உலகில் மக்கள் உணர்வுசார் புத்திசாலித்தனம் (EQ), உடல்சார் புத்திசாலித்தனம் (PQ), கலாச்சார புத்திசாலித்தனம் (CQ), ஆபத்து கால புத்திசாலித்தனம் (AQ) மற்றும் ஆவிக்குரிய புத்திசாலித்தனம் (SQ) என அனைத்திலும் அதிக புத்திசாலித்தனம் மற்றும் அறிதிறன் ஈவு (IQ) ஆகியவற்றைக் கொண்டிருக்க விரும்புகிறார்கள். ஆனால் தற்காக்கும் மற்றும் நேசிக்கும், பாதுகாக்கும் ஞானத்தையும், நுண்ணறிவையும் பெற வேதாகமம் கற்பிக்கிறது (நீதிமொழிகள் 4:6-9). ஆம், கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம் (நீதிமொழிகள் 9:10).
வாட்ஸ் அப்பில் வந்த சமீபத்திய செய்தி, புத்திசாலித்தனத்திற்கும் ஞானத்திற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை வழங்குகிறது.
1. புத்திசாலித்தனம் வாதங்களுக்கு / சர்ச்சைக்கு வழிவகுக்கிறது. ஞானம் தீர்வுக்கு வழிவகுக்கிறது.
2. புத்திசாலித்தனம் என்பது விருப்பத்தின் மீது ஒரு ஆளுகை. ஞானம் என்பது விருப்பத்தை மேற்கொள்ளும் அதிகாரம்.
3. புத்திசாலித்தனம் அனல்மூட்டும், பற்றியெரியும். ஞானம் என்பது அரவணைப்பு, அது ஆறுதல்.
4. புத்திசாலித்தனம் என்பது அறிவின் நாட்டம்; அது தேடுபவரை சோர்வடையச் செய்கிறது. ஞானம் என்பது சத்தியத்தின் நாட்டம்; அது தேடுபவரை ஊக்குவிக்கிறது.
5. புத்திசாலித்தனம் தக்க வைக்கும். ஞானம் தேங்கி விடாமல் தொடர்ந்து ஓடச் செய்கிறது.
6. புத்திசாலித்தனம் வழி காட்டுகிறது. ஞானம் வழிநடத்துகிறது.
7. ஒரு புத்திசாலி மனிதன் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறான். இன்னும் கற்க வேண்டிய ஒன்று இருக்கிறது என்பதை ஞானவான் அறிவான்.
8. ஒரு புத்திசாலி மனிதன் எப்போதும் தன் கருத்தை நிரூபிக்க முயல்கிறான். ஞானவானோ அர்த்தமற்ற காரியங்களில் அலட்டுவதில்லை.
9. ஒரு புத்திசாலி மனிதன் அறிவுரைகளை இலவசமாகவே வாரி வழங்குகிறான். அனைத்து தெரிவுகளும் பரிசீலிக்கப்படும் வரை ஞானவான் தனது ஆலோசனையைக் காத்துக் கொள்வான்.
10. ஒரு புத்திசாலி மனிதன் சொல்வதைப் புரிந்துகொள்கிறான். ஞானவானோ சொல்லப்படாததையும் புரிந்துகொள்கிறான்.
11. ஒரு புத்திசாலி மனிதன் எல்லாவற்றையும் பேசுகிறான். ஒரு ஞானவானோ தனக்கு ஏதாவது சொல்ல வேண்டியிருக்கும் போது மட்டுமே பேசுகிறான்.
12. புத்திசாலி மனிதன் எல்லாவற்றையும் சம்பந்தப்படுத்துகிறான். ஒரு ஞானவானோ தேவையானதை மட்டுமே தொடர்புபடுத்துகிறான்.
13. ஒரு புத்திசாலி மனிதன் வெகுஜன ஓட்டத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கிறான். ஒரு ஞானவானோ வெகுஜன ஓட்டத்தை வழிநடத்துகிறான்.
14. ஒரு புத்திசாலி மனிதன் பேசுவதோடு நிறுத்தி விடுகிறான். ஒரு ஞானவானோ செய்தியைக் கொண்டு சேர்க்கிறான்.
15. புத்திசாலித்தனம் உங்களை பணக்காரராக்கலாம், ஆனால் ஞானம் உங்களை சந்தோஷமாக இருக்க உதவும்.
16. புத்திசாலித்தனம் உங்களை கர்வமடையச் செய்யலாம், ஆனால் ஞானம் உங்களைத் தாழ்மையாக்கும்.
"பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது" (யாக்கோபு 3:17-18). புத்திசாலித்தனம் நல்லது, ஆனால் ஞானம் சிறந்தது.
பரத்திலிருந்து வரும் ஞானத்தால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்