ஒரு மாலில் டீனேஜர்களுக்கான விளையாட்டுப் பிரிவு உள்ளது. அங்கு அவர்கள் கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். விளையாட்டு பிரபலங்களோடு விளையாடுவது போல் ஒரு மாய தோற்றம் அதாவது கணினியின் கற்பனை உலகமாக (Virtual reality) வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ திரையில் காணும் போது டீனேஜர்கள் தாங்கள் ‘கிரிக்கெட் கடவுளுடன்’ அல்லது ‘டென்னிஸின் கடவுளுடன்’ விளையாடியதாக ஒரு மாயையை அடைகிறார்கள். மால்களில் பொழுதுபோக்கு வணிகத்தை மேம்படுத்துவதற்காக அவர்களின் வீடியோக்கள், பெயர்கள் மற்றும் நற்பெயர் பயன்படுத்தப்படுகிறது என்பது பிரபலங்களுக்குத் தெரியாது. பிரபலங்களின் பெயர்கள் சிலரால் தங்கள் சொந்த நலனுக்காக அல்லது இலாப நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. "உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்" (யாத்திராகமம் 20:7) என பத்துக் கட்டளைகளில் ஒன்றாக மனிதகுலத்தை தேவன் எச்சரித்தார்.
தேவனா கொடுத்தார்?
யாக்கோபு தான் ஏசா என்று காட்டி, சுவையான இறைச்சியை ஈசாக்கிடம் எடுத்துச் சென்றான், ஈசாக்கு ஆச்சரியமடைந்து, எப்படி இவ்வளவு சீக்கிரம் அகப்பட்டது என்று கேட்டான்? அதற்கு யாக்கோபு; "உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான்" (ஆதியாகமம் 27:20). ரெபெக்காள் கொடுத்ததாகக் கூறுவதற்குப் பதிலாக, தேவன் தனக்கு நேரிடப் பண்ணினார் என்று கூறினான். யாக்கோபு தான் வஞ்சித்த பாவத்தை தேவனுடைய பெயரைப் பயன்படுத்தி மறைத்தான்.
பொல்லாத ஆவியை விரட்டுவதா?
எபேசில் உள்ள பிரதான ஆசாரியரான ஸ்கேவாவின் மகன்கள், பவுல் பிரசங்கித்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை பயன்படுத்தி பேய்களைத் துரத்த முயன்றனர். அந்த பொல்லாத ஆவிகள் ஏழு மகன்களையும் பிடித்து அடித்ததில் அவர்கள் தப்பி ஓட வேண்டியதாயிற்று (அப்போஸ்தலர் 19:11-20). கர்த்தருடைய நாமத்தை வீணாக உபயோகப்படுத்தியதால் ஏழு குமாரர்களும் காயமடைந்தனர், அவமானப்பட்டனர்.
தேவனா அனுப்பினார்?
ஆலோசனை சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடின மனதுடைய தளபதி ரப்சாக்கே "இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்றான்" (2 இராஜாக்கள் 18:25). அவர்கள் எருசலேம் மீது படையெடுத்தபோது கர்த்தர் அவர்களைத் தண்டித்தார். "அன்று இரவு, கர்த்தருடைய தூதன் போய் 1,85,000 ஜனங்களை அசீரியப் படையில் கொன்று போட்டான். ஜனங்கள் காலையில் எழுந்தபோது, மரித்த உடல்களைப் பார்த்தனர்" (2 இராஜாக்கள் 19:35).
உங்களைத் தெரியாது:
கர்த்தருடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்துகிற அநேகர் என்றென்றும் நிராகரிக்கப்படுவார்கள் (மத்தேயு 7:22).
கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை நான் கனம் பண்ணுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்