மற்றவர்களின் சாதனையை நம் சாதனை போல் சொல்வது என்பது பொதுவானது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், விஞ்ஞானிகள், வணிகர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பலர். துரதிர்ஷ்டவசமாக, சிலர் தேவனின் செயலில்கூட தங்களுக்கு பெருமை சேர்க்க விரும்புகிறார்கள். “கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மைபாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே” (ஏசாயா 10:15) என ஏசாயா தீர்க்கதரிசி எழுதுகிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கருவிகள்:
பவுல் தேவனின் தெரிந்தெடுக்கப்பட்ட கருவி அல்லது பாத்திரம் (அப்போஸ்தலர் 9:15). தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் அவருடைய கருவிகளே. தேவன் தனது ஜனங்கள், அவரது கருவிகள் மூலம் இந்த உலகில் கிரியைச் செய்கிறார். கொர்நேலியு நற்செய்தியைப் பிரசங்கிக்க தேவன் பேதுருவை தனது கருவியாகத் தேர்ந்தெடுத்தார், இருப்பினும் சீமோன் பேதுருவைப் பற்றிய விவரங்களை அறிவிக்க ஒரு தேவதூதன் அனுப்பப்பட்டார் (அப்போஸ்தலர் 10).
ஆராதனைக்கான கருவிகள்:
தேவன் தம்முடைய மக்களை ஆராதிப்பவர்களாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். “சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா” (சங்கீதம் 150:6). தேவன் எல்லா ஆராதனைகளுக்கும், துதிகளுக்கும், நன்றி செலுத்துவதற்கும் தகுதியானவர். தேவதூதர்கள் உட்பட சிருஷ்டிக்கப்பட்டோர் அனைவரும் அவர் முன் முடங்க வேண்டும். சீஷர்கள் மகிழ்ச்சியுடன் அவரை வணங்குகிறார்கள். அவரை நிராகரிக்கும் மற்றவர்களும் கர்த்தராகிய இயேசுவை ஆண்டவராக ஒப்புக்கொள்வார்கள், அறிக்கையிடுவார்கள் (பிலிப்பியர் 2:10-11).
நீதியின் கருவிகள்:
உலகில் இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளன என்று பவுல் கூறுகிறார். மனிதர்கள் விருப்பப்பட்டோ அல்லது விருப்பப்படாமலோ சாத்தானின் கைகளில் அநீதியின் கருவிகளாக மாறலாம் அல்லது தேவனின் கைகளில் விருப்பமுள்ளவர்களாக நீதியின் ஆயுதங்களாக தேவனின் கரங்களில் மாறலாம் (ரோமர் 6:13). தேவ ஜனங்கள், சபையோர், அப்போஸ்தலர்கள் மற்றும் மிஷனரிகள் புதிய பகுதிகளுக்குச் சென்று உலகத்தையே தலைகீழாக மாற்றினர். உலகின் எந்தப் பகுதியிலும் கல்வி முன்னேற்றம், சமூக அமைதி மற்றும் பொருளாதார உயர்வு இருந்தால் அங்கே உழைத்த மிஷனரிகளின் கல்லறையும் இருக்கும்.
அறிவிக்கும் கருவிகள்:
அனைத்து சீஷர்களும் அவருடைய சாட்சிகளாக இருக்க அழைக்கப்பட்டுள்ளனர் (அப்போஸ்தலர் 1:8). தன்னுடைய நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி அல்லது எழுத்தாளரின் பேனாவைப் போன்றது என்று சங்கீதக்காரன் எழுதுகிறான் (சங்கீதம் 45:1). உலகிற்கு நற்செய்தியை அறிவித்தல் என்பது விசுவாசிகள் மீது விழுந்த கடமை. அப்படி மனிதர்கள் பேசாமல் இருந்தால் கற்கள்கூட பேசி விடும் (லூக்கா 19:39-40). ஆம், மைக்ரோசிப் வடிவில் மணலால் செய்யப்பட்ட சிலிக்கான் அவருடைய மகிமையை பறைசாற்றுகிறது அல்லவா.
அவருடைய கரங்களில் அவருடைய பரிசுத்த கருவிகளாக இருக்க நான் பணிவுள்ள ஒரு நபரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்