தரியு ராஜாவின் ராஜ்ய விசாரிப்பிலே தானியேலோடு இருந்த பிரதானிகளும் தேசாதிபதிகளும் பொறாமை பிடித்தவர்களாகவும் பொல்லாதவர்களாகவும் இருந்தனர், தானியேலை குற்றப்படுத்தும்படி காரணம் தேடி அலைந்து சதி செய்து சிங்கத்தின் குகைக்குள் தள்ளினர். அதாவது எந்த மனுஷனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய தரியுவைத் தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி யாதொரு காரியத்தைக்குறித்தும் விண்ணப்பம் பண்ணக்கூடாது என்றும் அப்படி செய்தால் அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்படவேண்டும் என்று கட்டளைப்பத்திரத்தில் ராஜா கையெழுத்து வைத்திருந்தார். தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான். அதனால் அவன் சிங்கத்தின் குகையில் தூக்கி எறியப்பட்டான், ஆனால் தேவன் தன் தூதரை அனுப்பி பாதுகாத்தார். இந்த சம்பவத்தை வைத்து தானியேலை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மாதிரியாக சித்தரிக்க முடியும்.
1) குற்றம் சாட்டப்படல்:
ஆதாரம் இல்லாமல், தானியேல் அவனது சக ஊழியர்களால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டான். அவர்களால் ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடியாததால், அவனை விசுவாசி என்ற அடையாளத்திலும், அவனுடைய தனிப்பட்ட ஆவிக்குரிய பக்தியிலும் அவர்கள் தவறு கண்டனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் யூத தலைவர்களால் எந்த ஆதாரமும் அல்லது காரணமும் அல்லது அடிப்படையும் அல்லது முகாந்தரமும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டார். ஆக, அவர்கள் பொய் சாட்சிகளை உருவாக்கினர்கள்.
2) சதிசெய்தல்:
தானியேலின் எதிரிகள் அவருடைய சக ஊழியர்களாகவும், ராஜாவின் அரசவையில் வேலை செய்பவர்களாகவும் இருந்தனர். கர்த்தராகிய இயேசுவும் தம்முடைய சொந்த ஜனங்களுக்குள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட யூத தேசத்திற்கு வந்தார். இருப்பினும், அவர்களின் மதத் தலைவர்கள் கர்த்தராகிய இயேசுவுக்கு எதிராக சதி செய்தனர்.
3) கண்டனத்திற்கு ஆளாக்குதல்:
தானியேல் நிரபராதியாக இருந்தாலும் தரியு ராஜாவால் கண்டனம் செய்யப்பட்டான். தானியேல் தேவனுக்கு எதிராகவும் பாவம் செய்யவில்லை அல்லது ராஜாவுக்கு எதிராகவும் கலகம் செய்யவில்லை. பொந்தியு பிலாத்தும் இயேசு குற்றமற்றவர் என்பதை அறிந்தும் கண்டனம் செய்தான் (லூக்கா 23:13-15).
4) நுழைவாயில் அடைக்கப்படல்:
சிங்கத்தின் குகை ஒரு கல் வைத்து மூடப்பட்டது. அதாவது தானியேல் தப்பித்துவிடக்கூடாது அல்லது யாராவது அவனைக் காப்பாற்றி விடக்கூடாது என்பதை உறுதிசெய்வதற்காகத்தான்.
5) சீல் வைத்து பாதுகாக்கப்படல்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரம் திருடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த கல்லறை மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது மற்றும் பாதுகாப்பிற்கு காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
6) சிங்கங்கள் தீங்கு இழைக்காமல் இருத்தல்:
சிங்கங்களின் சக்தியும் மூர்க்கமும் அவனுக்கு தீங்கு விளைவிக்கவில்லை. எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிந்தும் அவனுக்கு தீங்கு செய்யவில்லை. "என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்" (சங்கீதம் 16:10).
7) கல் புரட்டப்படல்:
இரண்டு சந்தர்ப்பங்களிலும் கல் சீல் வைக்கப்பட்டது. தரியு கல்லை எடுத்துப்போட கட்டளையிட்டான். தேவன் கிறிஸ்துவை மரணத்திலிருந்து எழுப்பினார், ஆம் கல்லறையும் வெறுமையானது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையாகும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் நான் மகிழ்ச்சியடைகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்