கண் பார்வை இழந்த தன் தந்தை ஈசாக்குக்கு முன்பாக யாக்கோபு தன்னை ஏசாவாக காட்டிக்கொண்டான். ஈசாக்கு தனது மூத்த மகன் ஏசாவுக்குதான் ஆசீர்வாதங்களை வழங்கினேனா என உறுதிப்படுத்த விரும்பினான். அதனால் அவன் ஏசா தானா என கேட்டான். யாக்கோபோ ஆம் நான் ஏசா என்று பதிலளித்தான். அதுமட்டுமல்ல ஈசாக்கிற்கு இன்னொரு சந்தேகம் இருந்தது, அதாவது அவ்வளவு சீக்கிரம் எப்படி வேட்டையாடி, அதனை சுத்தம் செய்து, பின்பு சமைத்தும் முடித்தான் என்று! ஆனால் அதற்கு யாக்கோபு "உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான்" (ஆதியாகமம் 27:20). ஆம், யாக்கோபு தன்னை நேர்மையானவனாகவும் உண்மையுள்ளவனாகவும் நிலைநாட்ட பரிசுத்த தேவனின் பெயரைப் பயன்படுத்தினான்.
அவதூறு:
ஆண்டவர் மேலே சத்தியமாக சொல்கிறேன் என்பதாக பயன்படுத்துதல் அல்லது தேவையற்று பயன்படுத்துதல் பாவம். ஏளனம் செய்பவர்களும் கேலி செய்பவர்களும் தேவனின் பெயரை வீணாகப் பயன்படுத்துகிறார்கள்.
அற்பத்தனம்:
தேவனின் பெயரை முட்டாள்தனமான, மூடத்தனமான வழியில் பயன்படுத்துதல்.
பாசாங்கு:
இயேசு இயேசு என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூறுவது ஆனால் அநுதின வாழ்வில் மாறுபட்டு நடப்பது, ஆம், உதடுகளினால் தேவனைக் கனம்பண்ணுகிறார்கள்; ஆனால் அவர்கள் இருதயமோ தேவனை விட்டு தூரமாய் விலகியிருக்கிறது (மாற்கு 7:6-9).
சத்தியம்:
"என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்" (லேவியராகமம் 19:12; ஓசியா 10:4). இந்த கட்டளை வெற்று அல்லது வீண் அல்லது உண்மையான சத்தியங்களை அல்லது பொய்யான சத்தியங்களையும் தடை செய்கிறது. நம்பகத்தன்மையைப் பெற சத்தியம் செய்வது தேவனின் பெயரை வீணாக பயன்படுத்துவதாகும். தீய செயல்களுக்கும் தீய சுரண்டல்களுக்கும் தேவனை பங்காளியாக்குவது பாவம். நீதியும் பரிசுத்தமுமான தேவன் எந்தத் தீமையையும் அக்கிரமத்தையும் அநீதியையும் நியாயப்படுத்த மாட்டார்.
தவறான தீர்க்கதரிசனம்:
கள்ளத் தீர்க்கதரிசிகள் தேவனின் பெயரை வீணாக எடுத்துக்கொள்கிறார்கள் (எரேமியா 23:25).
பொய் ஊழியம்:
சிலர் தேவனை கர்த்தாவே கர்த்தாவே என்று அழைப்பர். இருப்பினும், அவை நிராகரிக்கப்படுகின்றன. அவருடைய பெயரில் அற்புதங்களைச் செய்ததாகக் கூறுகின்றனர். இத்தகைய கள்ளப் போதகர்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் தேவனால் நிராகரிக்கப்படுவார்கள் (மத்தேயு 7:21-23).
புனிதப் பொருட்களைக் களங்கப்படுத்துதல்:
"இஸ்ரவேல் புத்திரர் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்த வஸ்துக்களைக்குறித்து ஆரோனும் அவன் குமாரரும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களோடே சொல்; நான் கர்த்தர்" (லேவியராகமம் 22:2) என்று கட்டளையிட்டார்.
சாட்சிக்குறைவு:
தேவ ஜனங்கள் அவருடைய பரிசுத்த பெயரால் அறியப்படுவதால், அவருடைய பண்புகளை மீறும் எந்தவொரு வார்த்தையும் அல்லது செயலும் அல்லது நடக்கையும் அவரது பெயருக்கு அவமதிப்பைக் கொண்டுவருகிறது.
அவமானம்:
பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரில் கொடுக்கப்பட்ட ஞானஸ்நானத்தை ஒரு பிரிவினர் நிராகரிக்கின்றனர். மக்கள் இரண்டாவது ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகிறார்கள். அதுவும் மூன்றாவது கட்டளையை மீறுவதாகும்.
நான் தேவ நாமத்தை மதிக்கிறேனா, கனப்படுத்துகிறேனா, மரியாதை செலுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்