சில போதகர்களும், பிரசங்கியார்களும் தங்கள் பிரசங்கங்களில் ஏழைகளை கேலி கிண்டல் செய்கிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குப் பிறகு அவரது சரீரம் ஏழைகளுக்கு அல்ல, அரிமத்தியாவைச் சேர்ந்த பணக்காரரான யோசேப்பு என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று ஒருவர் கூறினார் (யோவான் 19: 39-42). அதுமாத்திரமல்ல குமாரனின் சரீரத்தை ஒப்படைப்பதில் ஏழைகளை பிதா நம்பவில்லை என்றார். மற்றொரு பிரசங்கியார், பிச்சைக்காரரான லாசரு ஜெபம் செய்யாததால் அல்லது போதுமான நம்பிக்கை இல்லாததால் ஏழ்மையானார் என்று கூறினார் (லூக்கா 16:19-31). அந்த உவமையில் ஐசுவரியவான் புதைக்கப்பட்டார், ஆனால் லாசரு தேவதூதர்களால் சுமந்து செல்லப்பட்டார் என ஆண்டவர் கற்பித்தார்.
காதுகளை மூடுதல்
காதுகளை மூடிக்கொண்டு, ஏழைகளின் கூக்குரலை அல்லது அழுகையை கேட்க விரும்பாதவர்கள் அல்லது கண்டும் காணாதவர்கள்; பேரிடர்களுக்கு மத்தியில் அவர்கள் அழும்போதும் அதே விளைவை சந்திக்க நேரிடும். “ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்” (நீதிமொழிகள் 21:13). ஏழைகளைப் புறக்கணிப்பது, ஒதுக்கி வைப்பது அல்லது தவிர்ப்பது என்பது தேவனின் பார்வையில் சரியல்ல. ஏழை பணக்கார உவமையில் உள்ள பணக்காரன் ஏழை லாசரின் விஷயத்தில் உணர்வின்றி காணப்பட்டான். அவனது அணுகுமுறை தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டது.
பரியாசம்
“ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்” (நீதிமொழிகள் 17:5) என்று வேதாகமம் தெளிவாக எச்சரிக்கிறது. ஏழைகளை போதகர்கள், பிரசங்கியார்கள், தீர்க்கதரிசிகள் என எவருக்குமே கேலி செய்ய உரிமை இல்லை. தேவனையே அவமதிப்பது போல் இருந்தால் அவர்கள் தேவனின் ஊழியர்களாக இருப்பதில் அர்த்தமில்லையே. “தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டுபண்ணினவர் அவனையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார் அல்லவோ?” (யோபு 31:15). தேவன் தான் ஏழைகளை உருவாக்குபவர் என்பது உண்மைதான், ஏனெனில் வசதி படைத்தவர்கள் ஏழைகளிடம் அனுதாபமுள்ளவராகவும், ஒதுக்கப்பட்டவர்களிடம் உணர்திறனுடையவராகவும் இருக்க வேண்டும்.
நன்றியும் கிருபையும்
ஒரு நபர் தனது வாழ்க்கையில் தேவனின் நன்மைகள், சலுகைகள், ஆசீர்வாதம் மற்றும் இரக்கம் ஆகியவற்றிற்கு நன்றியுள்ளவராக இருக்கும்போது, குறைந்த அதிர்ஷ்டம் உள்ளவர்களைக் குறைவாகப் பார்க்க மாட்டார்கள். மாறாக, பிறருக்கு உதவி செய்வதன் மூலம் பெருந்தன்மையையும் இரக்கத்தையும் காட்டத் தயாராக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களை கேலி கிண்டல் செய்யவோ பரியாசம் பண்ணவோ மாட்டார்கள். நாமும் அந்த மோசமான நிலையில் இருந்திருக்கலாம் என்பதை அறிந்திருப்பதால், தேவனின் கிருபைக்காக, அவர்கள் மற்றவர்களிடமும் மரியாதையாகவும் தாராள மனப்பான்மையோடும் இருக்கிறார்கள்.
விசுவாசத்தின் சான்று
பணக்காரர்களாக இருப்பது அவர்களின் விசுவாசத்திற்கான சான்று என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். ஏழைகளை உற்சாகப்படுத்தவும், உயர்த்தவும், ஆசீர்வதிக்கவும் செல்வத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதே விசுவாசத்தின் உண்மையான ஆதாரம் (மத்தேயு 25:31-46) என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஏழைகளுக்கு உதவுவதில் என் மனப்பாங்கு என்ன?
Author: Rev. Dr. J .N. மனோகரன்