கிறிஸ்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களாக இருப்பதால் கனி கொடுப்பவர்களாக இருக்க அழைக்கப்படுகிறார்கள் (சங்கீதம் 1:1-3). கர்த்தருக்குள் நிலைத்திருப்பவர்கள் மிகுதியான மற்றும் நிலைத்திருக்கும் கனிகளைக் கொடுப்பார்கள் (யோவான் 15:8). விசுவாசிகள் பலனுள்ளவர்களாக, அதாவது கனி கொடுக்கும் சீஷர்களாக இருக்க வேண்டும் என்று பேதுரு எதிர்பார்க்கிறார் (2 பேதுரு 1:8). தேவபக்தியுள்ளவர், சமயப்பற்றுள்ளவர், நீதியுள்ளவர் மற்றும் தெய்வபயம் உள்ளவர் என ஒரு நபரை அவர்களின் கனிகளால் அடையாளம் காண முடியும் என்று கர்த்தராகிய இயேசு கற்பித்தார் (மத்தேயு 7:16). இன்று கிறிஸ்தவ மண்டலத்தில், கனியற்ற மக்களும் தலைவர்களும் அதிகம். அதிலும் வருத்தம் என்னவெனில், பல தவறான அல்லது கள்ள போதகர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் இந்த வகையின் கீழ் வருகிறார்கள். இதில் தெய்வீகமான தலைவர்களையும் போதகர்களையும் அடையாளம் காண்பது என்பது புத்திசாலித்தனம் தான். அவற்றை அளவிடுவதற்கு மூன்று அம்சங்கள் உள்ளன.
1) வாழ்க்கை முறை:
தேவ ஜனங்கள் ஆடம்பரம் மற்றும் ஒரு உயரடுக்கு வாழ்க்கை இல்லாமல் மிகவும் தாழ்மையான வாழ்க்கை முறையைத் தேர்வு செய்கிறார்கள். அத்தகைய தலைவர் தனது அழைப்புக்கு ஏற்ற வாழ்க்கைத் தரத்தை தேர்வு செய்கிறார். ஒரு போதகர் தனக்குச் சபையின் சராசரி வருமானத்திற்குச் சமமான சம்பளத்தை நிர்ணயித்தார். மற்றொரு கிறிஸ்தவத் தலைவர் தனது தகுதிக்கும் தன் அனுபவத்திற்கும் ஏற்ப சம்பளத்தைத் தேர்ந்தெடுத்தார். செழிப்பு (தவறான) உபதேசத்தை நம்பும் பலர் வரம்பற்றவர்களாகவும், திமிர்பிடித்தவர்களாகவும், அக்கறையற்றவர்களாகவும், ஆகார திரட்சியுள்ளவர்களாகவும் இருப்பது வருத்தமளிக்கிறது (எசேக்கியேல் 16:49). ஒரு சோகமான உதாரணம், தாழ்த்தப்பட்ட நாடோடி சமூகத்திற்கு சேவை செய்த ஒரு தலைவர் பெரிய மன்னரை போல வாழ்ந்தார்.
2) அணுகுமுறை மற்றும் உலகக் கண்ணோட்டம்:
நல்ல தலைவர்கள் வேதாகம அணுகுமுறையையும் மற்றும் உலகக் கண்ணோட்டத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் உண்மையான சத்தியங்களில் மூழ்கி, நடைமுறையில் அதை கடுமையாக பயிற்சிக்கிறார்கள் அல்லது பயிற்சிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய எண்ணங்கள் தேவ வார்த்தையால் புதுப்பிக்கப்பட்டு, பவுல் பட்டியலிடுவது போல் சிறந்த எண்ணங்களால் அவர்களின் சிந்தை நிரப்பப்படுகின்றது (ரோமர் 12:2; பிலிப்பியர் 4:8).
3) செல்வாக்கு மற்றும் விளைவுகள்:
இந்த நபர்கள் மற்றவர்களை ஈர்க்க முடியும். அவர்களை ஈடுபடுத்தி, மகிழ்வித்து, அவர்கள் மீது கவனம் செலுத்துவது அவர்களின் குறிக்கோள். அவர்களுக்கு தேவராஜ்ய தரிசனம், நித்திய கண்ணோட்டம் மற்றும் வாழ்க்கையில் அர்த்தமுள்ள நோக்கத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக; அவர்கள் சுயநலமான தரிசனம், உலக கண்ணோட்டம் மற்றும் சாதாரணமான நோக்கங்களை வழங்குகிறார்கள். அத்தகைய தலைவர்கள் குருடர்கள்; ஆம் அவர்கள், "குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே" (மத்தேயு 15:14).
சுயமதிப்பீடு செய்து சுயபரிசோதனை செய்து கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். அதுபோலவே, தெய்வீகத் தலைவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதும், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும், அவர்களால் வழிகாட்டப்பட வேண்டும் என்பதும் அவசியம்.
எனது கிறிஸ்தவ வாழ்க்கை கனிகளால் நிரூபிக்கப்பட்டதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்