கலாச்சாரமா அல்லது வேதமா?
கலாச்சாரம் தெய்வீகமானது என்றும் பாரம்பரியங்கள் தான் உயர்ந்தது என்றும் நம்பும் சிலர் உள்ளனர். அதை மீறவோ அல்லது மாற்றவோ இயலாத ஒன்று. பல நேரங்களில், கலாச்சார மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் எல்லாம் நோக்கம் கொண்டவைகள் அல்ல. வேதாகமத்தில், மலைப் பிரசங்கத்தில், கர்த்தராகிய இயேசு பல சந்தர்ப்பங்களில் 'இது சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் ... ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்' என்பதை காண முடியும் (மத்தேயு 5:21-28). நாம் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளும்போதும், அதன் மதிப்புகளைப் பின்பற்றும்போதும், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைவிட வேதப்பூர்வமான கோட்பாடுகள் உயர்ந்தவை, பரிசுத்தமானவை என்பதை நிரூபிக்க அழைக்கப்படுகிறோம்.
ஒரு மிஷனரி தம்பதியினர் பெண்களை மதிக்காத கிராமப்புற சூழலில் சேவை செய்தனர். மனைவிகள் அடிமைகள் அல்லது உடைமைகள் போல நடத்தப்பட்டனர். அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை; குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மகள்கள் எந்த சொத்தும் வைத்திருக்க முடியாது. மேலும் தம்பதிகள் வெளியே செல்லும்போது, கணவன் முன்னே நடப்பதும், மனைவி சில மீட்டர்கள் இடைவெளியில் பின்தொடர்வதும் வழக்கம். ஆனால் மிஷனரி தம்பதிகள் ஒன்றாக இணைந்து நடந்தனர். இது அங்குள்ள வீடுகளில் பெரிய விவாதப் பொருளாகவே மாறியது. பின்பதாக அந்த காரணமே அவர்களுக்கு நற்செய்தியைப் பகிர வாய்ப்பளித்தது.
1) கலாச்சாரம் சீரழிந்தது:
எல்லா கலாச்சாரங்களும் பாவத்தால் சிதைக்கப்படுகின்றன. எந்தவொரு கலாச்சாரமும் தெய்வீகமானது அல்லது பரிசுத்தமானது அல்லது முழுமையானது அல்லது பரபூரணமானது என்று சொல்ல முடியாது. கலாச்சாரத்தை தெய்வீகமாக்குவது ஆபத்தானது. எந்த கலாச்சாரத்திலும் பெண்களை தாழ்வாக நடத்துவது என்பது பாவமே.
2) சிருஷ்டிப்பு:
மனிதர்கள் தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் அதில் பெண்களும் அடங்குமல்லவா!
3) குடும்பம்:
மனிதனை தேவன் சிருஷ்டித்தவுடன் ஆதாம் தனிமையாக இருப்பது போல் உணர்ந்தார்; ஏவாளை ஆதாமின் துணையாகப் படைத்தார் (ஆதியாகமம் 2:18). ஆக இருவருமே ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறார்கள். ஆனால் மனைவியை மாத்திரமே கணவனைச் சார்ந்திருக்கச் செய்யும் சூழலை உருவாக்குவது, திருமண பந்தத்தை தரம் தாழ்த்துவதாகும் (கனமற்ற செயலாகும்).
4) கிறிஸ்து அனைவருக்காகவும் மரித்தார்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்காகவும் தானே மரித்தார். ஆக இரட்சிப்பு மற்றும் நித்திய ஜீவனைப் பெறுவதற்கு பெண்கள் சமமான உரிமையாளர்கள்.
5) விடுதலை:
நற்செய்தி மதிப்புகள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மற்றும் கலாச்சாரத்திற்கு புறம்பான மதிப்புகளுக்கு அடிமையாக உள்ள அனைவருக்கும் விடுதலையைக் கொண்டு வருகின்றது. சுவிசேஷம் மக்களின் இதயங்களில் ஒரு வெளிச்சத்தைக் கொண்டுவரும்போது, தனிநபர்கள் மாற்றப்படுவார்கள் (2 கொரிந்தியர் 4:6). அதற்கு பின்னர் அவர்கள் கலாச்சாரத்தையே மாற்றுபவர்கள் ஆகிறார்கள்.
கலாச்சாரம் பரிசுத்த வேதாகமத்தை மதிப்பிடவோ அல்லது நியாயந்தீர்க்கவோ முடியாது. நிச்சயமாக, வேதாகமம் கலாச்சாரத்தை ஆராய்கிறது, தீர்ப்பளிக்கிறது, மீட்டெடுக்கிறது மற்றும் மாற்றத்தை உருவாக்குகிறது.
நான் வேதத்தை பின்பற்றுகிறேனா அல்லது கலாச்சாரத்தை பின்பற்றுகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran