நீதிபதி எட்வர்ட் டேவிலா தெரனோஸின் (சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனம்) நிறுவனர் எலிசபெத் ஹோம்ஸிடம் இப்படியாக கூறினார்; “தோல்வி சாதாரணமானது. ஆனால் மோசடியால் தோல்வி அடைவது சரியல்ல". புதுமையான தொழில்நுட்பம் மூலம் ரத்தத்தை பரிசோதித்தால், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற நோய்களை சில நிமிடங்களில் கண்டறிய முடியும் என்ற கருத்தை அவர் விளம்பரப்படுத்தினார், அது உண்மையே அல்ல. இதனால் மருத்துவ நிபுணர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை அவள் ஏமாற்றினாள் (பிபிசி செய்தி, நவம்பர் 19, 2022). ஆம், தோல்வி என்பது சாத்தியம், இயல்பானது மற்றும் யதேச்சையாக இருக்கலாம். இருப்பினும், ஏமாற்றுதல் அல்லது மோசடி அல்லது திட்டமிட்ட சதி மூலம் தோல்வியடைந்தால் தண்டனை கடுமையாக இருக்கும்.
பேதுரு எச்சரிக்கப்படுதல்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முக்கிய சீஷர்களில் ஒருவனான பேதுரு அதீத நம்பிக்கையுடன் இருந்தான். சேவல் இரண்டு முறை கூவுவதற்கு முன்பு மூன்று முறை மறுதலிப்பாய் என்று ஆண்டவர் இயேசு அவனை எச்சரித்தபோது, அதற்கு வாய்ப்பே இல்லை என பேதுரு கூறினான். அதுமட்டுமல்ல அப்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மறுதலிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், நான் மரணத்தைக் கூட சந்திப்பேன் ஆனால் மறுதலிக்க மாட்டேன் என்று தனது உறுதியை வெளிப்படுத்தினான் (லூக்கா 22:61-62).
பேதுருவின் தோல்வி:
கெத்செமனே தோட்டத்தில், பேதுரு தனது வாளை உருவி, பிரதான ஆசாரியரின் வேலைக்காரனான மல்கூஸின் காதை அறுத்து தைரியத்தைக் காட்டினான். இரவில் பிரதான ஆசாரியரின் வீட்டில் ஆலோசனை சங்கம் நீதிமன்றத்தை நடத்தியபோது, பேதுரு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மறுத்தான். ஒரு பணிப்பெண்ணின் ஒரு எளிய கூற்று அவனை நடுங்க வைத்தது மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மூன்று முறை மறுதலிக்க வைத்தது (யோவான் 18:10; லூக்கா 22:54-62).
யூதாஸ் ஒரு சதிகாரன்:
மாறாக, யூதாஸ் மேசியாவிடமிருந்து தேவையற்ற எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாவீதைப் போன்ற ஒரு போர்வீரர் என நினைத்தான். அதில் ஏமாற்றமடைந்தான்; அவன் பிரதான ஆசாரியர் மற்றும் பரிசேயர்கள் உட்பட பிற ஆதிக்கம் செலுத்தும் மத குழுக்களின் கைகளில் விருப்பமான கருவியாக ஆனான். துரதிர்ஷ்டவசமாக, அவன் அவர்களோடு பேரம் பேசி முப்பது வெள்ளிக் காசுகளுக்கு இந்தப் பொல்லாத வேலையைச் செய்ய ஒப்புக்கொண்டான் (மாற்கு 14:10-11).
மோசடியால் தோல்வி:
யூதாஸ் தோல்வியடைந்தது சூழல் அல்லது உள் பலவீனம் அல்லது பயம் ஆகியவற்றால் அல்ல. அவன் 'மோசடி' காரணமாக தோல்வியடைந்தான், ஆம், அவன் இரட்சகரை மிகக் குறைந்த தொகைக்கு, ஒரு அடிமையின் விலைக்கு விற்றான்.
மன்னிப்பு:
பேதுரு உடனடியாக மனந்திரும்பி, மறுபடியும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கத் தயாராக இருந்தான். மன்னிப்பை பெற்றான், மீட்கப்பட்டான் (யோவான் 21).
தற்கொலை:
யூதாஸ் மனந்திரும்புவதற்கு ஏற்ற தைரியத்தை வரவழைக்காமல் கோழைத்தனமாக தன்னைத்தானே அழித்தான், மரணமடைந்தான்.
நான் வேண்டுமென்றே பாவத்தில் என்னை ஈடுபடுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்