தானியேலின் எதிர்ப்பாளர்கள் அல்லது போட்டியாளர்கள் அவனிடம் குற்றம் கண்டுபிடித்து எப்படியாவது அவனை அங்கிருந்து நீக்கி விட வேண்டுமென்று விரும்பினர். ஏனென்றால் தானியேல் அவர்களைக் கண்டிப்புடன் கண்காணித்ததால், அவர்களால் சட்டவிரோத ஆதாயங்களைப் பெறவோ, சலுகைகளை அனுபவிக்கவோ அல்லது சோம்பேறியாக இருக்கவோ முடியவில்லை. ஆகையால் அவர்களின் தீய திட்டத்தை நிறைவேற்ற தானியேல் மீது தவறான குற்றம் சுமத்தி தரியு ராஜாவைக் கோபப்படுத்தி அவரை தானியேலுக்கு எதிராகச் செயல்படும்படி கட்டாயப்படுத்தினார்கள். இதற்கு ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும் தலைவர்களும் உடந்தையாக இருந்து ஒத்துழைத்தனர் (தானியேல் 6:4-9). அவர்கள் பல்வேறு கண்ணோட்டங்களில் தானியேலைக் குற்றம் கண்டுபிடிக்க முயற்சி செய்திருக்க வேண்டும்.
1) அணுகுமுறை:
தானியேல் ஒரு புலம்பெயர்ந்தோன் மற்றும் அடிமை. எனவே, இனப் பாகுபாடும் வெறுப்பும் இருந்திருக்கும். சதிகாரர்கள் தானியேல் தனது யூத இனப் பெருமையை வெளிப்படுத்தி மற்றவர்களை இழிவாக நடத்துவான் என்று எதிர்பார்த்தனர். இருப்பினும், தானியேல் அனைவரையும் கண்ணியமாக நடத்தினான். பாபிலோனியர்களையும் பாபிலோனிய சாம்ராஜ்ஜியத்தையும் வெறுக்கும் ஒரு நபராக தானியேலைக் குற்றம் சாட்டுவது அவனுக்கு எதிரான பொருத்தமான குற்றமாக இருக்கும்.
2) அபிநயித்தல் (செயல்கள்):
ஒரு அரசு அதிகாரியாக, அவன் ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் பங்களிப்புகள் ஏராளம். அந்த எதிர்ப்பாளர்கள் தானியேல் எதிலாவது பொறுப்பின்றி செயல்படுவானா அல்லது செயல்பாடுகள் தரமின்றி காணப்படுமா என குற்றம் சுமர்த்த அலைந்தனர். அதாவது தானியேலின் நடவடிக்கைகள் பேரரசுக்கு பொருளாதார இழப்பைக் கொண்டு வந்ததாக எதிர்ப்பாளர்கள் நிரூபிக்க விரும்பினர்.
3) அறிதல் (தீர்மானித்தல்):
பாபிலோனிய பேரரசர் சார்பாக, தானியேலுக்கு தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. அந்த தீர்மானங்கள் அனைத்தும் பேரரசைப் பாதுகாப்பதாகவே இருக்க வேண்டும். பேரரசின் இறையாண்மை அல்லது ஒருமைப்பாட்டைக் காயப்படுத்தக்கூடிய எந்தவொரு முடிவும் ஒரு தீவிரமான தோல்வியாகும். நேபுகாத்நேச்சார் ஏழு ஆண்டுகள் பாதிக்கப்பட்டபோதும் தானியேல் பேரரசை பாதுகாத்தான்.
4) அன்றாட வழக்கம்:
தானியேலின் நடத்தையையும் அவர்கள் கவனித்தனர். ஒற்றர்களைப் போல, தானியேலைப் பின்தொடர்ந்தனர், அதன்மூலம் அவனது அன்றாட வழக்கத்தை அவர்களால் குறிக்கவும் கண்காணிக்கவும் முடியும். அப்படி அவனுக்கே தெரியாமல் பின்தொடர்ந்ததால், தானியேலின் ஆவிக்குரிய ஜெப வாழ்க்கை, புனிதமான சுருள்களை வாசிப்பது அன்றாட நடவடிக்கை எதிர்ப்பாளர்களுக்கு தெரிய வந்திருக்கும்.
5) அடங்காத்தனம் (கலகம்):
தானியேல் தனது யூத சகாக்களை சந்தித்திருக்கலாம். தரியுவை தூக்கியெறிந்து சுதந்திரத்தைப் பெறுவதற்காக படைகளைச் சேர்ப்பது போலவும் மற்றும் கலகச் செயலாகவும் அது அவரது எதிரிகளால் விளக்கப்பட்டிருக்கலாம்.
தானியேல் பாவம் செய்யாதவர் அல்ல, ஆனால் ஒரு நேர்மையான நபர் மற்றும் அவரது செயல்களிலும் நடத்தையிலும் நீதியுள்ளவர். அவருடைய தனிப்பட்ட ஜெபப் பழக்கம், யூத மதத்தைப் பின்பற்றுதல், யூதர்களுடனான ஐக்கியம் மற்றும் ஆவிக்குரிய நம்பிக்கைகள் ஆகியவற்றில் மட்டுமே அவர்களால் தவறு கண்டுபிடிக்க முடியும்.
நான் நேர்மையான நபரா? சிந்திப்போமா.
Author: Rev. Dr. J .N. மனோகரன்