பெரும்பாலும் மாபெரும் ஆணை மற்றும் மாபெரும் கட்டளை பற்றி ஒரு நினைவூட்டல் உள்ளது. மாபெரும் ஆணை என்பது "நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷர்களாக்க வேண்டும்" என்பதாகும் (மத்தேயு 28:18-20). சீஷர்கள் கர்த்தரை தங்கள் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் நேசிக்கவும், தங்களைப் போலவே அண்டை வீட்டாரையும் நேசிக்கவும் அழைக்கப்படுகிறார்கள் (மத்தேயு 22:36-40). இருப்பினும், ஒரு பெரிய தேவை உள்ளது, அது பொதுவாக புறக்கணிக்கப்படுகிறது. "மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்" (மீகா 6:8). தேவ ஜனங்கள் நல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசனத்தில் மீகா தேவனின் மூன்று தேவைகளைப் பற்றி எழுதுகிறார்.
நியாயம் செய்:
தேவன் நீதியுள்ளவர், அவர் நீதியை விரும்புகிறார் (சங்கீதம் 11:7). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் நீதியை நிலைநாட்டுவதில் தீவிரமாக ஈடுபட வேண்டும். முதலாவதாக, தனிப்பட்ட வாழ்க்கையில், எப்போதும், எல்லா இடங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் நியாயமான அல்லது சரியானதைச் செய்ய முயற்சி செய்ய வேண்டும். இரண்டாவதாக, விசுவாசிகள் குடும்பத்தில் உள்ள உறவுகளில் தேவ நீதியை வெளிப்படுத்த வேண்டும். மனைவி, குழந்தைகள், உற்றார் உறவினர்களுடன் நியாயமாகவும் அக்கறையுடனும் இருப்பது மிக முக்கியம். மூன்றாவதாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் சமுதாயத்தில் நீதியையும் நியாயத்தையும் வெளிப்படுத்த வேண்டும். மேலும், அவர்கள் கலாச்சாரம் அல்லது மரபுகள் அல்லது சட்டத்தால் மறுக்கப்படும் சமூக நீதி உட்பட நீதியை, முன்னெடுத்து அல்லது நிலைநாட்டுபவர்களாக இருக்க வேண்டும்.
இரக்கம் காட்டு:
தேவன் தம்முடைய மக்கள் மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்றும்; இரக்கத்துடனும் கருணையுடன் இருப்பது ஒரு பழக்கமாகவும் இயல்பான காரியமாகவும் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். நல்ல சமாரியன் உவமை இரக்கம் காட்டுதலுக்கான நுண்ணறிவுகளை வழங்குகிறது. முதலில், இறக்கும் தருவாயில் இருக்கும் நபரிடம் இரக்கம் காட்டுதல்; அவசர உதவி. இரண்டாவது, ஆபத்தான சூழ்நிலையில் இருப்பவர்களிடம் காட்டும் இரக்கம். கொள்ளைக்காரர்கள் அந்த பரிதாபத்திற்குரிய மனிதனை காயப்படுத்தி கொள்ளையடித்தனர். மூன்றாவது , அந்நியரிடம் காட்டும் இரக்கம். காயப்பட்ட மனிதன் உறவினர் அல்லது அவரது இனம் அல்ல. நான்கு, திரும்ப பதில்செய்ய முடியாதவர்களுக்கு இரங்குதல்; அதாவது பிரதி உபகாரம் எதிர்பார்த்து உதவி செய்தல் சரியல்ல.
தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையுடன் நடங்கள்:
தேவன் தனது ஜனங்கள் கர்த்தருக்கு முன்பாக தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார், இது உலகில் தாழ்மையான நடத்தையில் நிரூபிக்கப்பட்டும் உள்ளது. மனத்தாழ்மையுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள் (மத்தேயு 5:5). மனத்தாழ்மையுள்ள ஒருவரால் மட்டுமே மற்றவர்களின் பாரத்தைச் சுமக்க முடியும் (கலாத்தியர் 6:2). பணியாளர் மனப்பான்மை மனத்தாழ்மையின் விளைவாகும். தாழ்மையுடன் இருப்பவர்கள், மற்றவர்களிடம் பாகுபாடு காட்ட மாட்டார்கள். அவர்கள் தங்களை விட மற்றவர்களை முக்கியமானவர்களாக அல்லது மேன்மையானவர்களாக எண்ணுகிறார்கள், மதிக்கிறார்கள் (பிலிப்பியர் 2:3).
நான் அநுதினமும் தேவனுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றும் நபராக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்