6:4 அப்பொழுது பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை.
6:5 அப்பொழுது அந்த மனுஷர்: நாம் இந்த தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேதவிஷயத்திலே குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடித்தாலொழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடிக்கக் கூடாது என்றார்கள்.
6:6 பின்பு அந்தப் பிரதானிகளும் தேசாதிபதிகளும் கூட்டங்கூடி ராஜாவினிடத்தில் போய், அவனை நோக்கி: தரியு ராஜாவே, நீர் என்றும் வாழ்க.
6:7 எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும் தலைவர்களும் ஆலோசனைபண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
6:8 ஆதலால் இப்போதும் ராஜாவே, மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படியே, அந்தத் தாக்கீது மாற்றப்படாதபடி நீர் அதைக் கட்டளையிட்டு, அதற்குக் கையெழுத்து வைக்கவேண்டும் என்றார்கள்.
6:9 அப்படியே ராஜாவாகிய தரியு அந்தக் கட்டளைப்பத்திரத்துக்குக் கையெழுத்து வைத்தான்.