கிபியோன் எருசலேமுக்கு வடக்கே உள்ள ஒரு பழமையான கானானிய நகரம். கிபியோனில் வசிப்பவர்கள் ஏவியர்கள் மற்றும் எமோரியர்கள். (யோசுவா 10:12; 11:19; II சாமுவேல் 21: 2). அவர்கள் காமின் பிள்ளைகளும் மற்றும் நோவாவின் பேரப்பிள்ளைகளுமான கானானிய சந்ததியினர். இன்று நகரத்தின் மிச்சங்கள் பாலஸ்தீன கிராமமான அல்-ஜிப் (Al-Jib) அருகே அமைந்துள்ளது.
1) மோசடி:
கிபியோனியர்கள் தொலைதூர இடத்திலிருந்து வந்த பயணிகளாக இஸ்ரவேலரிடம் நடித்தனர், தங்கள் அப்பம் உலர்ந்து பூசணமாயிட்டதாகவும், உடைகள் மற்றும் செருப்புகள் கிழிந்தும் பழசாக போய்விட்டது போல அதை ஆதாரமாகக் காட்டி நாடகமிட்டனர்.
2) உடன்படிக்கை:
யோசுவா தேவனை கலந்தாலோசிக்காமல் யெகோவாவின் பெயரில் சத்தியம் செய்து கிபியோனியர்களுடன் ஒரு உடன்படிக்கையை அல்லது சமாதான ஒப்பந்தத்தையும் நிறைவேற்றினான். தேவன் அவர்களை சங்காரம் தான் பண்ணச் சொல்லிருந்தாரே தவிர சமாதானமாக போக தடை விதித்திருந்தார். ஆனால், யோசுவா அறிந்தோ அறியாமலோ ஒரு தவறை செய்கிறான் (உபாகமம் 20: 16-18).
3) தண்டனை:
இப்படி உடன்படிக்கையெல்லாம் செய்து முடித்த பின்புதான் இஸ்ரவேலருக்கு தெரிந்தது, கிபியோனியர்கள் அயலார்கள் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கண்டுபிடித்தனர், மூன்று நாட்கள் பிரயாணத் தூரத்தில் தான் அவர்கள் வாழ்ந்தனர் (யோசுவா 9:17). பின்பு தான் ஐயோ இப்படி யெகோவாவின் பெயரில் சத்தியம் செய்து விட்டேனே என தன் முட்டாள்தனத்தை உணர்ந்தான் யோசுவா. இனி அவனால் அந்த உடன்படிக்கையை ரத்து செய்ய முடியாது. தங்களை வஞ்சித்து விட்டார்களே என்ற கோபத்தில் யோசுவா அவர்களை "இப்போதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்துக்கு விறகுவெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான பணிவிடைக்காரராயிருப்பீர்கள்; இந்த ஊழியம் உங்களைவிட்டு நீங்கமாட்டாது என்றான்" (யோசுவா 9:23). இவ்வாறு கிபியோனியர்கள் இஸ்ரவேலுடன் ஒருங்கிணைந்தனர்.
4) உடன்படிக்கை மீறப்பட்டது:
400 க்கும் மேற்பட்ட வருடங்களுக்குப் பிறகு, சவுல் ராஜா கிபியோனியர்களை இஸ்ரவேல் மற்றும் யூதாவுக்கான தனது தேவையற்ற வைராக்கியத்தினால் முற்றிலுமாக அழிக்க முடிவு செய்தான் (2 சாமுவேல் 21: 1). ஒருவேளை, சவுலும் அவனது குடும்பத்தாரும் இந்த இனப்படுகொலையை செய்திருக்கலாம். யூத பாரம்பரியத்தின் படி, இது நோபிலிருக்கிற ஆசாரியர்களை கொன்றதைப் போன்றது (1 சாமுவேல் 22: 6-19).
5) பஞ்சம்:
தாவீதின் காலத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. உடன்படிக்கையை மீறியதே அந்த பஞ்சத்திற்கு காரணம். எஞ்சியிருக்கும் கிபியோனியர்களை தாவீது அழைத்தான். தங்கள் உறவினர்களின் மரணத்திற்குப் பழிதீர்ப்பதற்காக சவுலின் ஏழு ஆண் சந்ததியினரைக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
6) தீர்மானம்:
தாவீது அர்மோனியையும், மேவிபோசேத்தையும் (யோனத்தானின் மகன் அல்ல, அவனுடன் தாவீது உடன்படிக்கை செய்திருந்தானே (II சாமுவேல் 21: 1-9)) மற்றும் சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப்பெற்ற அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்து ஒப்படைத்தான். கிபியோனியர்கள் அவர்களை மலையிலிருந்து தூக்கிப்போட்டனர். பிறகு பஞ்சம் தீர்ந்தது.
உடன்படிக்கை செய்வதற்கு முன் தேவனுடைய விருப்பத்தை அறிவது அவசியம். திருமண உடன்படிக்கையில் கூட, நல்ல ஆராய்ச்சி செய்ய வேண்டியது என்பது பொறுப்பான விஷயம். உடன்படிக்கையை மீறுவது பல விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு தேசம் 400 வருடங்களுக்குப் பிறகும் உடன்படிக்கையை மீற முடியாது.
நான் என் வாக்குறுதிகளையும் உடன்படிக்கைகளையும் நிறைவேற்றுகிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran