உலகில், விசுவாசிகள் வளர, முன்னேற, பகுத்தறிந்து கொள்ள, தேவ நோக்கத்தை நிறைவேற்ற தேவன் வெவ்வேறு நபர்களைப் பயன்படுத்துகிறார். இப்படித்தான், தாவீதின் வாழ்க்கையிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவனை ஐந்து முக்கிய ஆளுமைகள் வடிவமைத்தனர்.
சாமுவேல்:
தாவீதின் தந்தை ஈசாய், சாமுவேலால் அபிஷேகம் செய்ய தகுதியுடையவர்களா என்று பார்க்க அனைத்து சகோதரர்களையும் அணிவகுத்தான். ஆயினும்கூட, அவன் தாவீதை வரவழைக்கவில்லை, ஒருவேளை, தனக்கு இப்படி ஒரு மகன் இருப்பதையே மறந்துவிட்டானா என்ன! ஈசாயிக்கு இன்னொரு மகன் இருக்கிறானா என்று சாமுவேல் தன்மையாகக் கேட்க வேண்டியிருந்தது (1 சாமுவேல் 16:1-13). சாமுவேலைப் போல் தேவ செய்தியை கொண்டு செல்லும் ஒருவர் அனைவருக்கும் தேவை. உண்மையில், ஒருவர் சீஷராவதற்கு நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள ஒரு நபர் வேண்டும்.
கோலியாத்:
பெலிஸ்தியர்களின் ராட்சதர் போர் விதிகளை மாற்றி, இஸ்ரவேலர்களில் ஒருவரை மாத்திரம் தனி ஆளாக சண்டைக்கு வருமாறு கோரினான். சேனைகள் நடுங்கியது, சவுல் ராஜாவும் நடுங்கினான். கோலியாத் எல்லாவற்றையும் வம்புக்கு இழுத்ததும் அவன் பெருமையும் தாவீதைத் தூண்டியது, ஏனெனில் அவன் கர்த்தருக்காக வைராக்கியமாக இருந்தான். கோலியாத் தாவீதின் மறைந்திருந்த தெய்வீகத் திறனை வெளிக்கொணர்ந்தான் என்றே சொல்ல வேண்டும். சிறிய தாவீது மாபெரும் கோலியாத்தை தோற்கடித்தது மிகவும் விரும்பப்படும் வரலாற்று நிகழ்வு அல்லவா (1 சாமுவேல் 17:50-53).
சவுல்:
சவுல் தாவீதின் வழிகாட்டியாக இருக்க வேண்டும் ஆனால் அவனை துன்புறுத்துபவன் ஆனான். தாவீது கோலியாத்தை தோற்கடித்ததால், தாவீதிற்கு நற்பெயரும் சவுலுக்கான நற்பெயர் சிறிது குறைந்தும் காணப்பட்டது. பொறாமையால் நிரம்பிய சவுல் தாவீதைக் கொல்ல நினைத்தான். ஒரு தேச வீரன் திடீரென்று சவுலால் வேட்டையாடப்படுமளவு கலகக்காரனான். உண்மை என்னவென்றால், சவுல் தாவீதை விரட்ட விரட்ட தாவீதோ தேவனிடம் அடைக்கலம் புகுவதற்கும் அவருடன் நெருங்கிய உறவைப் பேணுவதற்கும் ஓடினான். இத்தகைய கடினமான நாட்களில் அவன் எழுதிய பல சங்கீதங்கள் உலகெங்கிலும் உள்ள அனைத்து தலைமுறை மக்களுக்கும் ஒரு உத்வேகம்.
யோனத்தான்:
சவுலின் மகனாக இருந்தாலும், யோனத்தானுக்கு ஆவிக்குரிய பகுத்தறிவு இருந்தது. தேவன் தாவீதை இஸ்ரவேலின் அடுத்த ராஜாவாகத் தேர்ந்தெடுத்தார் என்பதை அவன் புரிந்துகொண்டான். அவன் தந்தை சவுல் அவனைக் கொல்ல விரும்பினாலும், தாவீதின் துணையாகச் சேவை செய்ய அவன் தயாராக இருந்தான். அவனது உறுதிமொழி தாவீது தனது பணியில் உறுதியாக இருக்க தூண்டியது.
நாத்தான்:
பத்சேபாவுடனான விபச்சாரம் மற்றும் உரியாவின் கொலைக்காக தாவீதை எதிர்கொண்டு கண்டனம் செய்த கடினமான தீர்க்கதரிசி. அது தாவீதின் மனந்திரும்புதலுக்கும் தேவனோடு ஒப்புரவாகுதலுக்கும் வழிவகுத்தது (2 சாமுவேல் 12:7-14).
தேவன் வழங்கும் மனித வளங்களுக்கு நான் நன்றியுள்ள நபராக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்