ஆதாமும் ஏவாளும் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டனர் (ஆதியாகமம் 3). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய மாம்சமாகுதல், மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் ஆகியவற்றின் மூலம் தேவனோடு ஒப்புரவாகச் செய்து பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவித்துள்ளார்.
சந்தேகம்:
தந்திரமான சாத்தான் நாம் எதை மதிப்புகளாக அல்லது மேன்மையாக வைத்திருக்கிறோம் என்பதை அறிய விரும்புகிறான். பின்னர் அதைக் கொண்டு ஏமாற்ற முயலுகிறான். சாத்தானின் வஞ்சனையே நமக்கு அவன் மீது சந்தேகம் வராதபடி பார்த்துக் கொள்வதும், ஆனால் தேவனையும் அவருடைய வார்த்தையையும் சந்தேகிக்க வைப்பதாகும்.
விருப்பம்:
அவன் தேவனால் தடைசெய்யப்பட்ட பழத்தை உண்ணும் ஆசையையும் அல்லது காரணத்தையும் உருவாக்கினான். ஆதாமும் ஏவாளும் நன்மை தீமைகளை அறியும் திறனைப் பெறுவார்கள். தீமை எது என்பதை அறியும் ஆவல் இருப்பினும், இதுவரை தீமை என்ற ஒன்றை அவர்கள் கேட்டதில்லையே.
மகிழ்ச்சி:
ஏவாளுக்கு பழத்தை சாப்பிடுவது மகிழ்ச்சியாகவும், ஏதோ கனவுகளை அடைவது போலவும் நினைத்தாள். ஏவாளுக்கு பழம் இனிமையாகவும், ஈர்ப்பதாகவும் மற்றும் சுவையிலும் ஏகாந்தமாய் இருப்பதாக உணர்ந்தாள்.
கனவுகள்:
நிறைவேறாத கனவுகளை கடத்துவது சாத்தானின் கேவலமான தந்திரம். முதல் ஜோடி தேவர்களைப் போல மாற முடியும் என்று சாத்தான் வாக்குறுதி அளித்தான். ஆனால், தேவர்களைப் போல இருப்பதன் அர்த்தம் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. அது வெறும் கற்பனை அல்லது ஊகம். ஆதாமையும் ஏவாளையும் மெய்மறக்கச் செய்த கனவை நிறைவேற்றும் சக்தியோ திறனோ சாத்தானுக்கு இல்லை.
கீழ்ப்படியாமை:
அவர்கள் தேவனின் கட்டளையையும் சத்தியத்தையும் புறக்கணித்து சாத்தானின் வஞ்சக வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள். இந்த தெரிவு தெரிந்தே எடுக்கப்பட்டது மற்றும் முட்டாள்தனமானது, இது மனிதகுலத்தின் வீழ்ச்சி என்று விவரிக்கப்படுகிறது.
மரணம்:
அவர்களுக்குள் ஏதோ மரணித்து விட்டது, ஆம், அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை இழந்தார்கள். மேலும் தேவனை துதிப்பதற்கும், தேவனுடன் தொடர்புகொள்வதற்கும், அவருடைய சித்தத்தைச் செய்வதற்குமான அனைத்தையும் இழந்தார்கள். அதற்கான சான்று என்னவென்றால் அவர்களின் பயம், நிர்வாண உணர்வு மற்றும் அவமானம் மற்றும் குற்ற உணர்ச்சி ஆகியவை அவர்களை தேவனின் கண்ணில் படாமல் ஒளிந்திருக்கச் செய்தது.
பேரழிவு:
பரிசுத்த தேவன் ஆதாமையும் ஏவாளையும் மன்னிக்க முடியாது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தேவனிடமிருந்து நித்திய பிரிவினைக்கும், சாத்தான் மற்றும் விழுந்த தேவதூதர்களுடன் சேர்ந்து அக்கினி கடலில் அவர்கள் தள்ளப்பட்டிருக்க வேண்டும்; அதற்கே அவர்களுக்கு தகுதியுள்ளது.
மீட்பு:
தேவன் தம் இரக்கத்தின்படி மீட்பர் பாவத்திற்கு பரிகாரம் செய்வார் என்று வாக்குறுதி அளித்தார். பாவத்தின் தண்டனையை, மரணத்தை தன்மீது சுமந்துகொள்ளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி வாக்குத்தத்தம் சுட்டிக்காட்டப்பட்டது.
உலகின் பெரும்பான்மையான மக்கள் ஏமாற்றுபவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
நான் ஏமாற்றுபவரைப் பின்பற்றுகிறேனா அல்லது நித்திய மீட்பரைப் பின்பற்றுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்