எல்லா இடங்களிலும் உபத்திரவம் நடக்கிறது, அதனால் கிறிஸ்தவர்கள் ஏன் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டே தேவனை ஆராதிக்க முடியாது? அவர்கள் ஏன் பொது இடங்களில் கூடி நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் பிரச்சனையை உண்டாக்குகிறார்கள்? கிறிஸ்தவ நம்பிக்கை அமைதியாகவும், தனிப்பட்டதாகவும், கண்ணுக்கு தெரியாததாகவும் இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். இருப்பினும், கிறிஸ்தவ வாழ்க்கையும் விசுவாசமும் ஆற்றல்மிக்கவை மற்றும் தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் தேசங்களை பாதிக்கின்றன.
வழிபாடு:
"கர்த்தரை முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் அன்புகூர வேண்டும்" என்பதே பெரிய கட்டளைகளில் முதன்மையானது (மத்தேயு 22:36-40). இக்கட்டளை தான் ஆராதனையில் வெளிப்படுத்தப்படுகிறது. பரிசுத்தமான தேவனை நேசிப்பது என்பது ஆராதனையில் பரிசுத்தருக்கு மகிமையையும் அவரின் மகத்துவங்களையும் சொல்லி துதிப்பதில் வெளிப்படுகிறது. ஆராதனையில் தேவனின் பண்புகளுக்காக மகிமைப்படுத்துதல், அவருடைய கிரியைகளைப் போற்றுதல், அவருடைய நன்மைக்காக நன்றி செலுத்துதல், நமது தேவைகளுக்காக ஜெபித்தல் மற்றும் பிறருக்காகப் பரிந்து பேசுதல் ஆகியவை அடங்கும்.
வார்த்தை:
இரவும் பகலும் அதாவது 24 மணி நேரமும் கர்த்தருடைய வார்த்தையை தியானிப்பவர்கள் பாக்கியவான்கள் (சங்கீதம் 1:1-3). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் அவருடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்வதன் மூலம் புத்தியுள்ளவர்களாக மாறுகிறார்கள் (மத்தேயு 7:24). அதுபோல, சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் வார்த்தையைப் பிரசங்கிப்பதும் கற்பிப்பதும் மிக அவசியம் (2 தீமோத்தேயு 4:2). உலகில், கிறிஸ்தவர்கள் ஜனங்களால் கவனிக்கப்படும் புத்தகமாக அங்கீகரிக்கப்படுகிறார்கள்.
சாட்சியம்:
எல்லா விசுவாசிகளும் கர்த்தருக்கு சாட்சியாக இருக்க வேண்டும் (அப்போஸ்தலர் 1:8). விசுவாசத்திற்கான காரணத்தை நாகரீகமாகவும் மரியாதையுடனும் பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாராக இருக்குமாறு தேவ ஜனங்களுக்கு பேதுரு அறிவுறுத்துகிறார் (1 பேதுரு 3:15). உலகத்திற்கு ஒளியாகவும், பூமிக்கு உப்பாகவும் இருக்கும்படி சீஷர்களை ஆண்டவராகிய இயேசு அறிவுறுத்தினார் (மத்தேயு 5:14-16).
சித்தம்:
சீஷர்களாக, தேவ ஜனங்களாக, அவருடைய ராஜ்யத்தின் தூதர்களாக, தேவ சித்தத்தை பகுத்தறிந்து செய்வது அவசியம். ஒரு நபர் தேவ சித்தத்தை செய்யும்போது, அந்நபரின் வாழ்க்கைக்கு அர்த்தமும் நோக்கமும் கிடைக்கும். தேவ சித்தம் இன்பமானது, பூரணமானது மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியது, "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" (ரோமர் 12:2) என்கிறார் பவுல். மேலும் ஒவ்வொரு விசுவாசியும் உலகில் நீதிக்கான தேவனின் கருவி (ரோமர் 6:13). அவருடைய சித்தத்தைச் செய்வதன் மூலம் ஒரு விசுவாசி உலகையே தலைகீழாக மாற்ற முடியும் (அப்போஸ்தலர் 17:6). ஒரு கிறிஸ்தவர் தன்னைச் சுற்றி ஒரு சிறிய அலையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார், அது மக்களின் உலகக் கண்ணோட்டத்தை மாற்றுகிறது அல்லது சவால் விடுகிறது.
கிறிஸ்தவ விசுவாசத்தின் அனைத்து கூறுகளும் என்னிடம் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்