்பட்ட சபையும் அடங்கும். எனவே, உலகத்தோற்றத்துக்கு முன்பே விசுவாசிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக பவுல் எழுதுகிறார் (எபேசியர் 1:4).
3) நேரில் கண்ட சாட்சிகள் இல்லை:
தேவன் சிருஷ்டித்ததிற்கு நேரில் கண்ட மனித சாட்சிகள் இல்லை. ஒருவேளை தேவன் ஆதாம் ஏவாள் உட்பட தன் முழு சிருஷ்டிப்பையும் அழிக்க முடிவு செய்திருந்தாலும் அதற்கும் நேரில் கண்ட சாட்சிகள் இல்லை. ஒருவேளை, தேவதூதர்கள் அறிந்திருக்கலாம், சாத்தானுக்கும் தெரிந்திருக்கும்.
4) பிரபஞ்ச விளைவு:
தேவன் முதல் ஜோடியை அழித்திருந்தால், அது தேவதூதர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். தேவதூதர்கள் பயத்தில் இருந்திருப்பார்கள், அன்பு இருந்திருக்காது.
5) யாருக்கும் பொறுப்பு இல்லை:
தேவன் தன்சார்புள்ளவர், நித்தியமானவர் மற்றும் இறையாண்மை கொண்ட கடவுள், அவரது செயல்களுக்கு அவர் கணக்கு கொடுக்க தேவையில்லை. இருப்பினும், அவரது அணுகுமுறை, நடவடிக்கைகள் மற்றும் நடக்கை என அனைத்தும் அவரின் செயல்களோடு நிலையானது.
6) தோல்வியை ஒப்புக்கொள்ளுதல்:
மனித இனத்திற்கான தேவ திட்டத்தையும் நோக்கத்தையும் அழித்திருந்தால் சாத்தான் மகிழ்ச்சியடைந்திருப்பான். சாத்தான் போன்ற அற்பமான ஜந்து தேவனின் பெரிய திட்டத்தை சிதைக்க விரும்பினான். தேவனையோ அல்லது அவருடைய நோக்கத்தையோ தோற்கடிக்க எவராலும் முடியாது.
7) அன்பு:
ஒரு பெண்ணின் வித்தாகிய மீட்பரும் இரட்சகருமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் முழு மனிதகுலத்தை மன்னித்தும், உடுத்துவித்தும், ஆண்டவரை பலியாக அளித்ததன் மூலமும் தேவன் தம் அன்பை விளங்கப் பண்ணினார் (ஆதியாகமம் 3:15).
தேவன் மனிதர்கள் மீது வைத்திருக்கும் அன்பின் ஆழம் என்னவென்று எனக்குப் புரிகிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்