சாண்டா ட்ரிண்டேட் எவாஞ்சலிகல் சபையின் நிறுவனர் பிரான்சிஸ்கோ பராஜா, பெய்ரா நகரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார், 40 நாட்கள் இயேசுவைப் போல் உபவாசம் இருக்க நினைத்தார், உணவு, தண்ணீர் இல்லாமல், உடல் எடை அளவு குறைந்து எழுந்து நிற்ககூட முடியாத அளவுக்கு உடல்நலம் கெட்டது; அவருக்கு திரவ உணவுகள் மற்றும் மருந்து மாத்திரைகள் என கொடுத்தும் 25வது நாள் இறந்தார் (பிபிசி நியூஸ் பிப்ரவரி 16, 2023). ஒரு இளம் போதகர் தனது சொந்த பலத்தில் இதைச் செய்தார், ஒருவேளை தன்னைப் பின்பற்றுபவர்களைக் கவர நினைத்திருப்பார் போலும், ஆனால் பரிதாபமாக இறந்தார்.
உபவாச ஒழுங்கு:
கிறிஸ்தவ வாழ்க்கைக்கு, உபவாசம் ஒரு நல்ல ஒழுக்கம். பரிசேயர் போன்ற யூத மதத் தலைவர்கள் வாரம் இருமுறை உபவாசம் இருந்தனர் (லூக்கா 18:12). அது ஒரு சடங்காக அல்லது பாரம்பரியமாக மாறினபோது, தேவன் அதை நிராகரித்தார் (ஏசாயா 58). நினிவே நகரில் யோனா பிரசங்கித்தபோது, நகர மக்கள் அனைவரும் மனந்திரும்பி, மூன்று நாட்கள் உபவாசம் இருந்து தங்கள் மனந்திரும்புதலை வெளிப்படுத்தினர் (யோனா 3:5). மோசே, எஸ்தர், நெகேமியா, தானியேல் உட்பட மற்றும் பலர் வேதாகமத்தில் உபவாசம் இருந்து ஜெபித்ததை காணலாம். அரசியலில் சிலர் அநீதி அல்லது அடக்குமுறைக்கு எதிராக உண்ணாவிரதத்தை பயன்படுத்துகின்றனர்.
முட்டாள்தனமான உபவாசம்:
சில தலைவர்கள் தங்கள் ஆவிக்குரிய வைராக்கியத்தை காட்ட உபவாசத்தை அறிவிக்கிறார்கள்; அதற்கு ஒரு நல்ல உதாரணம் இஸ்ரவேலின் முதல் ராஜா, சவுலின் எதிரிகளுக்கு எதிராக தேவன் பழிவாங்க வேண்டும் என்று முழு தேசத்திற்கும் உபவாசத்தை அறிவித்தான். "நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்கவேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ, அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேனும் போஜனம்பண்ணாதிருந்தார்கள்" (1 சாமுவேல் 14:24). அதுவும் இந்த உபவாசத்தை இராணுவம் பெலிஸ்தியர்களுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோது சவுல் அறிவித்திருந்தான் (1 சாமுவேல் 14:20). வெறும் வயிற்றில் ஒரு படை எப்படி போராட முடியும்?
உபவாசித்தல்:
உபவாசத்தை தேவ பக்தி போலவோ அல்லது சூப்பர் ஹீரோ போல மக்கள் முன்பு காட்ட கூடாது என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக் கொடுத்தார். உபவாசம் அந்தரங்கமாக செய்யப்பட வேண்டும், தம்பட்டம் அடித்து கொண்டு அல்ல; ஏனென்றால் அந்தரங்கத்தில் கேட்கும் தேவன் வெளிப்படையாக பலன் அளிப்பார் (மத்தேயு 6:17,18).
ஊக்கம் பெற உபவாசம்:
சில மதங்கள் உபவாசத்தை ஒரு தவமாக முக்கியத்துவம் கொடுக்கின்றன. அத்தகைய தவத்தை மேற்கொள்பவர்கள் மாய சக்தியைப் பெறுகிறார்கள் மற்றும் மற்றவர்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது கையாளவோ முடியும். உபவாசத்தின் மூலம் அதிகாரத்தைப் பெறுவதற்கான வழிமுறையாக வேதாகமம் கற்பிக்கவில்லை.
உண்மையான உபவாசம்:
உபவாசம் மனந்திரும்புவதையும், மனத்தாழ்மையை வெளிப்படுத்துவதையும், தேவ சித்தத்திற்கு அடிபணிவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உண்மையான உபவாசம் என்பது "அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்" (ஏசாயா 58:6-7) என கர்த்தருடைய வாய் சொல்லிற்று என்று ஏசாயா கூறுகிறார்.
என் உபவாசம் கர்த்தருக்கு உகந்ததா அல்லது மற்றவர்கள் பார்த்து மெச்சிக் கொள்ளவா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்