சவுல் ராஜா அவனது முட்டாள்தனமான முடிவுகளால் இறந்தான். "அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்" (1 நாளாகமம் 10:13).
1) விசுவாசமும் கட்டளைகளும்:
தேவனுடைய கட்டளைகள், விருப்பம், சித்தம் மற்றும் நோக்கம் ஆகியவற்றை அறிவதன் மூலம் நம் விசுவாசம் வெளிப்படுத்தப்படுகிறது. மோசே பிரமாணத்தை ஒருவேளை சவுல் படிக்காமல் இருந்திருக்கலாம். அதுபோல அவன் சாமுவேல் சத்தத்தையும் சரியாக கேட்கவில்லை. ஆக அவருடைய சித்தத்தை அறியாமல் அவரை பிரியப்படுத்த முடியுமா? தேவ வார்த்தையை அறிந்து கொள்ளவோ, அதை தியானம் செய்து வாழ்வில் பயன்படுத்தவோ விருப்பம் இல்லாதபோது, விசுவாச துரோகம் நடக்கத் தொடங்குகிறது.
2) விசுவாசமும் கீழ்ப்படிதலும்:
சவுலின் ஒரு முட்டாள்தனம் பலி செலுத்தியது, அதைச் செய்ய அவனுக்கு அதிகாரம் இல்லை. சாமுவேல் தீர்க்கத்தரிசி வரும்வரை அவன் காத்திருக்கவில்லை (I சாமுவேல் 13: 8-10). இரண்டாவதாக, தேவன் கட்டளையிட்டபடி அவன் அமலேக்கியர்களை அழிக்கவில்லை. பாதியளவு தான் கீழ்ப்படிந்தான், முழுமையாக அல்ல. அவன் அவர்களை ஆக்கிரமித்தான் ஆனால் அவர்களை அழிக்கவில்லை. அதில் தரமான ஆடு மற்றும் மந்தைகளை பத்திரப்படுத்திக் கொள்ள சவுல் மக்களை அனுமதித்தான். அதில் தேவனுக்கு பலியிடத்தான் பாதுகாத்து வைத்திருந்தேன் என்பதாக தனது செயலை நியாயப்படுத்தினான் (I சாமுவேல் 15: 3-9). விசுவாசம் என்பது கண்ணுக்கு தெரியாததாக இருக்கலாம் ஆனால் விசுவாசமாக செயல்படும்போது அதை கண்டு கொள்ள முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விசுவாசம் என்பது கீழ்ப்படிதலால் வெளிப்படுத்தப்படுகிறது, காட்சிப்படுத்தப்படுகிறது மற்றும் செயல்படுத்தப்படுகிறது.
3) விசுவாசமும் வழிகாட்டுதலும்:
அவனுடைய துன்பத்தில் தேவன் பதில் அளிக்காதபோது, அவன் தனது எதிர்காலத்தைப் பற்றி அறிய வேறொரு வழியைத் தேடிப் போனான். சுவாரஸ்யமானது என்னவெனில் ஆரம்பத்தில் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கியிருந்தான், ஆனால் இப்போதோ அவர்களை தேடிச் செல்கிறான் (I சாமுவேல் 28: 3-25; லேவியராகமம் 19:31). அகசியா ராஜா கூட இதே போன்ற முட்டாள்தனமான காரியத்தைச் செய்தான். ஆதலால் அகசியாவிடம் எலியா தீர்க்கதரிசி; "அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்க ஆட்களைஅனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்" (2 இராஜாக்கள் 1:16). தேவன், அவருடைய வார்த்தை மற்றும் ஆவியானவர் மட்டுமே வழிகாட்டுதலின் மிகச் சரியான சிறந்த ஆதாரம். பிற ஆதாரங்களைத் தேடுவது பேரழிவைத் தரும்.
என் விசுவாசத்தை உடைத்து விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran