'முனகல்' என்பது சத்தமின்றி உள்ளம் குமுறுவது ; மேலும் பயங்கரமான வேதனை நிறைந்த நேரத்தில் அல்லது பெரும் துயரத்தில் உச்சரிக்கப்படும் துக்க ஒலி. இஸ்ரவேல் புத்திரர் எகிப்தியர்களால் ஒடுக்கப்பட்டனர், அவர்கள் அடிமைத்தனத்தினால் தவித்து முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முனகலைக் கேட்டு அவர்களை மீட்க கர்த்தர் மோசேயை அனுப்பினார். ஆனால் மாறாக 'முறுமுறுப்பு' என்பது தெளிவற்ற தொனியில் அதிருப்தியை வெளிப்படுத்துவது, அதாவது வெளிப்படையான பேச்சின்றி (சத்தமின்றி) புகார்களை முறையிடுவது அல்லது மனதிற்குள்ளாகவே முணுமுணுப்பது அல்லது பெருமூச்சுடன் அவநம்பிக்கையை வெளிப்படுத்துவது என வரையறுக்கப்படுகிறது.
இஸ்ரவேல் தேசம் உணவுக்காக, தண்ணீருக்காக மற்றும் இறைச்சிக்காக தேவனுக்கு எதிராக முணுமுணுத்துக் கொண்டும், முறையிட்டுக் கொண்டும் மற்றும் குறைக் கூறிக்கொண்டும் இருந்தார்கள். "எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன்" (எண்ணாகமம் 14:27). இந்த ஜனங்கள் மோசேயும் ஆரோனும் தங்களை ஏமாற்றி பாலைவனத்தில் சாகடிப்பதற்காக கூட்டிக் கொண்டு வந்ததாக எண்ணி வருத்தப்பட்டனர்; அவர்கள் மோசேவைக் கல்லெறிய நினைத்தார்கள் (எண்ணாகமம் 14: 9,10). அதுமட்டுமல்ல "கர்த்தர் நம்மை வெறுத்து, நம்மை அழிக்கும்பொருட்டாக நம்மை எமோரியரின் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நம்மை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்" (உபாகமம் 1:27) என்றார்கள். "அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டை பண்ணினார்கள். கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்" (சங்கீதம் 106:24-25) என்பதாக சங்கீதக்காரன் விளக்குகிறான். சத்தமின்றி மனதிற்குள்ளாக குமுறும் அல்லது கதறும் வார்த்தைகளையும் தேவன் அறிவார்.
1) அதிருப்தி:
"போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்" (1 தீமோத்தேயு 6:6). சீஷர்கள் தங்களுக்கு இருக்கிறவைகள் போதும் என்ற எண்ணத்தோடு திருப்தியோடு இருக்க வேண்டும்; எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்க வேண்டும் (எபிரெயர் 13: 5; பிலிப்பியர் 4:11).
2) நன்றியற்ற தன்மை:
நன்றி கெட்டத்தனம் தான் முணுமுணுப்புக்கான வேராயிருக்கிறது. எல்லா நேரங்களிலும், எல்லா நிகழ்வுகளுக்கும் மற்றும் எல்லா சூழல்களுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒழுக்கம் நன்றியற்ற மற்றும் முணுமுணுப்பு மனப்பான்மையிலிருந்து நம்மைக் காப்பாற்றும் (1 தெசலோனிக்கேயர் 5:16-18).
3) சுயநலம்:
அவனவன் தனக்கானவைகளை நோக்கும்போதும், மற்றவர்கள் மீது கவனம் செலுத்தாதபோதும், இந்த முணுமுணுப்பு என்பது முடிவடையும் (பிலிப்பியர் 2: 4).
4) விசுவாசமின்மை:
இந்த முணுமுணுப்பவர்கள் தங்கள் சூழ்நிலைகளை தேவன் அறிந்திருக்கவில்லை என்றும்; அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை என்றும் நினைக்கிறார்கள். சில நேரங்களில் தேவன் அவர்களை நேசிக்கவில்லை என்பதாகவும், தேவனுக்கு தங்கள் மீது அக்கறையே இல்லை என்றும் நினைக்கிறார்கள். மேலும் தேவன் தங்களுக்கு பிரச்சனையற்ற சமாதானமான வாழ்க்கையை கொடுக்கவில்லை என்று நினைத்து முணுமுணுக்கிறார்கள்.
"அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்" (ரோமர் 8:26). எப்போதெல்லாம் உணர்வுகளின் கொந்தளிப்பு மேலோங்குதோ அல்லது ஆவிக்குரிய பாரம் அழுத்துகின்றதோ அப்போதெல்லாம் தேவனை நோக்கி ஜெபிப்பது என்பது நல்ல ஆரோக்கியமான பழக்க வழக்கமாகும் (நடைமுறையாகும்). குறை சொல்வது அல்லது முணுமுணுப்பது அல்லது முறுமுறுப்பது என்பது பாவம்.
நான் குமுறுகிறேனா அல்லது குறை கூறுகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran